பெண் என்றாலே போராட்டம் என்றாகிவிட்டது. தங்கள் அன்றாட வாழ்க்கைக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் போராட வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கிறார்கள். சாதாரண பெண்களுக்கே இந்த நிலை என்றால், எச்ஐவி பாதித்த பெண்களின் நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ரத்த உறவுகள்கூட ஒதுக்கி வைத்துவிடுகிற அவர்களை, இந்தச் சமூகம் பொதுவான வாழ்க்கை வாழ அனுமதிப்பதே இல்லை. வாழ்வின் விளிம்பில் தவிக்கும் அதுபோன்ற பெண்களைத் தேடி பயணப்படுகிறார் செல்வராணி. திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் எச்ஐவி பாதித்த பெண்களுக்கு மறு வாழ்வு கொடுப்பதற்காகத் ‘தாய்க்குத் தாய்’ என்ற கொள்கை கொண்ட அகிம்சா என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார்.
இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, சாவுக்குத் துணிந்துவிட்ட 25 பெண்களை மீட்டு, அவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ததில் செல்வராணியின் பங்கு அதிகம். அந்தப் பெண்கள் இன்று தங்கள் கவலையை மறந்து, மற்றவர்களைப் போல் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களின் குழந்தைகள் உயர் கல்வி படிக்கின்றனர்.
“எதற்கெடுத்தாலும் பெண்கள் அடுத்தவரின் துணையை நம்பியே வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நம் சமூகத்தில், ஒரு பெண் கணவனை இழந்து தனியாக வாழ்வதே பெரும்பாடு. எச்ஐவி பாதித்த பெண்களுக்கு அவர்களது மரணம் குறித்த பயமே பெரும் முதல் எதிரி. சமூகம், ரத்த உறவுகள் இரண்டாவது எதிரிகள். நான் மீட்ட 25 பெண்களும் கணவர் மூலம் எச்ஐவி தொற்று வந்தவர்கள். கணவரைக் காப்பாற்ற முடியாமல் பறிக்கொடுத்தவர்கள். கடைசியில் குழந்தைகளையும், தங்களையும் காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தவர்கள்” என்று சொல்லும் செல்வராணி, முதலில் அந்தப் பெண்களின் தேவையில்லாத பயங்களைப் போக்குவது அவசியம் என்கிறார்.
ஆலோசனையும் வேலைவாய்ப்பும்
எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட பெண்கள், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு வகைகளைச் சாப்பிட அகிம்சா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உதவுகிறார்கள். மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. அதன் பிறகு வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தி, தகுதிக்கு ஏற்றாற்போல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார்கள். எச்ஐவி பாதித்த பெண்கள் மூலம், எச்ஐவி மற்றும் காச நோய் பாதித்த மற்றப் பெண்களுக்கு ஆலோசனை வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார்கள்.
“அகிம்சா அமைப்பு மூலம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 900 எச்ஐவி பாதித்த பெண்களைச் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளித்து அவர்களை வாழ வைத்துள்ளோம். அவர்களுக்கு அரவணைப்பு தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து பராமரித்தும் வருகிறோம்” என்கிறார் செல்வராணி.