பெண் இன்று

பஞ்சர் கடை லதா

ஆர்.செளந்தர்

தேனி-பெரியகுளம் சாலையில் இருக்கும் அந்த புளியமரத்தின் அடியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. தன் கார் சக்கரத்துக்குக் காற்று நிரப்பக் காத்திருக்கிறார் ஒருவர். இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தைக் கழற்றி, சரிசெய்து கொண்டிருக்கிறார் லதா. கடந்த 20 ஆண்டுகளாகத் தனி ஆளாக பஞ்சர் கடை நடத்திவரும் லதா, கடின உழைப்புக்கு ஆண், பெண் வேறுபாடில்லை என்பதை நிரூபித்துவருகிறார்.

“நாலு பொண்ணு, ரெண்டு பையன்னு பெரிய குடும்பம் எங்களோடது. நான் நாலாவது பொண்ணு. 25 வருஷத்துக்கு முன்னாடி தேனி மாவட்டத்துலேயே முதன் முதலா வல்கனைசிங் பஞ்சர் கடை நடத்தினது எங்க அப்பாதான்” என்று பெருமையுடன் சொல்லும் லதா, தன் தந்தை மதிய உணவுக்குச் செல்லும் நேரங்களில் பஞ்சர் ஒட்டக் கற்றுக் கொண்டார். லதாவின் அக்காக்களின் திருமணத்துக்காக அவருடைய தந்தை வாங்கின கடனால் கடை பறிபோனது. குடும்பத்தைக் காப்பாற்ற லதாவின் அப்பா, தன் சொந்தக் கடையிலேயே சம்பளத்துக்கு வேலை பார்த்தார். இதற்கிடையில் ஜவுளி வியாபாரி காமராஜ் என்பவருடன் லதாவுக்கு திருமணம் நடந்தது.

“நகை எதுவும் போடாமதான் என் வீட்டுக்காரர் என்னைக் கட்டிக்கிட்டார். குடும்பம் ஒரு பக்கம் ஓடிக்கிட்டு இருந்தாலும் சொந்தமா பஞ்சர் கடை போடணும்னு என் மனசுல ஒரு எண்ணம். என் ஆசையை என் வீட்டுக்காரர்கிட்டே சொன்னேன். ஒரு பொண்ணா இந்தத் தொழிலில் ஜெயிக்கமுடியுமான்னு யோசிச்சவர், அப்புறம் சரின்னு சொன்னார்” என்று சொல்லும் லதா, அதன் பிறகுதான் புளியமரத்தடியில் வல்கனைசிங் கடையைத் தொடங்கினார்.

கனவு நனவானது

“லாரி, பஸ், கார், மோட்டார்சைக்கிள்னு எதுவா இருந்தாலும் நானே தனி ஆளா டயரைக் கழற்றி பஞ்சர் ஒட்டி, மாட்டிடுவேன். ஆட்டோ, கார் ஓட்டத் தெரியும். இருபது வருஷமா ஒரே இடத்துல பஞ்சர் கடை நடத்துறதால புளியமரத்து பஞ்சர் கடைன்னு சொல்லுவாங்க” என்கிறார் லதா.

இவரிடம் ஐ.டி.ஐ மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்காக அவ்வப்போது வந்து வாகனங்களில் டயரைக் கழற்றுவது, வல்கனைசிங் முறையில் பஞ்சர் ஒட்டுவது, அளவுகோல் வைத்து காற்று அடிப்பது போன்றவற்றுக்குப் பயிற்சி பெற்று செல்கின்றனர். புதிதாக பஞ்சர் கடை வைக்க நினைக்கும் இளைஞர்களும் லதாவிடம் ஆலோசனை பெற்றுச் செல்கின்றனர்.

“நான் சொந்தமா கடை வைத்ததும் என் அப்பாவை கடையின் உரிமையாளரா உட்கார வைத்து அழகு பார்த்தேன்” என்று தன் கனவு நிறைவேறியதைக் குறிப்பிடுகிறார்.

கடை வருமானத்தின் மூலம் மூத்தமகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துவிட்டார். இளையமகள் 11-ம் வகுப்பு படிக்கிறார். லதாவின் கணவர் ஜவுளி வியாபாரத்தை விட்டுவிட்டு சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வருகிறார்.

“கஷ்டம்னு நினைச்சா எல்லாமே கஷ்டம்தான். ஆனா முயற்சி செய்தா எதை வேணும்னாலும் சாதிக்கலாம்” என்று சொல்லும் லதாவின் வார்த்தைகளில் சாதித்துவிட்ட பூரிப்பு.

படம்: ஆர். சௌந்தர்

SCROLL FOR NEXT