பெண் இன்று

உணர்வுகளின் வெளிப்பாடு

என்.கெளரி

‘அவள் கடவுள் அல்ல, அவள் தெய்வீகமானவள் அல்ல, அவள் ஒரு சக மனுஷி. அவள் சுவாசிக்கட்டும், அவள் வளரட்டும், அவள் வாழட்டும், அவள் தன்னை வெளிப்படுத்தட்டும்’- பெண்கள் தினத்தை ஓவியர்களுடன் கொண்டாடுவதற்காக ‘மணிகர்ணிகா’ என்னும் தொடர் ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறது அம்ரோசியா ஆர்ட் கேலரி. சென்னை, நாக்பூர், புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர்களின் ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. அவை பெண்களின் வாழ்க்கையையும், உணர்வுகளையும், வலிமையையும் பிரதிபலிக்கின்றன.

இயற்கையும் பெண்மையும்

சென்னையைச் சேர்ந்த ஹேமா, ஹேமலதா, வேணி, புதுச்சேரியைச் சேர்ந்த காயத்ரி, கயல்விழி, தலாதேவி ஆகிய ஆறு ஓவியர்கள் தங்களுடைய நாற்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்களைக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது கிராஃபிக் டிசைனிங், ஆசிரியர் என வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், தங்களுடைய கலையார்வத்தையும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கின்றனர். “இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் எங்களுடைய பெரும்பான்மையான ஓவியங்கள் பெண்மையை இயற்கையோடு இணைந்துப் பேசியிருக்கின்றன. அதேசமயம், பெண்மையைப் பற்றி மட்டுமல்லாமல் எங்களது தனிப்பட்ட கலையார்வத்தை வெளிப்படுத்தும் ஓவியங்களையும் இந்தக் கண்காட்சியில் வைத்திருக்கிறோம். ஒரு பெண் கலைஞராக இருக்கும்போது, தன் கலையை அடுத்த தலைமுறைக்கு எளிதாகக் கொண்டுசெல்ல முடிகிறது. அந்த வகையில், எங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தித் தந்திருக்கிறது” என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர் கயல்விழி.

ஓவியங்களின் புதுமை

பொதுவாக, கண்ணாடி ஓவியங்களைக் கைவினைக் கலையாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், இந்தக் கண்காட்சியில் ஹேமா, கண்ணாடி ஓவியங்களைப் புதுமையான வகையில் பயன்படுத்தியிருந்தார். பெண்களின் சுதந்திரத்தை வலியுறுத்தும் விதமாகப் பறவையையும் பெண்ணையும் கருவாக வைத்துத் தன் ஓவியத்தை வரைந்திருக்கிறார் ஹேமா. அதே மாதிரி, ‘கனவு உலகம்’என்ற தலைப்பில் தலாதேவி வரைந்திருந்த ஓவியம், நீர் வாழ் உயிரினங்களையும் பெண்களையும் வலிமையானவர்களாகப் பிரதிபலித்திருந்தது. உழைக்கும் மகளிரைக் கொண்டாடும் விதமாக காயத்ரியின் ஓவியமும், விடியலை நோக்கிய பயணமாய் ஹேமலதாவின் ஓவியங்களும் இருந்தன.

‘நிறங்களின் சாறு’ என்ற வேணியின் ஓவியமும், ‘கல்வியின் தாகம்’ என்ற கயல்விழியின் ஓவியமும் வெவ்வேறு விதங்களில் பெண்களின் மனநிலையையும், ஏக்கத்தையும் வெளிப்படுத்தின.

மணிகர்ணிகா ஓவியக் கண்காட்சியின் தொடர்ச்சியாக, மார்ச் 29-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 4-ம் தேதி வரை ஓவியர் கமலா ரவிக்குமாரின் கண்காட்சி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT