‘யாரோ ஒருவருடைய ரசனையில் உருவாகும் நகைகளை அணிவதைவிட, நம் ரசனையில் உருவாகும் நகைகளை அணிந்துகொள்வது இன்னும் சிறப்பாக இருக்குமே’ என்றுதான் நகைத் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தார் கோவையைச் சேர்ந்த கலாமணி. இப்போது, கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு கைவினை நகைத் தயாரிப்பைக் கற்றுக்கொடுத்த ஆசிரியராகிவிட்டார்.
“பொழுதுபோக்காகவே நகைத் தயாரிப்பில் ஈடுபட்டேன். ஒரு கட்டத்தில், நகைத் தயாரிப்பில் இருக்கும் நிறைய வாய்ப்புகளைத் தெரிந்துகொண்டேன். அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கலாம் என்று நினைத்து வகுப்புகளைத் தொடங்கினேன்” என்கிறார் கலாமணி.
விதம் விதமான நகைகள்
பேப்பர் நகைகள், டெரக்கோட்டா நகைகள், சணல் நகைகள் என பல வகையான நகைகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் தயாரித்துவருகிறார். நகைகள் மட்டுமல்லாமல் அலங்காரத் தட்டுகள், பழங்களாலான பூங்கொத்துகள், சாக்லேட் பூங்கொத்துகள் போன்ற புதுமையான, கலைநயமிக்க பொருட்களும் இவர் கைவண்ணத்தில் மிளிர்கின்றன.
இந்த நகைகளை செய்வதோடு மட்டுமல்லாமல், டெரக்கோட்டா நகைகள் செய்வதற்குத் தேவையான பொருட்களையும் விற்பனை செய்துவருகிறார். இவரிடம் நகைத் தயாரிப்பைக் கற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் அது வசதியாக இருக்கிறது.
மனத் திருப்தி
கோவையில் ‘வி.கே.என். ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் வகுப்புகளை நடத்திவரும் கலாமணி, திருவனந்தபுரத்திலும் நகைத் தயாரிப்புக்கான பயிலரங்குகளை நடத்தியிருக்கிறார். இதுவரை, பன்னிரெண்டு பயிலரங்குகளுக்கு மேல் நடத்தியிருக்கிறார்.
“எனக்கான நகைகளை செய்துகொண்டபோது மகிழ்ச்சியாக மட்டுமே இருந்தது. மற்றவர்களுக்காக செய்ய ஆரம்பித்தபோது, புதுமையான சவாலாக இருந்தது. மற்றவர்களுக்கு நகைத் தயாரிப்பை கற்றுக்கொடுக்கும்போது, பெரும் மனத் திருப்தியை உணர முடிகிறது” என்கிறார்.
குறைந்த முதலீடு
கடந்த இரண்டு ஆண்டுகளாக டெரக்கோட்டா நகைகளை உருவாக்கி வரும் கலாமணி, இப்போது பட்டு நூல் நகைகள், விதைகளாலான நகைகளை அணிவது டிரெண்ட் ஆகியிருப்பதாகச் சொல்கிறார்.
குறைந்த முதலீட்டில் இல்லத்தரசிகள் நகைத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று ஆலோசனை தரும் இவர், சணல் நகைகள் தயாரிக்க ஆயிரம் ரூபாய், டெரக்கோட்டா நகைகளுக்கு நான்காயிரம் ரூபாய், ஃபேஷன் நகைகள் செய்ய ஐயாயிரம் ரூபாய் முதலீடு இருந்தால் போதும் என்கிறார்.
படங்கள்: ஜெ. மனோகரன்