இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு குறைவேயில்லை. இந்த வன்முறைச் சம்பவங்களில் பல உலகை அதிர்ச்சியடையச் செய்பவை. ஊடகங்கள் பெருகிவழியும் தற்போதைய சூழலில் வன்முறைச் சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. மனித கடத்தல் காரணமாக எத்தனையோ பெண்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டுள்ளது.
அப்படிப் பாதிக்கப்பட்ட சுனிதா கிருஷ்ணன் என்னும் பெண்ணின் சொந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கில் உருவாக்கப்பட்ட திரைப்படம், ‘நா பங்காரு தல்லி’. முதலில் 2013-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது.
பருவ வயது மகள் கடத்தப்பட்டதால் ஒரு தந்தைக்கும் ஏற்படும் மன அவஸ்தைகளும், கடத்தப்பட்ட பெண் எதிர்கொள்ளும் சித்திரவதைகளுமே இந்தப் படம். மலையாளத்தில் இப்பட ‘எண்ட’ என்னும் பெயரில் வெளியானது. பாதிக்கப்பட்ட பெண்களின் துயரங்களும் போராட்டங்களும் வெளியுலகுக்குத் தெரியவரும்போது அது தொடர்பான விழிப்புணர்வு உருவாகக்கூடும் என்ற எண்ணத்திலேயே சுனிதா கிருஷ்ணன் இந்தப் படத்தை உருவாக்க விரும்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் ராஜேஷ் டச்ரிவரிடம் பேசியபோது அவர் விருப்பத்துடன் படத்தை இயக்கச் சம்மதித்துள்ளார். மக்களிடம் திரட்டிய பணத்தின் மூலம் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என்ற தவறான புரிதலுடன்தான் பெரும்பாலான பெண்கள் சமூகத்தில் வளைய வருகின்றனர். ஆனால் யதார்த்தம் அப்படியல்ல. யாருக்கும் எதுவும் எப்போது வேண்டுமானலும் நடக்கலாம் என்ற சூழலே இங்கு நிலவுகிறது. இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். எந்தச் சூழலையும் சமாளிக்கும் துணிவும், மன தைரியமும் பெண்களுக்கு அவசியம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும் சமயத்தில் அதை எதிர்கொள்வதற்கான மனோநிலை வாய்க்க வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் மக்களுக்குப் பழக்கப்பட்ட திரைப்படம் என்னும் ஊடகம் வழியே தெரிவிக்கும்போது அவர்களை எளிதாகச் சென்றடையும் என்ற நம்பிக்கையிலேயே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள். முழுப் பாதுகாப்பான சூழல் என ஒன்று பெண்களுக்கு இல்லை என்னும் யதார்த்தம் சுடத் தான் செய்கிறது.