பெண் இன்று

எதற்கு இத்தனை ‘மன்னிப்பு’?

செய்திப்பிரிவு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த கல்லூரி விடுதியில் மின்னஞ்சல்களைப் பார்க்க ஒதுக்கப்பட்டிருந்த கணினியில் இணையத்தை மேய்ந்துகொண்டிருந்தேன். அப்போது எனது சீனியர் மாணவி ஒருவர் உள்ளே நுழைந்து, என் அருகில் உட்கார்ந்தார். ‘சாரி' என்று சொல்லி வேகமாக ‘லாக் அவுட்' செய்தேன்.

அவர் என்னிடம், “தேவையின்றி எதற்கு ‘சாரி' கேட்கிறாய்?” என்று கேட்டார். அவர் அப்படிச் சொன்ன பிறகுதான், என்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் அடிக்கடி எல்லாரிடமும் சாரி கேட்டுக்கொண்டிருக்கிறேன். எதற்காக சாரி கேட்கிறேன் என்ற கேள்விகள் என்னுள் எழுந்தன.

எத்தனை ‘சாரி'?

பெரும்பாலும் நான் மன்னிப்புக் கோரும் ‘குற்றங்கள்’ அனைத்தும் உண்மையிலேயே குற்றங்கள் அல்ல என்பது தெரிந்ததுதான். குளியல் அறைக்கு விரைந்து போய் கதவைத் திறக்கும்போது, இன்னொருவர் எதிரே வந்தால் அவரிடம் ‘சாரி' கேட்டிருக்கிறேன். நிறைவேற்ற வேண்டிய வேலையை முடிப்பதற்கு ஒருவரிடம் அனுமதி கோரும்போது ‘சாரி' கேட்டிருக்கிறேன். ஒருவரிடம் ஒரு சந்தேகத்துக்குத் தெளிவு பெறுவதற்கு ‘சாரி' கேட்டிருக்கிறேன்.

எனது சீனியர் என்னிடம் "எதற்கு சாரி?" என்று கேட்ட கேள்விக்குப் பிறகுதான், அல்பமான விஷயங்களுக்கு மன்னிப்புக் கோருவதை நான் நிறுத்தினேன்.

எது உரிமை?

தற்போது நான் ஆசிரியையாகப் பணிபுரியும் கல்லூரியில் மாணவர்களைவிட, மாணவிகள் அதிகம் ‘சாரி' கேட்பதைப் பார்க்கிறேன். என்னிடம் ஏற்கனவே அப்பாயின்ட்மெண்ட் கேட்ட மாணவிகள், குறித்த நேரத்தில் சந்திப்பதற்குக்கூட ‘சாரி மேடம்!' என்று பேச்சை ஆரம்பிப்பதைப் பார்க்கிறேன்.

பெரும்பாலான பெண்கள் எல்லாரிடமும் ‘அடக்க’மாகக் காட்டிக்கொள்வதற்கு மோசமாக மெனக்கெடுகின்றனர். ஒரு பொது இடம் என்பது ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் உரியதுதான். ஒரு இடத்தில் ஒரு பெண் இருப்பது, அவளுக்கு அளிக்கப்பட்ட சலுகை அல்ல. அது அவளுடைய உரிமை.

- அழகு தெய்வானை,
கோவை

SCROLL FOR NEXT