பெண் இன்று

கர்ப்பிணிகள் கவனத்துக்கு

செய்திப்பிரிவு

மார்கழிக் குளிர் ஒவ்வொரு நாளையும் புத்துணர்வாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இதம் தேவைப்படும் இந்தக் குளிர்காலம் பிரசவத்துக்குக் காத்திருக்கும் தாய்மார்களுக்கு சில சவால்களையும் கொடுக்கும். குளிர்காலத்தில் கர்ப்பவதிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில வற்றைப் பார்க்கலாம்.

நிறைவான நீர்ச்சத்து

கோடைக்காலத்தில் இயற்கையாகவே அதிகமாகத் தண்ணீர் அருந்துவோம். ஆனால் குளிர்காலத்தில் தண்ணீரைக் குறைவாகவே குடிப்போம். பிரசவத்துக்குக் காத்திருக்கும் தாய்மார்கள் குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க அதிக நீர் அருந்தவேண்டும். தலைவலி, உலர் தோல் பிரச்சினைகளையும் தண்ணீர் குடிப்பதன் மூலம் தவிர்க்கலாம். குறைபிரசவத்தையும் இது தவிர்க்கும்.

கூட்டம் வேண்டாமே

இன்ப்ளூயன்சா, ரூபல்லா, தாளம்மை.... நோய்கள் அதிகம் தொற்றக்கூடிய காலம் குளிர்காலம். இதுபோன்ற தொற்றுகள் கருவின் வளர்ச்சியைப் பாதிக்கும். அதனால் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கவும்.

தொற்றுகளை விரட்டுங்கள்

குழந்தை கருவில் இருக்கும்போது ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களாலும் சளிக்கோழை உற்பத்தி அதிகரிப்பாலும் நிறைய தோல் தொற்றுகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க கூடுமானவரை அறைகளுக்குள்ளேயே இருப்பது நல்லது. இருக்கும் வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பது அவசியம். வீட்டு விலங்குகளுடன் தொடர்பு வேண்டாம். சீரான இடைவெளிகளில் கைகளைக் கழுவுவதும் தொற்று நோய்களிடம் இருந்து பாதுகாக்கும்.

இதமே நலம்

கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சளி பாதிப்போ, ப்ளூ காய்ச்சலோ ஏற்பட்டால் மூளைக்குச் சரியான அளவு ரத்தம் செல்லாது. அத்துடன் பீனோலிக் அமின் சுரப்பும் அதிகமாகும். இந்த திரவம் கருப்பைக்குள் தொப்புள்கொடி வழியாக நுழைந்தால் குறைவளர்ச்சியும், குழந்தைக்கு உதட்டுப் பிளவும் ஏற்படும். பிறவிசார்ந்த இதயநோயும் ஏற்படலாம். அதனால் கவனம் தேவை.

முறையான உணவூட்டம்

ஆரோக்கியம் கூடி சரிவிகித உணவை நேரம் தவறாமல் எடுத்துக்கொள்வதன் மூலம் நோய்களை விலக்கி வைக்க முடியும். குளிர்காலத்தில் பழங்களும் காய்கறிகளும் அபரிமிதமாகக் கிடைக்கும். கீரை உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். கரு பலப்படுவதற்கான போலிக் அமிலத்தைத் தாய்மார்கள் சாப்பிடும் காய்கறிகளும் பழங்களும் வழங்கும். காய்கறி, பழங்களை நன்கு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும்.

உடற்பயிற்சி அவசியம்

சின்னச் சின்ன நடைகள் அவசியம். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந் திருப்பதைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி தாயின் உடலுக்கு மட்டுமின்றி, லகுவான பிரசவத்துக்கும் உதவும். கடின வேலைகளைத் தவிர்க்க வேண்டும். கடின உடற்பயிற்சிகளும் வேண்டாம். வெளியே செல்லாமல் வீட்டிலேயே நடைபயிற்சி செய்வது நல்லது.

- சங்கர், சென்னை.

SCROLL FOR NEXT