தென்னிந்தியாவின் சித்ர வீணை, கோட்டுவாத்தியம் போல் வடக்கில் பிரபலமான வாத்தியம் விசித்திர வீணை. ஹிந்துஸ்தானி இசைக்கு ஒத்திசைவான வாத்தியமான இதில் புகழ்பெற்று விளங்கும் பெண் கலைஞர் ராதிகா உம்தேகர் புத்கர். இவருடைய தந்தை பண்டிட் ஸ்ரீராம் உம்தேகரே இவருக்கு முதல் குருவாக விளங்கினார்.
பொதுவாக நம்முடைய வீணையில் இருக்கும் ஸ்வர ஸ்தானங்கள் விசித்திர வீணையில் இருக்காது. அதனால் இதில் ஸ்வரங்களைத் துல்லியமாக வாசிப்பதற்கு நிறைய பயிற்சி வேண்டும். அதனாலேயே இந்த வாத்தியத்தைக் கையிலெடுப் பதற்குப் பலரும் தயங்குவார்கள்.
ஆனால், ராதிகா அந்த வாத்தியத்தைச் சிறு வயதிலிருந்தே ஆழமாக நேசித்தார். அந்த ஈடுபாடுதான் அவரை, விசித்திர வீணையின் தோற்றத்தை எளிமையாக மாற்றவைத்தது.
பாரம்பரியமான விசித்திர வீணை இரண்டு குடங்களுடன் ஐந்தடி நீளத்தில் இருக்கும். இதன் நீள, அகலத்தைக் குறைத்து அதே சமயத்தில் அதன் ஒலிக்கும் திறனை அதிகரிக்கும் வகையில் ராதிகா மாற்றியமைத்தார். இந்த மாற்றத்தால் இந்த வாத்தியத்தை வாசிப்பதில் இளைய தலைமுறையும் ஆர்வம் காட்டிவருகிறது.
இந்த வாத்தியத்தைக் கொண்டு மும்பையின் முக்கிய சபாக்களில் சில நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்தியிருக்கிறார் ராதிகா. சிதார் வாசிப்பிலும் சிறந்து விளங்கும் ராதிகா, தான் ஒரு மேடைக் கலைஞர் என்பதைத் தாண்டி ஆசிரியராக அறியப்பட வேண்டும் என்பதையே பெரிதும் விரும்புகிறார்.
இந்திய அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் வழங்கும் அரிய இசைக் கருவிகளைக் கற்றுக்கொள்வதற்கான உதவித் தொகையையும் உஸ்தாத் அலாவுதீன் சங்கீத் அகாடமியிடமிருந்து துர்லப் சங்கீத் சைலி ஸ்காலர்ஷிப்பையும் இவர் பெற்றிருக்கிறார்.
ராதிகா தன் இசை குருவான பண்டிட் விஸ்வ மோகன் பட்டின் சாகித்தியங்களை மேற்கத்திய இசை வடிவத்தில் அமைத்து மேற்கத்திய நாடுகளின் இசைப் பள்ளிகளில் அதைப் பாடமாகவே நடத்திய அனுபவமும் இவருக்கு உண்டு. அந்த நிகழ்ச்சிகள், மரபு மாறாத நவீனத்துடன் விளங்கியவை.
இருபதாம் நூற்றாண்டில் குரல் மற்றும் வாத்தியங்களில் ஹிந்துஸ்தானி இசை அடைந்திருக்கும் வளர்ச்சி, மாற்றம் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவுசெய்திருக்கிறார்.
வீணாபாணி என்னும் தன்னுடைய இசைப் பள்ளியின் வழியாக எண்ணற்ற குழந்தைகளுக்கு விசித்திர வீணை, வாய்ப்பாட்டு, சிதார், ஸ்லைட் கிடார் போன்ற வாத்தியங்களை வாசிப்பதற்குச் சொல்லிக் கொடுத்து இசை சேவை செய்துவருகிறார்.