பெண் இன்று

பெண் எழுத்து - ஒரு புத்தகம் பல கதைகள்

செய்திப்பிரிவு

ஒரு புத்தகம் பல கதைகள்

புத்தகத்தைப் பற்றி ஒரு கதை இருக்கும். சில சமயம் புத்தகம் எழுதியவரைப் பற்றியும் ஒரு கதை இருக்கும். ஆனால் ‘நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்’ என்ற புத்தகத்தைப் பொறுத்தவரை பல கதைகள் உண்டு. இந்தப் புத்தகத்தில் நாட்டுப்புறக் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் லைலாதேவி, பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். கிட்டத்தட்ட 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படித்து பட்டம் பெற்றவர். அவரது எம்.ஃபில் பட்ட ஆய்வு நூல்தான் இது.

பெண்களின் முடிவெடுக்கும் திறனைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்த நூல். அதற்குத் துணை நின்றிருக்கின்றன விருதுநகர் மாவட்ட நாட்டுப்புறக் கதைகள். எந்தச் சூழ்நிலையையும் பெண்கள் எப்படிச் சமாளித்து, ஆபத்தைக்கூட வெற்றிக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைக் கதைகளின் வாயிலாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.

புத்தகம்:நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்

ஆசிரியர்:லைலாதேவி

விலை:ரூ.60

வெளியீடு:அருவி மாலை, F6, பிளாக் 1, க்வீன்ஸ் பார்க்,

எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் ரோடு, சாலிகிராமம், சென்னை-600093. அலைபேசி: 9444778532.

வலி நிறைந்த பதிவு

பொதுவாகப் பண்டங்களை விற்பனை செய்வதை நாம் அறிந்திருப்போம். ஆனால் மனிதர்களைப் பண்டங்கள்போல் விற்பனை செய்யும் ஒரு தொழில் உலகம் முழுக்கப் பரவியிருப்பது தெரியுமா? பெண்களையும் குழந்தைகளையும் பல்வேறு காரணங்களுக்காக விற்பனை செய்கிற மனித வர்த்தகத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது, ‘பெண் என்னும் பொருள்’.

ஆங்கிலத்தில் Human Trafficking என்று சொல்லப்படுகிற மனித கடத்தலைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்நூல். கடத்தல் என்றால் அடியாட்களை வைத்து கடத்துகிற ரகமல்ல இது. விற்பனை செய்யப்படுகிறவர்களிடம் தந்திரமாகப் பேசி, அவர்களை மூளைச் சலவை செய்து அவர்களை வேறொரு நாட்டுக்கோ, இடத்துக்கோ அப்புறப்படுத்துவது. இந்த நூலின் ஆசிரியர் லிடியா காச்சோ, மெக்ஸிகோ நாட்டுப் பத்திரிகையாளர். ஒவ்வொரு நாட்டுக்கும் பயணித்து, களப் பணிகள் மேற்கொண்டு அவற்றையே எழுத்தாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான மனிதர்கள், வெவ்வேறு விதமான கதைகள். இந்த மனித வணிகத்துக்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் கட்டமைப்பையும் லிடியா விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

புத்தகம்:பெண் என்னும் பொருள்

ஆசிரியர்:லிடியா காச்சோ

தமிழில்:விஜயசாய்

விலை:ரூ.350

வெளியீடு:விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜி நகர், 3வது தெரு,

உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் - 641015.

தொலைபேசி: 0422-2576772/9443468758.

SCROLL FOR NEXT