பெண் இன்று

போகிற போக்கில்: ‘கலைக்காக வேலையைத் துறந்தேன்’

க்ருஷ்ணி

பி.டெக் முடித்துவிட்டு வேலைக்குச் சென்றவர், இன்று வீட்டில் இருந்தபடியே ஃபேஷன் நகைகள் செய்துவருகிறார். கைநிறைய வருமானம் தந்த வேலையை விட்டுவிட்டு இப்படிக் கைவினைக் கலைகளில் ஈடுபடுவது நல்லதா என்று கேட்கிறவர்களுக்குப் பதில் வைத்திருக்கிறார் பிரியாங்கா வேலவன்.

“தொடர்ச்சியாக ஒரே வேலையைச் செய்வது மனச்சோர்வை ஏற்படுத்திவிட்டது. அதனால்தான் நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையைத் துறந்தேன். ஒவ்வொரு நாளும் புதுப்புது டிசைன்களில் ஃபேஷன் நகைகளைச் செய்வது எனக்கு மன அமைதியைத் தருவதுடன் என் கற்பனைத் திறமையை வெளிப்படுத்தவும் உதவுகிறது” என்று பிரியங்கா பெருமிதத்துடன் கைவினைக் கலையின் பெருமையைப் பறைசாற்றுகிறார்.

பிரியங்காவின் சொந்த ஊர் பரமத்திவேலூர் பக்கம் இருக்கும் கள்ளிப்பாளையம். தற்போது திருமணம் முடிந்து நாமக்கல்லில் வசிக்கும் இவர், ஒரே நாளில் ஃபேஷன் நகைகளைச் செய்யக் கற்றுக்கொண்டிருக்கிறார். முதன் முதலில் குந்தன் நகைகளைச் செய்தவர், பிறகு மணிகளை வைத்துச் செய்யப்படும் நகைகளுக்கு மாறினார். க்வில்லிங் நகைகள், பெயின்ட்டிங், ஆடைகளில் பலவித வேலைப்பாடுகள் எனத் தன் மனதுக்கு விருப்பமான கலைகளில் ஈடுபட்டுவருகிறார்.

தனக்குத் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஃபேஷன் நகைகளை விற்கிறார். நகைகளின் நேர்த்தியும் அழகும் நகைகளின் விற்பனையை அதிகரிக்க உதவியதாகச் சொல்கிறார் பிரியங்கா.

“வாடிக்கையாளர்கள் விரும்பிய டிசைனில் நகை செய்து கொடுத்துவிட்டால் போதும். அவர்களின் மனநிறைவே விற்பனையை அதிகரித்துவிடும்” என்று சொல்லும் பிரியங்கா, நகைகள் செய்யத் தேவையான மூலப்பொருட்களை ஆன் லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குகிறார். அதில் கிடைக்காத பொருட்களை ஈரோட்டிலும் சென்னையிலும் வாங்குகிறார்.

“ஒவ்வொரு நகைக்குப் பின்னாலயும் ஒவ்வொரு கதை இருக்கு. இந்த நகைகளை ரசிச்சு ரசிச்சு செய்யும்போது மனதில் இருக்கிற பதற்றம் தானாகக் குறையும். மனதுக்கு நிம்மதியும் நிறைவும் கிடைக்கும்” என்கிற பிரியங்கா, விரும்புகிறவர்களுக்குக் கைவினைக் கலை பயிற்சியளிப்பதாகச் சொல்கிறார்.

SCROLL FOR NEXT