பெண் இன்று

அவன் பெயர் உமர்

உமர் ரஷித்

பொதுப் போக்குவரத்தில் ஆண்களும் பெண்களும் வழக்கமாக வகிக்கும் பாத்திரங்கள் மாறும்போது என்ன நிகழ்கிறது?

இன்னும் இருள் விலகாத அந்த விடியலில் தெருவிளக்குகளின் மங்கலான ஆரஞ்சு ஒளியிலும் அவள் முகத்தின் மேடுபள்ளங்கள் துல்லியமாகத் தெரிந்தன. அவள் அழகாக, சற்றுப் பூசிய உடலுடன் இருந்தாள். அவள் வெளிர் நிறத்தில் சல்வார் கமீஸ் அணிந்திருந்தாள். இந்திய முஸ்லிம்கள் வெளியே வரும்போது, துப்பட்டாவைக் கொண்டு தலையை மூடுவது போன்று அவளும் தனது துப்பட்டாவைச் சுற்றியிருந்தாள்.

பிரதான சாலைக்கு வந்தபிறகு, அங்கிருந்த சிறிய தேநீர் கடையைச் சுட்டிக்காட்டினாள். என்னை பிக்-அப் செய்ய வருவதற்கு முன்பு அங்கேதான் காபி குடித்ததாகச் சொன்னாள். “தூங்கி வழிந்துகொண்டே கார் ஓட்டுவதை நான் விரும்பவில்லை” என்றாள். எனது முகவரியைக் கண்டுபிடிக்க இயலாத நிலையில் பயணம் தாமதப்பட்டிருந்தது. என்னைக் காத்திருக்க வைத்ததற்காக அவள் மன்னிப்பு கோரும் தொனியில் பேசினாள்.

ஒரு இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால், நான் கோபத்தில் மவுனமாக இருப்பது போலக் காட்டிக் கொள்ள விரும்பினேன். ஆனால் குட்டித் தூக்கத்துக்கான என் முயற்சி அத்தனை பலனளிக்கவில்லை. இன்னும் இருள் கலையாத விடியலில் ஒரு பெண் என்னை விமான நிலையத்துக்கு காரில் அழைத்துச் செல்கிறாள். அத்துடன் என்னுடன் உரையாடவும் விரும்புகிறாள். இந்த நாட்டில் எத்தனை பெண்களுக்கு இத்தகைய வாய்ப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது?

இல்லை… மும்பை போன்ற பெருநகரத்தில்கூட இன்னும் சாத்தியப்படவில்லை. சில நாட்களுக்கு முன்னர் புதுடெல்லியில் நடந்ததை ஒப்பிடும்போது இந்த விஷயம் அசாதாரணமாகவே தோன்றுகிறது.

கால் டாக்ஸி ஓட்டுநரால் அந்தக் காரில் பயணம் செய்த பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதே நகரத்தில் ஓடும் பேருந்தில் ஒரு பெண் வல்லுறவுக்கு ஆளான சம்பவமும் என் நினைவுக்கு வந்தது. எங்கே ஒரு பெண் பாதுகாப்பாக உணரமுடியும்? அதிஉயர் தொழில்நுட்பமான ஜிபிஎஸ் வசதிகொண்ட போக்குவரத்தைக்கூட பெண்களுக்குப் பாதுகாப்பானதாகச் சொல்லிவிடமுடியாது.

மாறும் பாத்திரங்கள்

நான் விமானநிலையத்துக்குப் போவதற்காக டாக்ஸி சேவையை அழைத்தபோது, ஒரு பெண் ஓட்டுநரை எதிர்பார்க்கவில்லை. இது அனைத்து மகளிர் டாக்ஸி சேவையும் அல்ல. பொதுப் போக்குவரத்தில் வழக்கமாக ஆண்களும் பெண்களும் வகிக்கும் பாத்திரங்கள் மாறும்போது என்ன நிகழ்கிறது என்பதை யோசித்தபடி சவுகரியமாக இந்த வண்டியில் சென்றுகொண்டிருக்கிறேன். நான் டிரைவராகவும் அந்தப் பெண் ஒரு பயணியாகவும் இருந்திருந்தால் இங்கு எப்படிப்பட்டச் சூழல் இருந்திருக்கும். இப்போது இந்தப் பெண் இருப்பதைப் போல கலகலப்பாக இருந்திருப்பாளா? ஓட்டுநரின் இருக்கையில் அவள் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறாளா? அவள் பிடித்திருக்கும் ஸ்டீயரிங் வீல்தான் அந்த வித்தியாசத்துக்குக் காரணமா? எனக்குத் தெரியாது.

அந்தப் பெண்ணைத் தோண்டித் துருவும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. எனினும் அவள் எப்போது வாடகைக் கார் ஓட்டத்தொடங்கினாள் என்று கேட்டேன். “என் கணவன் என்னைக் கைவிட்டதிலிருந்து” என்றாள்.

“நான் பிராமணப் பெண். என் கணவன் முஸ்லிம். அதுவே என் குடும்பத்துக்குக் கெட்டபெயர் ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தது. என் பெற்றோரைப் பொறுத்தவரை நான் இறந்தவள். உணவுக்கு என்ன செய்வது? பிழைப்பதற்கு ஏதாவது செய்யவேண்டாமா?” என்றாள்.

அவள் தன் சொந்த ஊரான பரோடாவில் இருந்து ஒரு முஸ்லிம் பையனுடன் ஓடிவந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் மும்பையில் ஒரு மெக்கானிக்காக வேலை செய்தவன். இரு சமயத்தவருக்கு இடையிலான காதல் உறவுகள், ஓடிப்போவது, பெற்றோர்களின் எதிர்ப்பு எல்லாம் எனக்குப் பரிச்சயமான விஷயம்தான். இந்துத்வா குழுக்களால் பரப்பப்படும் ‘லவ் ஜிகாத்’ கதையின் பின்னணியில் இந்தப் பெண்ணின் கதை என்னை மேலும் கேட்கத் தூண்டியது. அந்தப் பெண்ணின் இயற்பெயர் ‘அழகு’ என்ற அர்த்தம் வரும் சமஸ்கிருத வார்த்தை. இஸ்லாமுக்கு மாறிய பிறகு அவளுக்கு இடப்பட்ட அராபியப் பெயரின் அர்த்தம் ‘வானம்’.

அவளது கதை திடீரென்று நின்றுபோனது. அவள் பேச்சை நிறுத்திவிட்டாள். ஒரு அந்நியனிடம் அதிகம் பேசிவிட்டோம் என்ற உணர்வாக இருக்கலாம். டாக்ஸி கிளம்பிய பிறகு அப்போதுதான் அத்தனை மவுனம் தொடங்கியது. நான் என் மொபைலைப் பார்த்து நேரத்தைத் தெரிந்துகொள்ள முயன்றபோது என்னிடம், “பத்திரிகைச் செய்தியாளரா?” என்று கேட்டாள்.

நான் அவளிடம் உண்மையைச் சொல்லவில்லை. உண்மையைத் தெரிந்துகொண்டால் இனிமேல் பேசவே மாட்டாள் என்று எனக்குத் தெரியும். அதனால் ஒரு அர்த்தமில்லாத பதிலைச் சொன்னேன்.

“எனது உறவினர்கள் இன்னும் மும்பையில் இருக்கிறார்கள். நான் சொன்னதைக் கேட்டு நீங்கள் எதையாவது எழுதிவைத்தால், என்னைப் பற்றி தவறாக எண்ணுவார்கள்” என்றாள்.

எட்டு ஆண்டுகளுக்கு முன் அவளை அவள் கணவன் விவாகரத்து செய்தான். ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை வைத்துக்கொண்டதோடு, வெறும் 3 ஆயிரம் ரூபாயை ஜீவனாம்சமாகவும் தந்தான்.

மும்பையில் வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினமாக இருந்ததால், டாக்ஸி ஓட்ட ஆரம்பித்தாள். மும்பை புறநகர் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஆறு பெண்களுடன் அவள் தன் இருப்பிடத்தைப் பகிர்கிறாள். அவர்களும் கணவனால் கைவிடப்பட்டவர்கள்.

“நான் குரானை நன்கு கற்றறிந்தவள். ஆனால் முஸ்லிம்களிடம் மோசமான நடைமுறைகளும் உள்ளன” என்று சொல்லிவிட்டுச் சிரித்த அவள், தன் கணவன் தற்போது மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தகவலைக் கூறினாள்.

தடக்…தடக்கென்று தலையை அவள் பேசுவதற்காகத் திருப்பும்போது எனக்குப் பீதியாக இருந்தது. “காதலுக்காக மதம் மாறும் ஒரு இந்துப் பெண்ணைப் பயன்படுத்திவிட்டு இப்படிக் கைவிடுவதை நீங்கள் மோசமாக நினைக்கவில்லையா…” என்று கேட்டாள். எந்த மதமாக இருந்தாலும் எவராக இருந்தாலும் கைவிடப்படுவது சங்கடமானதுதான் என்ற என் பதிலைச் சொன்னேன்.

அவள் தன் முன்னாள் கணவன் மீது நான் அனுதாபம் கொள்வதாக நினைத்திருக்கலாம். சிறிது நேரம் என்னை வெறித்துப் பார்த்த அவள், என் மதத்தைச் சரியாகவே அடையாளம் கண்டுகொண்டாள். “நீங்கள் இப்படித்தான் பேசுவீர்கள். இப்படியான ஒருவருடன்தான் நான் பல வருடங்களைக் கழித்திருக்கிறேன்.” என்றாள்.

பிரிவுக்குப் பிறகு

“ நான் ரொம்ப நாளாகத் தனிமையில்தான் இருக்கிறேன். ஆனால் நான் வாழ்வைக் கொண்டாடுகிறேன். நாங்கள் தோழிகளாக வெளியே போய்ச் சாப்பிடுவோம். நள்ளிரவில் பரபரப்பு இல்லாத சாலையில் வண்டியை ஓட்டுவதில் சில சாகசங்களையும், பரிசோதனைகளையும் செய்துபார்ப்போம். பிக்னிக் போவோம். ஆகும் செலவை நாங்கள் பகிர்ந்து கொள்வோம். யாருக்கும் யாரும் சுமையாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்”

அவளது காதல் கதை இந்தியாவில் சமயங்களைத் தாண்டி நடக்கும் எல்லாக் காதல் கதைகளையும் போன்றதுதான். காதலை மொபைல் போன்கள் ஆக்கிரமிக்காதபோது ரகசியமாக நடந்த காதல் அவர்களுடையது.

வீட்டின் எதிர்ப்பைப் பொறுக்க முடியாமல் அவர்கள் சொந்த ஊரிலிருந்து ஓடிவந்தனர். திருமணம் செய்தனர். அவள் இஸ்லாமுக்கு மாறினாள். “அப்போது எனக்கு எதுவுமே தெரியாது. நான் அவன் சொன்னபடி நடந்தேன். காதல் என்பது குருட்டுத்தனமானது என்று சொல்வார்கள். எத்தனை உண்மை” என்றாள்.

நான் அவளுடைய முன்னாள் கணவனின் பெயரைக் கேட்டேன். உமர் என்றாள். ஆனால் அந்தப் பெயரைக் கேட்டவுடன் எனக்குச் சங்கடமாகிவிட்டது. அவளது அராபியப் பெயர் மீது அவளுக்கு மிகுந்த பிரியம் என்றும், ஆனால் அது தனது பழைய காதல் வாழ்க்கையை ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறினாள்.

அவளது துயரக்காதல் கதையை வலதுசாரி இந்துத்வா குழுக்கள் ‘லவ் ஜிகாத்’ என்ற வரையறைக்குள் கொண்டுவருமோ என்றும் அச்சப்பட்டேன். தனிப்பட்ட நபர்களின் தேர்வுதான் உறவுகள் மற்றும் திருமண பந்தங்கள் என்பதை இந்த அமைப்புகள் கருத்தில் கொள்வதில்லை.

டாக்ஸி, விமான நிலையத்துக்கு வந்து நின்றது. நான் என் கார்கோ மாடல் கால்சட்டைப் பைக்குள் கையைவிட்டுப் பணத்தை எடுத்தேன். எனது கோலத்தை உற்றுப்பார்த்து விட்டு விமானப் பயணத்துக்குத் தயாராகவே இல்லை நீங்கள் என்று கிண்டல் செய்து சிரித்தாள். நான் புன்னகைத்தபடி பணத்தைக் கொடுத்தேன். நான் என் பெட்டியை இழுத்து வெளியே வைத்து கதவை மூடப்போனபோது என் பெயரைக் கேட்டாள்.

தப்பிக்க முடியாது என்று தெரிந்தபிறகு எனது பெயரை விழுங்கியபடியே சொன்னேன். இரைச்சலாக இருந்ததால் என் பெயரைத் திரும்பவும் கேட்டாள். என் பெயரைச் சொன்னதும் அதிர்ச்சியானாள். பின்னர் புன்னகைத்தபடி தலையை ஆட்டிக்கொண்டாள், தன் அதிர்ச்சியை மறைக்க. இவையனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தன. அவளது கவனத்தை ஸ்டீயரிங் வீலில் திருப்பி, கூட்டத்துக்குள் கலக்க வேகமாக முயன்றாள். அதற்கு சற்றுமுன்னர் என்னைக் கட்டக் கடைசியாக ஒருமுறை உற்றுப்பார்த்தாள்.

© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: ஷங்கர்

SCROLL FOR NEXT