பெண் இன்று

கவலை இனி இல்லை

செய்திப்பிரிவு

வாய் நிறைய புன்னகையுடன் வரவேற்கிற லஷ்மி, மழலை மொழியில் பேசுகிறார். குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தால் ஏற்பட்ட தாக்கம் இது என்று விளக்கம் சொல்லும் லஷ்மி, ஃபேஷன் நகைகள், ஓவியப் பயிற்சி, கையெழுத்துப் பயிற்சி ஆகியவற்றைச் சொல்லித் தரும் ஆசிரியராக இருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் இவரது வீடு குழந்தைகளாலும் குதூகலத்தாலும் நிரம்பி வழிகிறது.

“இப்படி தினமும் குழந்தைகளோடு இருப்பதால் எனக்குக் கவலை என்பதே தெரியாது” என்கிறார். திருமணமாகி 6 வருடங்களாகியும் குழந்தையில்லையே என்ற இவரது கவலையை, கைவினைக் கலைகள்தான் போக்கியிருக்கின்றன. தாங்க முடியாத மன அழுத்தத்தில் ஒவ்வொரு நாளையுமே போராட்டத்துடன் கழித்திருக்கிறார். அந்த நாட்களின் சுமையை கலைகளின் தோளில்தான் லஷ்மி இறக்கிவைத்திருக்கிறார்.

ஏதாவது ஒரு விஷயத்தில் மனதை ஈடுபடுத்தினால் கவலைகள் மறையும் என நினைத்தவர், கைவினைக் கலைகளுக்காகப் பயிற்சியெடுத்துக் கொண்டார். சில நாட்களில் கலைகளே இவருக்கு ஆக்கும் சக்தியானது. குழந்தை பிறந்த பிறகு, கைவினைக் கலைகளின் மீது ஈடுபாடும் அதிகரித்தது. அதுதான் லஷ்மியை இன்று கைவினைக் கலை பயிற்றுநராக உயர்த்தியிருக்கிறது.

லஷ்மிக்கு ஓவியங்கள் மீது அலாதி ஆர்வம் என்பதைப் பறைசாற்றுகின்றன அவரது வீட்டுச் சுவர் முழுக்க விரிந்திருக்கும் ஓவியங்கள். கிளாஸ் பெயின்ட்டிங், பேப்பர் பெயின்ட்டிங், பேப்பர் க்வில்லிங், கிளே பெயின்ட்டிங் என, தான் செய்கிற ஒவ்வொன்றிலும் வித்தியாசத்தைப் புகுத்துகிறார். விதவிதமான ஃபேஷன் நகைகளைச் செய்து அவற்றை நண்பர்களுக்குப் பரிசளிப்பது, விழாக்களில் அன்பளிப்பாக வழங்குவது இவரது வழக்கம்.

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தன் கலைபொருட்களை ஆவலுடன் வாங்குவது மகிழ்ச்சி தருகிறது என்கிற லஷ்மி, தான் வரைந்த ஓவியங்களை விற்பனை செய்வதற்காக ஒரு பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய இருப்பதாகச் சொல்கிறார்.

SCROLL FOR NEXT