பெண் இன்று

கண்ணீரும் புன்னகையும்: திருநங்கை எக்ஸ்

ஷங்கர்

பாகிஸ்தான் அரசு திருநங்கையரை அங்கீகரிக்கும் முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. பாஸ்போர்ட்டில் இடம்பெறும் பாலினம் தொடர்பான பதிவில் திருநங்கையரை எக்ஸ் (x) என்று குறிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. எக்ஸ் குறியீடு கொண்ட முதல் பாஸ்போர்ட்டை பாகிஸ்தானின் திருநங்கை உரிமைகள் செயல்பாட்டாளரான பர்ஸானா ரியாஸ் பெற்றுள்ளார். தன்பாலின உறவாளர்களுக்குத் தடை போடும் பாகிஸ்தானின் இந்த அறிவிப்பை உலக மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

சாரிட்டி ஆக்ஷன் பாகிஸ்தான் அமைப்பின் தலைவரான பர்ஸானா ரியாஸ், திருநங்கைகளுக்குச் சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைப்பதற்கான போராட்டத்தில் இது முதல் வெற்றி என்று கூறியுள்ளார். திருநங்கைகள் வெளியுலகைப் பார்ப்பதற்கு இதுவரை இருந்துவந்த சிக்கல்களை இந்த அங்கீகாரம் நீக்கியுள்ளது என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஐந்து லட்சம் திருநங்கைகள் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அடித்துக் கொல்லப்பட்ட தலித் பெண்

பெண்கள் உறங்கும்போது அவர்களின் பின்னிய கூந்தலை வெட்டிக்கொண்டு போய் சூனியம் வைத்ததாகக் கூறி ஆக்ராவைச் சேர்ந்த தலித் பெண் அடித்துக் கொல்லப்பட்டார். முட்னை கிராமத்தில் சமீப காலமாகப் பெண்களின் கூந்தலை வெட்டி எடுத்துப்போய் செய்வினை செய்வதாக வதந்திகள் உலவின.

இதைத் தொடர்ந்து ஆதிக்க சாதியினர் வசித்த பகுதியில் கூந்தலை வெட்டியதாகக் கூறப்பட்ட 65 வயது தலித் பெண் மான்தேவி, அங்குள்ள மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இதில் கொலை வழக்கோடு தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த சில வாரங்களில் மட்டுமே பெண்களின் முடி திருடப்படுவதாகப் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிப் பெண்களுக்கு விமானத்தில் வசதி

விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு அசவுகரியமான நடு இருக்கைகளிலிருந்து விடுதலை அளித்துள்ளது.

விமானத்தில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு நடு இருக்கை கிடைத்தால் சுதந்திரமாக உடலை அசைக்க முடியாத நிலை இருக்கும்; அத்துடன் பக்கவாட்டுப் பயணிகளால் சில நேரங்களில் அவஸ்தையும் நேரிடும். அதைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு.

இணையவழிப் பயணத்தைத் திட்டமிடுபவர்கள் தங்கள் இருக்கையைத் தேர்ந்தெடுத்திருக்காவிட்டாலும், தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு மேற்கூறப்பட்ட முன்னுரிமையில் விலக்கில்லை. இது மட்டுமின்றித் தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் பைகளை எடுத்துச் செல்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் விஸ்தாரா முன்னணியில் இருப்பதாக உமன் பிளையர் சர்வீஸ் தெரிவிக்கிறது.

திருநங்கைகள் அணிய வேண்டிய உடை?

திருநங்கைகள் ஆண்களைப் போல கால்சட்டையும் மேல்சட்டையும் அணிய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே திருநங்கை விழிப்புணர்வு முகாமில் சமீபத்தில் பேசியுள்ளார்.

அதே முகாமில் திருநங்கை உரிமைகள் பாதுகாப்பு மசோதாவை ஆதரிப்பதாகவும் முரணாகக் கூறி வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

திருநங்கைகளுக்கு உதவுவதற்கு முன்பு, ராம்தாஸ் அதவாலேயைப் போன்றவர்கள் தங்களது பிரச்சினைகளையும் தங்களையும் புரிந்துகொள்வது அவசியம் என்று திருநங்கை உரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT