திடீர் மழையால் குழந்தைகளைத் தாக்கும் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து எப்படிப் பாதுகாப்பது?
- பாரதி, சென்னை.
எஸ். ரகுநந்தன், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்.
தற்போது அடிக்கடி மழை பெய்வதால் காற்று மூலமாகக் கிருமிகள் பரவும். இதனால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும்கூட இருமல், சளி, சுவாசக் கோளாறு ஏற்படலாம். அதனால் குழந்தைகளைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அடர்த்தியான பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். காதுகளை மறைக்கும் குல்லா, கை, கால்களுக்கு கிளவுஸ் போன்றவற்றை அணிவிக்கலாம்.
தண்ணீரைக் காய்ச்சிக் கொடுக்க வேண்டும். பழைய உணவைத் தவிர்த்துவிட்டு அவ்வப்போது சமைத்தவற்றையே சாப்பிடக் கொடுங்கள். சாப்பிடுகிற அளவுக்குச் சூடாக இருப்பதும் நல்லது.
மழை நாட்களில் குளிர்ச்சியான உணவைத் தவிர்க்க வேண்டும். வெளியில் விற்பனை செய்யப்படும் உணவு, பழச்சாறு, குளிர்பானம் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். ஒருவேளை குழந்தைகளுக்கு இருமல், சளி போன்றவை இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
அதேபோல் குழந்தைக்குக் காய்ச்சல் விட்டு விட்டோ அல்லது தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தாலோ மருத்துவரிடம் அழைத்துச் செல்வது அவசியம். காய்ச்சல் அதிகமாக இருந்தால் சுத்தமான பருத்தித் துணியைத் தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைத்துவிடவேண்டும். இதனால் உடல் சூடு குறைந்து காய்ச்சல் குறைய வாய்ப்புள்ளது.
சுவாசக் கோளாறு இருக்கிறவர்கள் அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். ஓரளவு வெயில் வந்த பிறகு நடைப்பயிற்சி செய்யலாம்.
எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தை பிறந்ததிலிருந்து கடந்த ஒரு வருடமாக தாம்பத்திய உறவில் என் கணவருக்கு ஈடுபாடு இல்லை. அவரிடம் கேட்டபோது, தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை என்கிறார். என்னிடம் அன்பாகத்தான் இருக்கிறார். அவரது இந்த திடீர் மாற்றம் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என் குழப்பம் தீர ஆலோசனை சொல்லுங்கள்.
மரியா
டி.காமராஜ், தலைவர், இந்தியன் அசோசியேஷன் ஆஃப் செக்ஸாலஜி.
ஆண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. பொதுவாகப் பிரசவகால இடைவெளி ஆண்களிடம் ஒரு தனித்த சூழ்நிலையை உருவாக்கிவிடும். இதனால் மீண்டும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை அவர்கள் தவிர்க்க நினைக்கலாம். அதேபோல் மனைவி, கணவரிடையே ஏற்படும் குடும்பச் சிக்கல் காரணமாகவும் இதுபோல் நடந்துகொள்ளலாம்.
ஒருவேளை அவருக்கு மலட்டுத்தன்மை உண்டாகியிருந்தால்கூட தாம்பத்தியத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கக் கூடும். வெளியே சொல்ல முடியாத காரணத்தால்கூட நாட்களை நகர்த்த அவர் நினைத்திருக்கலாம். மலட்டுத்தன்மை என்பது சரிசெய்துவிடக் கூடிய பிரச்சனைதான். நீங்களும் உங்கள் கணவரும் மனம்விட்டுப் பேசி, பிரச்சினைக் தீர்வு காணுங்கள். அவருக்கு மலட்டுத்தன்மை இருக்கும்பட்சத்தில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
உங்கள் கேள்வி என்ன? ‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in |