எனக்கு 20 வயது. என் உடல் எடை சரியாகத்தான் உள்ளது. ஆனால் எனக்குத் தொப்பை இருக்கிறது. தொப்பை தெரிவதால் எல்லோரும் கிண்டல் செய்கின்றனர். சுடிதார் அணிந்தால் தொப்பை தனியாகத் தெரிகிறது. தொப்பையைக் குறைக்க வழிசொல்லுங்கள்.-சங்கரி.
பத்மா ஸ்ரீதரன், உடற்பயிற்சி நிபுணர், நெல்லை.
உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்குத்தான் தொப்பை இருக்கும் என்று நினைப்பது தவறு. உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கும்கூடத் தொப்பை வரலாம். இரவு அதிக நேரம் விழித்திருப்பதும் காலையில் அதிக நேரம் தூங்குவதும் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. துரித உணவு, எண்ணெயில் பொரித்த உணவு போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட்டாலும் தொப்பை வரலாம். இதுபோன்ற உணவைச் சாப்பிட்டுவிட்டு உடனடியாக உறங்கச் செல்வது, எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பது போன்றவற்றாலும் தொப்பை ஏற்படலாம். வெளியே சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கு அடுத்த நாள் காலை, வெறும் வயிற்றில் இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் உடலில் உள்ள கெட்டவை வெளியேறிவிடும்.
தொப்பையைப் குறைப்பதற்கென்றே பல உடற்பயிற்சி முறைகள் உள்ளன. உடற்பயிற்சி நிலையங்களில் உள்ள இயந்திரங்களால் மட்டுமே தொப்பையைக் குறைத்துவிட முடியாது. உடல் அளவிலும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போது சீராக உடல் எடையும் தொப்பையும் குறையும்.
வீட்டு வேலைகளைச் செய்தாலே தொப்பை போன்ற உடல் சார்ந்த பிரச்சினைகள் சரியாகிவிடும். குனிந்து, நிமிர்ந்து செய்யும் வேலைகளைச் செய்தால் வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையில்லாத கொழுப்பு கரைந்து தொப்பை சரியாக வாய்ப்புள்ளது. அப்படியும் சரியாகவில்லையென்றால் சூரிய நமஸ்காரம் போன்ற ஆசனங்களைக் கற்றுக்கொண்டு தினமும் காலை, மாலை இரு வேளையும் செய்யலாம்.
அதேபோல் நேராக நின்றுகொண்டு காலின் கட்டை விரலைக் குனிந்து தொடுவது, கையில் பந்தை வைத்துக்கொண்டு அதை உடலின் பின் பக்கத்திலிருந்து முன்பக்கமாகக் கொண்டுவர முயல வேண்டும். உடலை இப்படி வளைப்பதால் வயிற்றுப் பகுதி நன்றாக வளைந்து தேவையில்லாத உடல் சதை குறையும்.
கால்கள் இரண்டையும் சேர்த்துவைத்து நீட்டி உட்கார்ந்துகொண்டு கைகளை நேராக மேல் பக்கமாக நீட்டி, முதுகுத்தண்டு வளையாமல் அப்படியே கைகளைக் கொண்டு காலின் கட்டை விரலைத் தொட முயல வேண்டும். படுத்துக்கொண்டு கைகளை இடுப்பின் கீழ் பகுதியில் வைத்துவிட்டுக் கால்களை மட்டும் நேராக நிறுத்த வேண்டும். அப்படியே ஒரு ஐந்து நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு கால்களை முகம் இருக்கும் பக்கமாகக் கொஞ்சமாகச் சாய்த்து ஐந்து நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
இறுதியாகக் கால்களை முழுவதுமாகத் தலைக்குப் பின் பக்கமாகக் கொண்டு வர முயல வேண்டும். இந்தப் பயிற்சிகளை உடற்பயிற்சி கூடத்தில் முறையாக பயிற்சியெடுத்த பிறகுதான் வீட்டில் செய்துபார்க்க வேண்டும். இல்லையென்றால் தவறுதலாக உடற்பயிற்சி செய்து சுளுக்கு, தசைப் பிடிப்பு போன்றவை ஏற்படக் கூடும், கவனம் தேவை.
நான் கர்ப்பமாக இருந்த சமயத்தில் எனக்கு முகப் பருக்கள் அதீத முறையில் வரத் தொடங்கின. மருத்துவர்கள் பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும் என்று கூறினர். தற்போது எனக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பின்னரும் முகப் பருக்கள் சரியாவில்லை. பல சிகிச்சைகள் எடுத்த பின்னரும் இன்றளவும் அவை சரி ஆகவில்லை. தோல் மருத்துவர் எனக்கு லேசர் சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளார். லேசர் செய்து கொள்ளலாமா? எனக்கு அறிவுரை வழங்கவும்.-பிரியதர்சினி.
மருத்துவர் சி.ஜானகி,சென்னை மருத்துவக் கல்லூரி,ஓய்வுபெற்ற தோல் நோய் பேராசிரியர்.
பிரசவ காலத்தில் ஹார்மோன்களின் மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக சிலருக்கு முகப் பருக்கள் உண்டாகும். பொதுவாக முகப் பருக்களால் வரும் தழும்புக்குதான் லேசர் சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். முகப் பருக்களுக்கு எடுத்துக் கொள்ளமாட்டார்கள். முகப் பருவுக்கு ஏற்றாற்போல் தனித்தனி சிகிச்சை உள்ளது. புதிதாக உருவாகும் முகப் பருக்களுக்கென்று தனி மருந்துகள் உள்ளன. அதேபோல் நீண்ட காலமாக உள்ள முகப் பருக்களுக்கு ஏற்றாற்போல் மருந்துகள் உள்ளன. உங்களுடைய முகப் பருவின் தன்மையைப் பொறுத்துதான் அதற்கான முறையான சிகிச்சைகளைக் கூற முடியும். முறையான தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
பொதுவாக முகத்தில் அதிக எண்ணெய் பசை உள்ளவர்களுக்குதான் முகப் பருக்கள் உண்டாகும். அதிக இனிப்புள்ள உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வது. எண்ணெயில் பொரித்த உணவைச் சாப்பிடுவது போன்ற காரணங்களால் சிலருக்கு முகத்தில் அதிக அளவில் எண்ணெய்ப் வடியும். இந்த எண்ணெய்ப் பசை முகத்தில் முடி வளரக்கூடிய பகுதிகளை அடைத்துக்கொள்ளும். இதனால் அந்த இடங்களில் பாக்டீரியா கிருமி முகப் பருக்களை உண்டாக்குகின்றன.
முகப் பருக்களை எடுக்க முயல்வது, அடிக்கடி முகத்தில் கை வைப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். தோல் மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் களிம்பையும் ஆன்டிபயாடிக் மருந்துகளையும்உட்க்கொண்டால் முகப் பருக்கள் மறைந்துவிடும். முகப் பருக்கள் வராமல் தடுப்பதற்கு முகத்தில் அதிக எண்ணெய்ப்பசை உள்ளவர்கள் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். அதேபோல் முக்கியமாக அதிக இனிப்புப் பண்டங்கள், சாக்லேட், எண்ணெய்யில் பொரித்த உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தால் முகப் பருக்கள் வருவது குறையும்.