நவநாகரிக உடைகளுக்கு ஏற்ற எடை குறைவான நகைகள், பாரம்பரிய உடைகளுக்கு ஏற்ற பழங்கால டிசைன் கொண்ட நகைகள் என இன்றைய பெண்களின் விருப்பம் மாறிக்கொண்டேயிருக்கிறது. பாரம்பரிய நகைகள் வாங்கினாலும் அவற்றிலும் புதுமை இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களின் ரசனைகளுக்கு ஏற்ப பாரம்பரிய நகைகளில் புதுமைகளைப் புகுத்திவருகிறார் சென்னையைச் சேர்ந்த பர்வீன் சிக்கந்தர்.
“எனது சொந்த ஊர் மதுரை. அங்கே கோயில் வீதிகளில் நிறைய கைவினைப் பொருட்கள் கிடைக்கும். ஆனால், மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் காரணமாகக் கைவினைக் கலைஞர்களின் கடைகள் மறைந்துகொண்டு வருவதைப் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மால்கள். அப்போதுதான் கைவினைக் கலைஞர்கள் செய்யும் பொருட்களை வாங்கி விற்கலாம் என முடிவெடுத்தேன்” என்று சொல்லும் பர்வீன், பாட்டிகள் பயன்படுத்தும் சுருக்குப் பைகளைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தார்.
“அவற்றை மலேசியாவில் விற்றேன். ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. சில மணி நேரத்திலேயே அனைத்துச் சுருக்குப் பைகளும் விற்றுப்போயின. கைவினைப் பொருட்களுக்கு மதிப்பு குறையவில்லை என்று புரிந்துகொண்டேன். பின்னர், இதையே ஒரு தொழிலாக செய்யலாம் என முடிவெடுத்தேன்” என்று சொல்லும் பர்வீன், வங்கியில் கடன் பெற்று ஒரு கடையைத் தொடங்கினார்.
மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிதம்பரம், தேனி போன்ற நகரங்களிலும் கேரளாவிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள் செய்யும் பொருட்களில் சிறு சிறு மாற்றங்களைச் செய்யச் சொல்லி மொத்தமாக வாங்கி, விற்கத் தொடங்கினார். கடை தொடங்கிய ஒரே ஆண்டில் வங்கிக் கடனை அடைத்துவிடும் அளவுக்கு முன்னேறினார். கணவரின் மறைவுக்குப் பிறகு தனியாளாக கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்திவருகிறார் பர்வீன்.
“ஒரே தொழிலைச் செய்வதுதான் என் வெற்றிக்குக் காரணம். இடையில் வேறெதையும் விளையாட்டுக்குக்கூட நான் செய்து பார்த்தது கிடையாது. நாம் தேர்ந்தெடுக்கும் தொழிலிலேயே புதுமை, விற்பனை செய்யும் முறை போன்றவற்றில் கவனம் செலுத்தினாலே வெற்றிபெறலாம்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் பர்வீன்.