ரூப்கன்வர் உயிரோடு எரிக்கப்பட்டார் என்ற செய்தி அன்றைய தினம் காட்டுத்தீபோல் பரவிக்கொண்டிருந்தது. தமிழகத்திலும் பெண்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பதற்றமும் நிலவியது. 1987 செப்டம்பர் 4 அன்று ராஜஸ்தான் மாநிலம் தியோராலா என்ற இடத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. ரூப்கன்வரை மணப்பெண்போல் அலங்கரித்து இறந்த அவருடைய கணவரோடு உடன்கட்டை ஏற்றி எரித்துக் கொன்ற செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்தது.
பெண்ணுக்கு எதிரான ‘சதி’
அதுவரை சதி என்பது தடை செய்யப்பட்ட ஒருகொடுமை என்றே நினைத்திருந்தோம். ஆனால் மதமென்ற பெயரில் அது மறுபடியும் உயிர்பெற்று வந்தது.
பெண்ணுரிமை என்பதை ஆணாதிக்க எதிர்ப்பாகவே புரிந்துவைத்திருந்த என் போன்றோருக்கு ஆணாதிக்கத்தின் வேராக இருக்கும் மதங்களின் செயல்பாட்டை இந்தச் சம்பவம்தான் புரியவைத்தது. அப்போது தமிழகத்தில் பல்வேறு மகளிர் அமைப்புகள் உடன்கட்டைக்கு எதிரான ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றைத் தனித்தனியாகவும் ஒன்றிணைந்தும் நடத்தின.
அது எங்கோ நடந்த ஒரு நிகழ்வுதானே என தமிழகம் சும்மா இருந்துவிடவில்லை. எந்தப் பெயரில் இயங்கினாலும் சதிக்கு எதிராகப் போராடிய தமிழகப் மகளிர் அமைப்புகள் அனைத்துமே பாராட்டுக்குரியவை.
இந்தியா முழுவதும் எழுந்த எதிர்ப்பின் காரணமாகவே ‘ராஜஸ்தான் சதி (தடுப்பு) அவசரச் சட்டம் 1987’ அந்த மாநில காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட்டனர். ஆனாலும் சதியை ஆதரித்த மதவெறிக் கூட்டமோ இதனால் ஒன்றரை கோடி ஆண்டுகள் புண்ணியம் கிடைக்கும் என்ற பொருந்தாத விளக்கத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். மனைவி இறந்தால் கணவரை உடன்கட்டையேற்றி அதே புண்ணியத்தைப் பெறத்தயாரா என பெண்ணுரிமையாளர்கள் பதிலுக்குக் கேள்வி எழுப்பினார்கள்.
எதிரி நாட்டின் படையெடுப்பால் தங்களை பாதுகாத்துக்கொள்ள ராஜபுத்திர பெண்கள் கூட்டாக நெருப்பில் வீழ்ந்து எரிந்ததாகவும் அது காலப்போக்கில் மதவழக்கமென்றும் புனிதமென்றும் மருவியது. அந்த மாநிலத்தில், ராணி சதி என்ற பெயரோடு கோயில் வழிபாடாக அது மாறி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஆச்சரியப்படுத்திய முதல்வர்
பெண் குறித்த பழமைவாதக் கண்ணோட்டமும் கருத்துக்களும் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 2-வது முறையாக ஒரு பெண் முதலமைச்சராக அரியணை ஏறியது அதிசயம்தான்.
குவாலியரை ஆண்ட மன்னரது குடும்பத்தின் வாரிசான வசுந்தரா ராஜே சிந்தியாதான் அவர். அவருடைய தாயார் ராஜமாதா சிந்தியா நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மன்னர் குடும்பம் என்பதால் அதற்குரிய செல்வாக்கோடு மக்கள் மத்தியில் பிரபல்யத்தையும் கொண்டிருந்தார். குடும்பம், அரசியல் இரண்டிலும் தன் தனித்துவத்தை இழந்துவிடாமலும், தன் சுதந்திரத்தை விட்டுத்தராமலும் பாதுகாத்துவருபவர். ஐநா சபையின் விருது பெற்றவரும்கூட.
தனிவிமானத்தில் பயணம் செய்தாலும் இரண்டாம் வகுப்புப் பெட்டியிலேறி எளிய பெண்ணாக ரயிலில் வந்திறங்கி, நடுத்தர மக்களுக்கு ஆச்சரியம் தருபவர். நடுத்தர, மேல்தட்டுப் பெண்களின் நம்பிக்கையைக் கூடுதலாகப் பெற்றவர் என்பதால் இரண்டாவது முறை வெற்றியும் ஆட்சியும் அவருக்குச் சாத்தியமானது.
பாஜகவின் ஏனைய அமைச்சர்களைப் போன்று பெண் பற்றிய பிற்போக்கான கருத்துக்களைப் பொதுவெளியில் சொல்லாதவர் இவர்.
பெண்ணுக்கு இல்லையா மரியாதை ?
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர்கள் உத்தரவிட்டபோது பகிரங்கமாக மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதியவர்.
“எனது மாநிலத் தோல்விக்காக நான் பதவி விலக வேண்டுமென்றால், மற்ற மாநிலத் தோல்வியை ஏற்று நீங்கள் ஏன் விலகவில்லை?” என்ற கேள்வியில் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்தார்.
அவரைப் பதவி விலகச் சொன்னால் நாங்கள் ராஜினாமா செய்வோம் என வசுந்தரா ஆதரவு எம்எல்ஏக்கள் பலரும் எதிர்ப்பை உயர்த்திப் பிடித்தார்கள்.
இந்தத் தள்ளுமுள்ளுகளுக்கு இடையில் வேறுவழியின்றி பதவியை ராஜினாமா செய்தவர். பெண் என்பதாலேயே தனக்குரிய மரியாதை கிடைக்கவில்லை என்று பகிரங்கமாக வருந்தினார். என்றாலும் முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் தன் இடத்தைப் போராடிப் பெற்று மீண்டும் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரானதன் மூலமாகப் பெண் என்பதற்கான மரியாதையைக் கட்சிக்குள் திரும்பப் பெற்றார்!
ஊழலுக்குத் தண்டனையில்லையா?
பல ஆயிரம் கோடி ரூபாயை அபகரித்து தப்பியோடிய ஐபிஎல் கிரிக்கெட் புகழ் லலித்மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ததாக சுஷ்மாவும் வசுந்தராவும் தெரிவித்த பிரச்சினையில் நாடாளுமன்றம் அமளிதுமளியானதை நாடறியும்.
கட்சித் தோல்விக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக் கோரிய பாஜக, ஊழல் குற்றச்சாட்டுகளின்போது வசுந்தராவின் ராஜினாமாவைக் கேட்கவில்லை. அப்படி கேட்காமல் இருந்ததற்கான அரசியல் காரணம் அவர் பெண் என்பதுதான் என்றும் சொல்லிவிட முடியாது. ஊழல் என்றால் எடியூரப்பாவிலிருந்து பங்கஜா முண்டேவரை அனைவரும் பாஜகவில் சமம்தானே!
பெண்களைவிட பசுவுக்கு முன்னுரிமை?
பெண் கல்வியில் பின்தங்கியுள்ள மாநிலங்களில் 4-வது மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. குழந்தைத் திருமணங்கள் தடையின்றி நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி ரூபா யாதவ் 3-ஆம் வகுப்பு படித்தபோதே குழந்தைத் திருமணம் ஆனவரென்று சொல்கிறார்கள்.
குழந்தைத் திருமணங்களால் ஏராளமான இளம் வயது விதவைகள் இந்த மாநிலத்தில் உள்ளனர். பிறப்பில் ஆண், பெண் விகிதாச்சாரம் குறைந்துவருவதற்கு பெண் கருக்கொலைகள் நடைபெறுவதும் காரணமாக இருக்கிறது. குடும்பம், சாதி, மதம், சமூகம் எனப் பெண்கள் மீதான தாக்குதல்களும் வன்முறைகளும் அங்கே அதிகரித்தவண்ணம் உள்ளன.
அதற்கெதிரான எந்த நடவடிக்கையையும் வசுந்தரா அரசு எடுக்கவில்லை. மாறாக பசு ஆராய்ச்சி மையம், பசு பாதுகாப்பு அமைப்பு போன்றவை அமைக்கப்படுகின்றன. பாஜகவின் அரசியல் செயல்திட்டத்தை அரசின் திட்டங்களாக மாற்றுவதில் பாஜகவின் மாநில அரசுகள் முனைப்பு காட்டுகின்றன. அதையேதான் வசுந்தராவும் பின்பற்றிவருகிறார்.
ராஜஸ்தானில் புகழ்பெற்ற கால்நடைச் சந்தை உள்ளது. அங்கே மாடு வாங்கச் சென்ற முஸ்லிம் பெரியவர் பெஹ்லுகான் அடித்தே கொல்லப்பட்டார். அவர் பால் வியாபாரி. பால் விநியோகத்துக்கு பசுதானே வாங்க முடியும்?
பசுவுக்கு ஆதரவான கொள்கையும் பெண்ணுரிமைக்கு எதிரான சித்தாந்தத்தையும் கடைப்பிடித்துவரும் பாஜகவின் ஆட்சி பெண்களின் முன்னேற்றத்துக்கு தனித் திட்டங்களையோ தனிச் சட்டத்தையோ கொண்டுவரவில்லை.
விமர்சன விஷம்
உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியை மிக இழிவாக விமர்சித்த பாஜக தலைவரை மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும் இந்தியாவின் பல தலைவர்களும் கடுமையாகக் கண்டித்தார்கள். அதன் பிறகே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை பாஜகவிற்கு உருவானது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவையும் அதே பாணியில் அவர் ஆணுமல்ல பெண்ணுமல்ல அலி என்று மூன்றாம் பாலினப் பெண்களையும் சேர்த்து அந்த மாநில பாஜக தலைவர் இழிவுபடுத்திய சம்பவமும் நடந்தது.
இந்திரா காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பெண் தலைவர்களை விதவைகள் என்று மோசமாக விமர்சித்த வகையில் பாஜகவே முதலிடம் பிடிக்கிறது.என்றாலும் சுஷ்மா, வசுந்தரா, தமிழிசை போன்ற பாஜகவின் பெண் தலைவர்கள் செயல்பாட்டின் முன்வரிசையில் வந்து நிற்கிறார்கள். ஆனாலும் அவர்களை அப்படி யாரும் மோசமாக விமர்சிக்கவில்லை என்பதே பெரும் ஆறுதல்.
நால்வருண தர்மத்தில் கடவுள் நான்காவது வகையான ஆண்களைத்தான் படைத்தார். பெண்ணைப் பாவத்திலிருந்து படைத்ததாக மனு தர்மம் கூறுகிறது.
ஆனால் பெண் என்ற மனுஷியை ஆறறிவு படைத்தவர்களாகவும் அவர்கள் பெறவேண்டிய அரசியல் அதிகார உரிமையை வரலாற்றின் நெடுகிலும் விதைகளாகத் தூவி வீட்டுச் சிறையிலிருந்து விடுவித்தது முற்போக்குச் சிந்தனையும் அதை முன்னெடுத்த மதச்சார்பற்ற மக்களும்தான் என்பதை வரலாறு அறியும்.
ஆகவே, அதிகாரத்தின் மையத்துக்கு வந்துள்ள பாஜகவின் பெண் தலைவர்கள் அதை அறிவார்களா என்ற கேள்வியை நான் முன்வைக்கவில்லை.
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர்,
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com