திருவனந்தபுரம் சூர்யா கலைவிழாவில் நடந்த நடன நிகழ்ச்சிகள் அற்புதமாக இருந்தன. நாட்டியக் கலைஞர்கள் ரமா வைத்தியநாதனும் தக்ஷினாவும் இரண்டு விதங்களில் மற்ற நாட்டியக் கலைஞர்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறார்கள். அம்மாவும் மகளுமாக நாட்டியங்களை இன்றும் மேடைகளில் நடத்திவருகிறார்கள். ஒருநாள் அம்மா நடனமாட, மகள் பாடுகிறார். மறுநாள் மகள் நடனமாட, அம்மா பாடுகிறார். நடனத்திலும் பாட்டிலும் இருவருமே ஜொலிக்கிறார்கள்.
அதிகப் பயிற்சியும் ஒத்திகைகளும் தேவைப்படக்கூடிய நாட்டியக் கலையில் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். எப்படிச் சமாளிக்கிறார் என்று ரமாவிடம் கேட்டோம்.
“என் நடன குருவின் வீட்டுக்கே நான் மருமகளாகச் சென்றதால் எனக்குப் பிரச்சினைகளே ஏற்பட்டதில்லை. அவர்கள் கொடுக்கும் ஊக்கத்தால்தான் இத்தனை ஆண்டுக் காலம் நானும் இப்போது என் மகளும் இந்தத் துறையில் தொடர்ந்து கொடிகட்டிப் பறக்க முடிகிறது”
உங்கள் நடனத்தில் என்ன சிறப்பு?
அழகான பாடல்களுக்கு நடனமாடிவிட்டுச் செல்வதில் என்ன சிறப்பு இருக்கிறது? எங்கள் நடனங்களில் சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை அழகாகப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறோம். பார்வை யாளர்களின் ரசனையையும் சிந்தனைகளையும் மேம்படுத்துவதைக் கலைஞர்களின் கடமையாக நினைக்கிறேன். பெண் கல்வியின் அவசியம், பெண் சிசுக் கொலை, பெண்களின் மீதான வன்முறை போன்ற விஷயங்களையும் இன்றைய முக்கியத் தேவையான சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் எங்கள் நாட்டியங்களில் கொண்டு வருகிறோம்.
பாரம்பரிய நடனங்களில் மரபை மீறலாமா?
மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. அந்தந்தக் காலகட்டங்களுக்கு ஏற்ப, பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் மாற்றங்களையும் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். அப்படி இருந்தால்தான் நீங்கள் தனித்துவம் பெறுவீர்கள்.அழகான நடனங்களை சமூகக் கருத்துகளைச் சேர்த்து மேலும் அழகாக்கும் ரமா, தக்ஷினாவின் நடனங்கள் பார்வையாளர்களைக் கட்டிப்போடுவதில் ஆச்சரியமில்லை!