உடற்சோர்வு, தலைவலி, குமட்டல், அடிவயிற்றில் தாங்க முடியாத வலி உங்களைச் சுருட்டி இழுக்கிறது. எங்கும் அசையாமல் தலையணையை அணைத்துப் படுத்திருக்கத் தோன்றுகிறது. ஆனால், ‘கடகட’ வெனக் கிளம்பிக் கூட்ட நெரிசலுக்கு இடையில் முண்டியடித்துப் பேருந்தையோ மின்சார ரயிலையே பிடித்து அலுவலகம் போய்ச் சேர வேண்டும். நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்தபடியே கழிக்க வேண்டும்.
என்னவென்று சொல்வது?
இதுதான் மாதவிடாய் நாட்களில் பெரும்பாலான பெண்களின் இன்றைய நிலை. இதை ஏன் மாற்றக் கூடாது என முதன்முறையாக ஒரு இந்திய நிறுவனம் யோசித்திருக்கிறது. மாதவிடாயின் முதல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க மும்பையைச் சேர்ந்த கல்சர் மெஷின் (Culture Machine) நிறுவனம் தீர்மானித்துள்ளது. இனி, எப்படிச் சொல்வது என்று தெரியாமல் ஏதாவது ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லி, மாதவிடாயின்போது பெண் ஊழியர்கள் விடுப்பு கேட்கத் தேவை இல்லை. ‘First Day of Period Leave’ எனச் சொல்லிவிட்டு தங்களுடைய உரிமையைக் கோரலாம் என்கிறது அந்நிறுவனம்.
இணையத்தில் ‘புட்சட்னி’ (Putchutney), ‘பிளஷ்’ (Blush), ‘பீயிங் இந்தியன்’ (Being Indian) உள்ளிட்ட பிரபல யுடியூப் சேனல்களை இந்நிறுவனம் நடத்திவருகிறது. அவற்றில் ‘பிளஷ்’ பிரத்யேகமாகப் பெண் உலகைப் பிரதிபலிப்பதற்காகவே நடத்தப்படுவது. இந்த யுடியூப் சேனலில் சில நாட்களுக்கு முன்பு தங்கள் நிறுவனத்தின் புதிய திட்டத்தைச் சுவாரசியமான வடிவத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கல்சர் மெஷின்.
இது பெரிய விஷயமா?
ஆவணப்படப் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது அந்தக் காணொலி. தொடக்கத்தில் வெவ்வேறு பெண் ஊழியர்களின் பதில்கள் மூலமாகக் கேள்வி என்னவாக இருக்கும் என்பது மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. அதில் முக்கியமானது, தனக்கு மாதவிடாய் என ஒரு பெண் ஊழியர் சக ஆண் ஊழியரிடமோ உயர் அதிகாரியிடமோ சொன்னால் கிடைக்கும் எதிர்வினை.
“வழக்கமாக நடக்கிறதுதானே, இது என்ன பெரிய விஷயமா?”, “ஐயோ! அவள்ட்ட ஜாக்கிரதையா இரு!”, “உனக்கு மாதவிடாய் என்பதால், நீ மோசமான மனநிலையில் இருக்கிறாய்”, “ஒரு சாக்லேட் சாப்பிடு, எல்லாம் சரியாயிடும்” -இப்படி மாதவிடாயில் இருக்கும் பெண்ணிடம் ஆண்கள் வெவ்வேறு விதமாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். ஆனால், ஒருபோதும் அந்த நாள் எப்படி இருக்கும் என ஒரு ஆண் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதை பதிவுசெய்கிறது இந்தப் படம்.
நிதர்சனத்தில் மாதவிடாயின் முதல் நாள் எத்தனை அசவுகரியமானது, தவிர்க்க முடியாத வலி, வேதனை, சோர்வு மேலெழும் அந்த நாளில் விடுப்பு எடுப்பதற்காக, என்னென்ன பொய்களைச் சொல்ல ஒரு பெண் நிர்ப்பந்திக்கப்படுகிறாள் என்பதைப் படம் காட்டுகிறது.
புரிந்துகொள்ளும் ஆண்கள்
இறுதியாக ஒரு ஆண் குரல் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட எல்லாப் பெண்களிடமும் “இனி உங்களுக்கு அவசியம் எனத் தோன்றினால் மாதவிடாய் என்று சொல்லிவிட்டு விடுப்பு எடுத்துக்கொள்ளும் திட்டத்தை கல்சர் மெஷின் அறிமுகப்படுத்தியுள்ளது” என்கிறார். அது மட்டுமல்லாமல், மாதவிடாய் விடுப்பு என்பது பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை என அந்நிறுவனத்தில் உயர் பதவியிலிருக்கும் ஆண் அதிகாரிகள் பதிவுசெய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து, கல்சர் மெஷின் நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் தேவ்லீனா மஜூம்தரிடம் கேட்டபோது, “எங்களிடம் 75 பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்குக் கீழே உள்ளவர்கள். ‘பிளஷ்’ போன்ற சேனலை மகளிர் உரிமைகளை, மகளிரின் வாழ்வுலகை காட்டத்தான் நடத்திவருகிறோம். அப்படியிருக்கும் ஒரு நிறுவனம், பெண்களுக்கு உரிய மரியாதையை நிதர்சனத்திலும் தருவது எங்களுடைய கடமையல்லவா.
பெண்கள் எதிர்கொள்ளும் இயற்கையான சவாலுக்கு நியாயம் செய்ய வேண்டும். இதை எங்களுடைய ஆண் ஊழியர்களிடம் விளக்கியபோது, அவர்களும் சரியான அர்த்தத்தில் புரிந்துகொண்டார்கள். எங்களுடைய நிறுவனத்தைப் போலவே மற்றவர்களும் பணியிடத்தில் பெண்களைக் கொண்டாட வேண்டும். அதற்காக ஆன்லைன் மூலமாகத் திரட்டப்பட்ட First Day of Period என்கிற மனுவை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெண்கள் - குழந்தை மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்க இருக்கிறோம்” என்கிறார்.
இதுவரை இந்த மனுவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அதைவிடவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி, கல்சர் மிஷினைப் பின்தொடர்ந்து கூஸூப் (Gozoop) என்ற மும்பையைச் சேர்ந்த மற்றொரு இணைய நிறுவனமும் இதே திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளதுதான்.
புரிந்துகொள்ளப்படாத வலி
சமீபகாலமாக மாதவிடாய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைச் சமூக ஆர்வலர்கள் பலர் முன்னெடுத்துவருகின்றனர். அதில் சமூக ஊடகம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
இன்றைய தேதியில் மாதவிடாயின்போது சுகாதாரரீதியாகத் தங்களைப் பேணப் போதுமான கழிப்பிட வசதியின்றி உலக அளவில் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை 100 கோடி. இதற்குக் காரணம், மாதவிடாயின்போது பெண்கள் சந்திக்கும் வலி குறித்தும், அந்நாட்களில் பெண்களுக்குத் தேவையான சுகாதாரம் குறித்தும் ஆண்களிடையே அலட்சியமும் அக்கறையின்மையும் நிலவுவதுதான்.
2016-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வும் இதை உறுதி செய்கிறது. “மாரடைப்புக்கு இணையான கொடூரமான வலி மாதவிடாய் வலி. ஆனால், ஆண்களுக்கு இது புரிவதில்லை. மருத்துவத்திலும் இதுவரை இதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை” என்று யூனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் கில்லிபாட் தனது ஆய்வில் பதிவுசெய்துள்ளார். பெண்களின் மாதவிடாய் வலி மட்டுமல்ல பொதுவாகவே பெண்களின் எல்லா வலிகளுமே ஒருவித அலட்சிய மனோபாவத்துடன்தான் அணுகப்படுகின்றன.
தேவ்லீனா மஜும்தார்
தன்னுடைய வலிகளை மிகைப்படுத்துபவள் பெண் என்கிற பார்வையைத்தான் ஆணாதிக்க மனோபாவம் கொண்டிருக்கிறது. அதனால்தான், “வழக்கமாக நடக்கிறதுதானே, இது என்ன பெரிய விஷயமா?” என்பது போன்ற எதிர்வினைகள் பெண்ணை நோக்கி வீசப்படுகின்றன. இதனால் தன்னுடைய வலியைக்கூட வெளிப்படுத்த முடியாமல் தனக்குள்ளேயே புதைத்துக்கொள்ளும் நிலைக்கு இந்தக் காலப் பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இத்தருணத்தில் மாதவிடாயைப் புரிந்துகொண்டு பெண்ணுக்கு உரிய மதிப்பளிக்கும் நாளை நோக்கிய பயணத்தை முன்னெடுத்திருக்கும் நிறுவனங்களை பாராட்டித்தானே ஆக வேண்டும்!