எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று பெண்கள். அப்பா தையல் தொழிலாளி, அம்மா கூலித் தொழிலாளி. நான் இரண்டாவது பெண். ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த நிலையில் எனக்குத் திருமணம் நடைபெற்றது.
பட்டப் படிப்போ ஆசிரியர் பயிற்சிப் படிப்போ எதிலும் சேர்ந்து படிக்க முடியாத நிலை. அப்போது என் கணவரும் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருந்தார். புத்தகங்களை வாசிப்பதில் எனக்கு இருந்த விருப்பத்தையும் என் பட்டப் படிப்புக் கனவையும் என் கணவரிடம் தெரிவித்தேன்.
என் கனவைத் தன் கனவாக வரித்துக்கொண்டார் அவர். தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கிலம் படிக்க எனக்கு உதவினார். அதற்கடுத்து பி.எட்., பிறகு ஆங்கில முதுகலைப் பட்டம் என்று என் படிப்பின் வாசல் விசாலமானதில் என் கணவருக்குப் பெரும் பங்குண்டு.
தேர்வு நேரங்களில் வீட்டு வேலை, குழந்தைப் பராமரிப்பு போன்றவற்றில் என் கணவர் உதவியதால் அஞ்சல் வழியாகப் படித்தும் என்னால் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற முடிந்தது.
பட்டப் படிப்பு படித்தபோது அடுத்தடுத்த ஆண்டுகளில் எனக்கும் என் கணவருக்கும் அரசுப் பள்ளியில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இடைநிலை ஆசிரியராகச் சேர்ந்த நான்,சில ஆண்டுகளில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றேன்.
புத்தகக் காட்சிக்குத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாங்கள் சென்றுவருகிறோம். நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிப்பை நேசிக்க வைத்துவிட்டார். பல்வேறு நாளிதழ்களிலும் எழுதுவதற்கு வழிகாட்டி உதவியிருக்கிறார். இன்றும் வீட்டில் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் நான்கு நாளிதழ்களை வாங்கி வாசித்துவருகிறோம்.
மேற்படிப்பு, வாசிப்புப் பழக்கம், தகவல் தேடல், எழுத்துப் பணி, பொதுச் சேவை, பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுதல் உள்ளிட்டவற்றில் வழிகாட்டும் தோழனாய் இருந்து என்னை உயர்த்திவருகிறார் என் கணவர்.
- மா.தங்காகண்மணி, ஆத்தூர்.