சின்ன வயதில் முதன்முறையாகத் தனியாக வெளியில் போகும்போது அம்மா, அப்பா குறிப்பாகப் பாட்டிகள், ‘அக்கம், பக்கம் பார்த்துப் போ, கைப்பொருளைப் பத்திரமா வை, கூட்டம் இருக்கிற வண்டில ஏறு, இருட்டுல தனியா போகாதே, தெரியாத ஆளிடம் பேசாதே, போய்ச் சேர்ந்தவுடன் கடிதம் எழுது’ என்பது போன்ற பாதுகாப்பு அறிவுரைகளை வழங்குவார்கள். இவை எக்காலத்துக்கும் பொருந்துபவை.
பெண்கள் தனியாக அரசுப் பேருந்து, தனியார் வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பல உண்டு. தினசரிப் பயணம், நெடுந்தூரப் பயணம் என எதுவாக இருந்தாலும் திட்டமிடல் மிக முக்கியம். அவசரகதிப் பயணம் நம்மை ஒரு பரபரப்பிலேயே வைத்திருக்கும். அதன் வெளிப்பாடே, ஒரு கையில் கைபேசி, தோளில் சில பைகளை ஏந்திக்கொண்டு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே கவனிக்காமல் செல்வது.
பொதுவாக வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பது மிக அவசியம். செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்றவற்றால் தன்னிலை மறந்த சிந்தனையில் செல்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, முதலில் தன் சுற்றுப்புறத்தைக் கவனிப்பதைப் பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், சந்தேகத்துக்குரிய வாகனத்தின் எண்ணையோ தேவைப்பட்டால் சந்தேக நபரின் புகைப்படத்தையோ எடுப்பது மிக அவசியம். பள்ளி நாட்களில் நண்பர்கள் சாலையில் போகும் வாகனங்களின் எண்களை மனதில் பதியவைப்பதை விளையாட்டாகச் செய்வார்கள். உண்மையில், அது ஒரு பாதுகாப்பு உத்தி.
இருவிதமான எச்சரிக்கை
பயணம் செய்யும் பெண்களுக்கு அறிமுகமான நபரிடமிருந்தும் அறிமுகமற்ற நபரிடமிருந்து அச்சுறுத்தல் வரலாம். அறிமுகமான ஆனால் அதிகப் பழக்கமில்லாத நபர் (குறிப்பாக ஆண்கள்) பயணத்தின்போது உங்களிடம் வந்து பேசினால், குறிப்பாகச் சத்தமாகப் பேசினால், உங்களை நெருங்குவதற்கான நடவடிக்கையாக இருக்கக்கூடும். அதுபோன்ற நபர்களிடம் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
பொதுப் போக்குவரத்து வாகனங்களில் எப்போது ஏறினாலும் வண்டி எண்ணைப் பார்த்து இருக்கையில் அமர்ந்தவுடன் வீட்டில் இருப்பவர்களுக்கு அந்த வண்டியின் எண்ணைக் குறுந்தகவல் அனுப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் முன் அநாவசியமாகப் பேசவோ அவர்கள் கேட்குமாறு செல்பேசியில் தனிப்பட்ட தகவல்களைத் தெரிவிப்பதோ கூடாது.
உங்கள் பணப் பையின் முதன்மைப் பகுதியை மற்றவர்கள் முன்னிலையில் திறக்காமல் இருப்பது நல்லது. தேவைப்பட்டால் மட்டும் செல்போனைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். பயணத்தின்போது பணப் பையை எளிதாக அணுகும்படி வைத்திருப்பவர்களிடமும் போனில் பேசிக்கொண்டிருப்பவர்களிடமும் அதேபோல் வயதானவர்களிடமும்தான் குற்றக் கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டுகிறது.
இது மட்டுமின்றிக் கிண்டல், கேலி, அத்துமீறல் போன்ற அனைத்துமே சாதுவான பெண்களுக்கு மட்டுமே பெரும்பாலும் நடக்கிறது. பயணத்தில் மேற்சொன்ன ஏதாவது நிகழ்வை எதிர்கொண்டால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட நபரிடம் சத்தமாகக் கூச்சலிட்டு எதிர்ப்பைக் காட்ட வேண்டும். குறிப்பாக, பெண்கள் தன்னைக் கேலிசெய்யும் அல்லது தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கும் ஆணைப் பார்த்துச் சத்தம்போட வேண்டும். அப்போது மற்றவர்களும் உங்களுடன் சேர்ந்துவிடுவார்கள். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் மவுனம் காக்காமல், அதே நேரத்தில் தன்னம்பிக்கையுடன் பெண்கள் இருப்பது அவசியம். எதையும் ஆரம்பத்திலேயே எச்சரித்து விடவேண்டும் என்பதைப் பெண்கள் பழகிக்கொள்ள வேண்டும்.
துணிச்சல் தேவை
பெண்கள் பொதுவாக வீட்டில் அப்பாவுக்கு, அண்ணனுக்கு அல்லது வீட்டிலுள்ள ஆண்களுக்குத் தெரிந்தால் பிரச்சினை என்று ஒதுங்கிச் செல்வார்கள். அப்படிச் செய்யக் கூடாது. பெற்றோர்தான் மகள்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். தவறு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும்.
யாராவது ஒரு நபர் எல்லை மீறும்போது காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம். அவசர எண்களை எப்போதும் நினைவிலோ அல்லது கைபேசியிலோ பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும். அவசர எண் 100, பெண்கள் பாதுகாப்பு எண் 1091, குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 ஆகிய எண்களைத் தேவைப்படும் போது தயங்காமல் தொடர்புகொள்ளலாம்.
பணிபுரியும் பெண்கள், படிக்கும் பெண்கள் தங்கள் நண்பர்களை அறிந்துவைத்துகொள்ள வேண்டும். வீட்டுக்குத் தெரியாமல் உடன் வரச் சொல்லும் நண்பர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல. அப்படிச் செல்ல நேர்ந்தால் பெற்றோரிடம் செல்லும் இடம் குறித்துத் தெரிவித்துவிட்டுச் செல்லுங்கள். அதேபோல் அங்கு சென்று சேர்ந்தவுடன் தகவல் தெரிவியுங்கள். பின்னர் அங்கிருந்து புறப்படும்போதும் தகவல் தெரிவிப்பது என எப்போதும் தொடர்பில் இருப்பது அவசியம்.
சமயோசிதம் அவசியம்
தற்போதைய ஸ்மார்ட் போன்களில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளும் வசதியும் அதைப் பகிர்ந்துகொள்ளும் வசதியும் உள்ளது. ஆகவே, நீங்கள் இருக்குமிடம் பற்றிய தகவலைப் பகிர்ந்துகொள்ளலாம். ஸ்மார்ட் போனின் ஜிபிஎஸ் வசதியை அணைத்துவிடாமல் எப்போதும் இயக்கத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக ஆட்டோ அல்லது வாடகைக் கார் பயன்படுத்துபவர்கள் அவற்றின் எண்ணைக் குறுஞ்செய்தி அனுப்புவது மிகவும் முக்கியம். மாலை, இரவு நேரங்களில் ஷேர் ஆட்டோ அல்லது பொதுப் பேருந்தை தேர்ந்தெடுப்பது நல்லது. அப்படித் தேர்ந்தெடுக்கும் வாகனத்தில் பெண்கள் இருப்பதை உறுதி செய்வதும், அவர்கள் பார்த்தவுடன் நம்பத்தகுந்தவராக (உதாரணமாக அலுவலகம் செல்லும் பெண், கல்லூரி மாணவி, இல்லத்தரசி என்று பார்த்தவுடன் தெரியும்) இருப்பதை உறுதி செய்வதும் வேண்டும்.
வாடகை காரில் தனியாகப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நலம். தவிர்க்க முடியாத சூழலில் பயணம் செய்யும்போது வண்டியில் ஏறும் முன் வண்டியின் எண், ஓட்டுநரின் எண் ஆகியவற்றை வீட்டிலுள்ளவர்களுக்கு அவர் முன்பே தகவல் தெரிவிப்பது நல்லது. (உதாரணமாக, ஓட்டுநரிடம் அண்ணா போனில் பேட்டரி சார்ஜ் இல்லை எனக் கூறி அவரின் கைபேசி மூலமாக அவரின் எண்ணைப் பயன்படுத்தி வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கலாம்.)
எந்தக் காரணம் கொண்டும் வேறு ஆண் நபரை வண்டியில் ஏற்றச் சம்மதிக்கக் கூடாது. போகும் வழியை நன்கு அறிந்துவைத்திருக்க வேண்டும். அந்த வழியில்தான் போக வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டுப் பயணத்தின்போது அதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மனிதரிடத்தில் நம்பிக்கை வைப்பதுதான் வாழ்க்கை என்பதை மறுப்பதிற்கில்லை. அதேநேரத்தில் அவசியப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் வாழ்க்கையில் முக்கியமே. தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் அனைத்தையும் பழக்கமாக்கிக் கொள்ளும்போது உங்கள் பயணமும், உங்களைச் சார்ந்தவர்களின் பயணமும் எப்போதும் இனிமையாக அமையும்.
கட்டுரையாளர், காவல்துறை நிர்வாகப் பிரிவு உதவி ஐ.ஜி.
தொடர்புக்கு: j.mutharasi25@gmail.com