பெண் இன்று

பெண் அரசியல் 11: அரசியலுக்கு மதம் பிடித்தால் என்னவாகும்?

பாலபாரதி

பழனிக்கு அருகில் உள்ள அப்பனூத்து கிராமத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கூட்டுறவு சங்கம் பால் தருவதில்லை என்ற பிரச்சினையைச் சட்டமன்றத்தில் 2014-ம் ஆண்டில் ஆதிதிராவிடர் மானியக் கோரிக்கையின் மீது எழுப்பினோம். ஆதாரமின்றிப் பேசக் கூடாது என ஆளும்கட்சியினர் மறுப்புத் தெரிவித்தனர். நாங்கள் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.

இந்த விஷயத்தின் மீது ஏற்கெனவே வெட்டுத் தீர்மானம் வழங்கியிருந்தோம். அது அச்சேற்றப்பட்ட குறிப்பாக அமைச்சர் முன்னால் இருப்பதை ஆதாரமாகச் சுட்டிக்காட்டினோம். அதுவரை அவர்கள் அந்தக் குறிப்பைக் கவனிக்கவில்லை. துணை சபாநாயகர் திடுக்கிட்டவராக அதைப் புரட்டிப் பார்த்துவிட்டு வெட்டுத் தீர்மானத்தில் கொடுப்பதெல்லாம் ஆதாரமாகிவிடாது என்று சொன்னதோடு நாங்கள் மேற்கொண்டு பேசுவதற்கான அனுமதியையும் மறுத்தார்.

வர்ணாசிரம ஆதிக்கம்

இவ்வாறு மறுப்பதற்கு ஒரேயொரு காரணம்தான் இருந்தது. அது அவர்களுடைய ஆட்சியில் தீண்டாமையே இல்லை என்று நிலைநாட்டுவதுதான். என்னதான் அப்படிக் காட்டிக்கொண்டாலும் சாதியின் காரணமாக 200-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் பதிவாகி இருக்கின்றன. சில சம்பவங்களில் நீதிமன்றமே தண்டனையும் வழங்கி உள்ளது. இதற்கென ஒரு தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டுமெனத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் 400 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டனர். இந்த நடைப்பயணத்தைத் தலைநகருக்குள் நுழைய விடாமல் தமிழக அரசு தடுத்து நிறுத்திய சம்பவம் சமீபத்தில் நடந்தேறியது.

இதைவிடத் தீவிரத்தன்மையோடுதான் இந்தியாவின் இதர மாநிலங்களில் சாதிய ஆதிக்கமும் தீண்டாமையும் நிலவுகின்றன. வர்ணாசிரமத்துக்கு வயது இரண்டாயிரத்தைத் தாண்டியபோதும், அது முதுமையடைந்து ஓய்ந்துவிடவில்லை.

ஏற்றத்தாழ்வுமிக்கப் பல்லாயிரம் சாதிகளாலும் அதன் கிளைகளாக விரிந்து படர்ந்த சாதியின் உட்பிரிவுகளாலும் சூழப்பட்ட இந்து சமயம் பல நூறு கடவுளர்களோடு அதன் மையமாக அமர்ந்திருக்கிறது.

முதல் தலித் பெண் முதல்வர்

ஆணாதிக்கமும் சாதிக்கொடுமைகளும் நிறைந்த இச்சமூகத்தில் தலித் பெண்ணொருவர் ஆட்சி அதிகாரத்துக்கு வருவது அத்தனை எளிதல்ல. ஆனால், இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 1995-ல் இளம் வயதில் முதலமைச்சரான முதல் பெண்மணி என்ற புகழையும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற கூடுதல் பெருமையையும் மாயாவதியே பெற்றார்.

ஆனால், அத்தகைய பெருமை சில மாதங்கள்கூட நீடிக்கவில்லை. 137 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். பாஜக நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு அரசியலுக்கு மாயாவதி பலியானார். பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டபோது, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கன்ஷிராம், “பார்ப்பனர்களிடமிருந்து அவ்வளவுதானே எதிர்பார்க்க முடியும்” என்றார். அடுத்த இரண்டு முறையும் அதே துயரத்தையே மாயாவதி சந்தித்தார்.

உ.பி.யில் இதுபோன்ற அரசியல் சோகங்களும் விநோதங்களும் தொடர்ந்து நடந்தபடியே இருந்தன. காலை வாருவது, காலைப் பிடிப்பது குழந்தைகளின் விளையாட்டாக மட்டும் இருப்பதில்லை. கட்சி உடைப்பு, ஆட்சிக்கலைப்பு என உ.பி. அரசியலில் நிலையற்ற தன்மையே 2007 வரை நிலவியது. காரணம், அரசியலுக்குள் மதம் அடியெடுத்து வைக்கத் தொடங்கியிருந்தது.

மதவாத அரசியல்

ராமஜென்மபூமி, ராமர் கோயில் ரதயாத்திரை, கரசேவை என அடுக்கடுக்கான அறைகூவல்கள் உ.பி. அரசியலில் மெல்ல (1980-1990) வளரத் தொடங்கியிருந்தன.

ராமர் கோயில் கட்டப்போவதாக விஸ்வஹிந்துபரிஷத், ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தளம் உள்ளிட்ட சங்கபரிவார பாஜக அமைப்புகள் மக்கள் மத்தியில் முழக்கங்களை முன்வைத்தன. 1991-ல் உ.பி.யில் பாஜக வென்று ஆட்சிக்கும் வந்தது.

அரசியலோடு மதம் கலந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை 1992-ல் அயோத்தியில் நடந்த பாபர் மசூதி இடிப்புச் சம்பவமும் அதைத் தொடர்ந்த கலவரத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவமும் எடுத்துக்காட்டின.

மசூதி இடிக்கப்பட்ட பிறகே மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு, உ.பி. பாஜக அரசை டிஸ்மிஸ் செய்தது.

அதன் பிறகு நடந்த தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரமுடியவில்லை. மாயாவதி கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் ஒன்றிணைந்து எடுத்த நடவடிக்கையால் பாஜக ஆட்சிக்குவரும் முயற்சி தடுக்கப்பட்டது. ஆனால், மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை நீண்ட காலம் நீடிக்கவில்லை.

துணிச்சல் தலைவி

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த மாயாவதி, இயல்பாகவே சமூக அநீதிக்கு எதிரான ஆவேச உணர்வைக் கொண்டிருந்தார். தான் வகித்த ஆசிரியர் பணியைத் துறந்து முழுநேர அரசியலை ஏற்றவர். அபாரமான பேச்சாற்றல் மிக்கவர். அனைத்துத் தரப்பு மக்களையும் அதிரடிப் பேச்சால் ஈர்க்கும் சக்திகொண்டவர்.

உலகிலேயே அதிக ஊழல் புரிந்தவர் மாயாவதிதான் என்ற முலாயமின் அதிரடி குற்றச்சாட்டுகளுக்கும், அதற்கு முந்தைய தாக்குதலுக்கும்

அஞ்சாமல், “எல்லாவற்றுக்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது” என்று சொல்லி கணக்கைப் பற்றி வாய் திறக்காமல் கடந்துசெல்லும் துணிச்சலும் நிறைந்தவர்.

2007-ல் தனது கட்சி தலித் மக்களுக்காக மட்டுமல்லாமல் பிற்பட்டோர், முற்பட்டோர் என அனைவருக்குமான அமைப்பாகவும் அரசாகவும் இருக்கும் என்ற மாறுதலைக் கொண்டுவந்தார். மக்கள் அதை ஏற்றார்கள். கடந்த காலங்களைப் போல் அல்லாமல் 2007 தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை மாயாவதிக்கே மக்கள் அளித்தனர். முதல் முறையாக யாருடைய தயவுமின்றி மாயாவதி முதலமைச்சரானார்.

சொத்துக் குவிப்பு, ஊழல், பண மாலைகள், சிலைகள், ஆடம்பர அரசியல் போன்றவை சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் மாயாவதியையும் பின்தொடர்ந்தன.

மாநில அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் கடந்த காலகத்தில் பாஜகவின் மீது மாயாவதி கடைப்பிடித்த அணுகுமுறைகளும் நிலைப்பாடுகளும் அந்த மாநில தலித், சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

2014, 2017 தேர்தல்களில் தோல்வியடைந்தாலும் அதிகாரத்துக்கு வந்த பாஜகவிடம், இது மோசடித் தேர்தல் என்றும் மறுதேர்தல் நடத்த துணிச்சல் உண்டா என்றும் கேட்டிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கப் போவதாக முதலில் அறிவித்தவர், பிறகு அவர் ஆர்எஸ்எஸ் சார்புடையவர் என்பதால் மீரா குமாரை ஆதரிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஊழல், வழக்கு, சிறை போன்ற மத்திய அரசின் அச்சுறுத்தல்களுக்கு மாயாவதி அடிபணிந்து செல்வாரா அல்லது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய உ.பி.யின் ஏழைகளுக்காக அவர்களின் ஒற்றுமையை வலிமைப்படுத்தும் போராட்டத்தை முன்னெடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com

SCROLL FOR NEXT