பெண் இன்று

சேனல் சிப்ஸ்: புத்தம் புது வேலை

மகராசன் மோகன்

புத்தம் புது வேலை

வேந்தர் தொலைக்காட்சியில் நாள்தோறும் காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ‘புத்தம் புது காலை’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் திவ்யா பானு சின்னத்திரை பயணமும் தனக்குப் புத்தம் புதிதுதான் என்று புன்னகைக்கிறார்.

“பட்டப் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். தொகுப்பாளினியாக ஆனால் என்ன என்ற எண்ணம் திடீரென மனதுக்குள் பளிச்சிட்டது. உடனே வேந்தர் டிவி ஆடிஷனில் கலந்துகொண்டேன். பரீட்சையில் எந்தத் தடையும் இல்லாமல் தேர்வானதும், தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே அது வளர்ந்து இப்போது ‘புத்தம் புது காலை’, ‘நேரடி நிகழ்ச்சி’ என்று உயர்ந்தாச்சு. சேனல் வேலையில் பிஸியானதால் தனியார் நிறுவன வேலைக்கு குட்பை சொல்லியாச்சு. தொகுப்பாளியான டிடி வழங்கும் நிகழ்ச்சிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. விரைவில் சின்னத்திரை தொடர்கள், சினிமா வாய்ப்புகளையும் அள்ள வேண்டும் என்பது என் ஆசை!’’ என்கிறார், திவ்யா பானு.

நாங்க தோழிங்க

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை தோறும் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘நாங்க சொல்லல’ நிகழ்ச்சியை காயத்ரி, கனிமொழி இருவரும் அசத்தலாகத் தொகுத்து வழங்கிவருகிறார்கள்.

“இது சினிமா சார்ந்த செய்திகளை கலகலப்பாவும் வித்தியாசமாகவும் கொடுக்குற நிகழ்ச்சி. இதைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தில் இருந்து நானும் கனிமொழியும் திக் ஃபிரெண்ட்ஸா மாறிட்டோம். அதுக்கு முன்னாடி எங்களுக்குள் பெரிய அறிமுகம் இருந்ததில்லை. ‘ரஜினி படத்தைப் பத்தி நீ சொல்றியா? அப்போ நான் கமல் படத்தோட செய்தியைச் சொல்றேன். அஜித் பட நியூஸ் உனக்குன்னா விஜய் பட நியூஸ் எனக்கு’ன்னு போட்டிப் போட்டு நிகழ்ச்சியை வழங்கிட்டு இருக்கோம். எங்க வீட்டு நிகழ்ச்சிக்கு கனிமொழியும் அவங்க வீட்டு நிகழ்ச்சிக்கு நானும் போய்வர்ற அளவுக்கு நெருங்கின தோழிகளாகிட்டோம்!’’ என்கிறார், காயத்ரி.

SCROLL FOR NEXT