பெண் இன்று

கண்ணீரும் புன்னகையும்: ஜேம்ஸ் பாண்ட் நாயகி மரணம்

ஷங்கர்

‘தண்டர்பால்’ படத்தில் சீன் கானரி ஜேம்ஸ் பாண்டாக நடிக்க, அவருடைய காதலி பேட்ரிசியாவாக நடித்த மோலி பீட்டர்ஸ் 75 வயதில் மரணமடைந்தார். சீன் கானரிக்குப் பிறகு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தைப் புகழ்பெற வைத்த நடிகர் ரோஜர் மூர் சென்ற வாரம் காலமான நிலையில் மோலி பீட்டர்ஸின் மரணம் ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மோலீ பீட்டர்ஸ் மாடலாகவும் புகழ்பெற்றவர். இவரது கடைசித் திரைப்படம் ‘டோண்ட் ரெய்ஸ் தி பிரிட்ஜ், லோவர் தி ரிவர்’.

பெண் எழுத்தாளர்களின் புதிய இயக்கம்

புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் இசபெல் அயந்தே மற்றும் அமெரிக்க எழுத்தாளர் மார்கரெட் அட்வுட் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சேர்ந்து ‘மேக் ஸ்பேஸ்’ என்னும் பிரச்சார அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். இனம், நிறம் அடிப்படையிலான வெறுப்பு, அரசியல் ரீதியான கருத்துகளைச் சொல்வதால் வெளியேற்றப்படுதல், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மீதான தணிக்கை குறித்து நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், புத்தக வெளியீடுகள் போன்றவை இந்த அமைப்பின் சார்பாக நடத்தப்படும்.

“புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பேசும்போது எளிதில் வெறுப்பை உருவாக்கி விடமுடியும். ஆனால் மனிதர்களின் முகத்தை அவர்களது கண்களை நேருக்கு நேராகப் பேசும்போது நமது உணர்வு மாறிவிடுகிறது. கலை மற்றும் இலக்கியத்தால் செய்ய இயலக்கூடிய பணி அதுதான்” என்கிறார் இசபெல் அயந்தே.

அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஓதுக்கீடு

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பில் இட ஒதுக்கீட்டை டெல்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. தலசீமியா மற்றும் உயரக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016 அடிப்படையில் 5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிசெய்துள்ள முதல் பல்கலைக்கழகம் என்ற புகழையும் அது ஈட்டியுள்ளது. அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக மைய நீரோட்டத்துக்கு வந்து சகஜமான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த இட ஒதுக்கீடு உதவியாக அமையும் என்று இந்த நடவடிக்கையை பெண்ணுரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

வன்கொடுமைகளை விசாரிக்க இந்திரா ஜெய்சிங் நியமனம்

மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் நடத்திய வன்முறைகளை விசாரிப்பதற்கான குழுவில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான இந்திரா ஜெய்சிங்கை விசாரணைக் குழு தலைவராக ஐ.நா. சபை நியமித்துள்ளது. இவருடன் இலங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதிகா குமாரசுவாமியும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மியான்மர் ராணுவம் எல்லைப் பகுதியில் நடத்திய தாக்குதலில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குத் தப்பித்தோடும் நிலை ஏற்பட்டது.

பெரும் எண்ணிக்கையில் நடத்தப்பட்ட படுகொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இந்தத் தாக்குதலில் நடந்ததாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஐக்கிய நாடுகள் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்திரா ஜெய்சிங் 2009-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர். இந்தியாவில் முதன்முறையாக நிறைவேற்றப்பட்ட குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் வரைவுப் பணியிலும் இவர் பங்கேற்றிருக்கிறார்.

SCROLL FOR NEXT