பெண் இன்று

சமத்துவம் பயில்வோம்: சம்பாதிக்கும் இயந்திரமா பெண்?

இரா.பிரேமா

இயற்கைச் சீற்றம், சமூகக் கலவரங்கள், சுற்றுச்சூழல் மாசு, பொருளாதாரச் சீர்கேடுகள், கொள்ளை நோய் என்று எந்தப் பாதிப்பு வந்தாலும் அதனால் அதிகம் துன்பம் அடைபவர்கள் பெண்களே.

கடும் குடிநீர்ப் பஞ்சம் தொடங்கிவிட்டது. அதை ஆண்கள் அரசியலாக்கிப் பேசித் திரிய, பெண்களோ தண்ணீருக்காகக் குடங்களைத் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். வறுமை என்பது ஒரு கொடிய சமூக நோய். குடும்பத்தில் சம்பாதிப்பவன் ஆண் மகன் என்ற எழுதப்படாத விதி இருந்தாலும்கூட, பெண்கள்தான் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பொருளாதாரத்தில் கீழ்மட்டத்திலிருக்கும் குடும்பத்தில், ஆண்கள் தங்கள் உடல் உழைப்பின் மூலம் சம்பாதிப்பதைக் குடித்தே தீர்த்துவிடுகின்றனர். அதையும் மீறி, சம்பளத்தை வீட்டுக்குக் கொடுப்பவர்கள் மிகச் சிலரே. அவர்களை நம்பிப் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட பெண்களுக்கு, அந்தக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் கல்வி கொடுப்பதும் சுமையாக அமைந்துவிடுகிறது.

அரசாங்கத்தால் இன்றைக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசக் கல்வி, பள்ளி இறுதிவரை வழங்கப்படுகிறது என்றாலும், அவர்கள் உயர் கல்வி கற்க பணம் தேவைப்படுகிறது. ஆங்கில மோகத்தால் பலரும் தங்கள் குழந்தைகளைப் பணம் கட்டி ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் படிக்க வைக்கின்றனர். இதனால் தினமும் அவர்கள் வாழ்க்கையில் போராட்டம்தான். ஒரே வீட்டில் இரு குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டிய நிலை இருந்தால் அங்கு இன்னும் அதிகப் போராட்டம்.

இந்தச் சூழலில் ஆண்கள் கைவிரித்துவிட, வேறு வழியின்றி பெண்கள் குடும்பப் போராட்டத்தைத் தங்கள் கையிலெடுக்கின்றனர். தங்களால் அதிகம் சம்பாதித்துக் கொடுக்க முடியாததால், பெண்களைச் சம்பாதித்துத் தர ஆண்கள் வற்புறுத்துகின்றனர். கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் வேறுவழியில்லாது, சம்பாதிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எப்போது விடியல்?

கல்வியறிவு பெறாத பெண்களுக்கு வீட்டு வேலை, சமையல் வேலை, கட்டிட வேலை போன்றவை கிடைக்கின்றன என்றாலும், அந்த வருமானத்தின் மூலம் அவர்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாது . அதனால் அவர்கள் கூடுதல் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். வெளி நாட்டு வேலைகளும் வாடகைத்தாய் முறையும் அவர்களின் எதிபார்ப்புக்குத் தீனி போடுகின்றன.

படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இல்லாத பெண்கள் அதிக பணம் கிடைக்கும் என்று நம்பி, கடன் வாங்கி வெளிநாடு செல்லத் தயாராகின்றனர். பெரும்பாலும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள், அங்குள்ள தட்பவெப்ப நிலை, மதக் கட்டுப்பாடுகள் பற்றித் தெரிந்துகொள்வதில்லை. கடுமையான வேலை, காற்றோட்டம் இல்லாத தங்கும் இடம், எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காதது, கிடைத்த பணத்தை வங்கியில் போடத் தெரியாதது போன்றவற்றையெல்லாம் கடந்து, வீட்டுக்கு அனுப்பிய பணத்தில் கடனையும் அடைக்காமல், குழந்தைகள் படிப்புக்கும் செலவு செய்யாமல் சுற்றித்திரியும் கணவன் என அவர்கள் படும் துன்பத்துக்கு எல்லையே இல்லை.

பணத் தேவைக்காக வெளிநாட்டுத் தம்பதியருக்குக் குழந்தை பெற்றுத்தர, கருவைச் சுமக்க ஒப்புக்கொள்ளும் பெண்கள் அனுபவிக்கும் துன்பமோ அளவிட முடியாதது. பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஆட்பட்டு கருவைச் சுமக்கும் பெண்கள், முதல் நான்கு மாதங்கள் சென்ற பின்பு , தீவிர கண்காணிப்பில் மருத்துவமனைகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.

உடலாலும் மனத்தாலும் சுமந்த குழந்தையை ஒருமுறைகூடப் பார்க்க அனுமதியில்லை. ஒப்பந்த பணத்தை நேரடியாகப் பெற முடியாமல் இடைத்தரகர்கள் பிடியில் சிக்கி, பெண்கள் பெரும் பண இழப்புக்கு ஆளாகின்றனர். பிரசவத்துக்குப் பின்னர் அவர்கள் உடல்நிலை பற்றிப் பிரசவம் பார்த்த மருத்துவரோ, குழந்தையை எடுத்துச் சென்ற பெற்றோரோ, சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவனோ கவலைப்படுவதில்லை.

பணம் சம்பாதிக்க மட்டும் பெண். அந்தப் பணம் வந்த வழியைப் பற்றிக் கவலைப்படாத கணவன். குடும்பத்துக்காகத் தங்கள் சுயத்தைத் தொலைத்த பெண்கள். இந்த வேதனைகளுக்கு விடிவு ஏது?

- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com

SCROLL FOR NEXT