பெண் இன்று

கேளாய் பெண்ணே: இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா?

செய்திப்பிரிவு

எனக்கு முகத்தில் முடி வளர்கிறது. அதை எப்படி நீக்குவது? ஒருமுறை நீக்கினால் மீண்டும் வருமா?

- சுகன்யா, விழுப்புரம்.

டாக்டர் என்.பாலசுப்ரமணியன், தோல்நோய் சிகிச்சை நிபுணர், திருச்சி.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் டெஸ்டோ ஸ்டீரோன், புரொஜெஸ்டீரோன் என இருவகை ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன் சுரப்பு அளவின் அடிப்படையிலேயே ஆண், பெண் பாலினங்கள் பிரிக்கப்படுகின்றன. சிலருக்கு ஆண்களைப் போன்று முகத்திலும் மேலுதட்டிலும் தாடையிலும் முடி வளரலாம். இதற்குப் பரம்பரை காரணங்களும் இருக்கலாம். சிலருக்கு மாதவிடாய் நின்ற பின், வயதான காலத்தில் முகத்தில் முடி வளரும். சிலருக்குக் கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள், பிற காரணங்களால் முடி வளரலாம்.

இவை போன்று எந்தவித ஹார்மோன் பிரச்சினைகளும் இல்லாமல் இயற்கையாக முடி வளர்ந்தால், அவற்றை அதிநவீன லேசர் சிகிச்சையின் மூலம் நீக்கலாம், மீண்டும் வளராது. முகத்தில் முடி வளர ஹார்மோன் குறைபாடுதான் காரணம் என்றால், ஹார்மோன் அளவைப் பரிசோதனையில் கண்டறிந்து, மகப்பேறு நிபுணரின் ஆலோசனையுடன் அதைச் சரிசெய்ய வேண்டும். பிறகு லேசர் சிகிச்சை மேற்கொள்ளலாம். சிலருக்குக் களிம்பும் பரிந்துரைக்கப்படுகிறது. லேசர் சிகிச்சையை முறையான தோல் சிகிச்சை நிபுணரிடம் மேற்கொள்ள வேண்டும்.

எனக்கு வயது 52. எந்த நோயும் கிடையாது. தினமும் காலை எழுந்தவுடன் ஏதாவது ஒரு இனிப்பைச் சாப்பிட்டுவிடுகிறேன். இதனால் எனக்குச் சர்க்கரை நோய் வருமா? எப்படித் தற்காத்துக்கொள்வது? இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வழிமுறை சொல்லுங்களேன்.

- வே.தேவஜோதி, மதுரை.

கே.ரீனா, சர்க்கரை நோய்க்கான ஆலோசகர், சென்னை.

இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதிக அளவில் அரிசிச் சோற்றைச் சாப்பிட்டுவிட்டு, வேலை செய்யாமல், உடற்பயிற்சி செய்யாமல், நடைப்பயிற்சி இல்லாமல் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்குத்தான் சர்க்கரை நோய் வரும். உங்களின் பெற்றோருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா? பெற்றோருக்கு இருந்தால் மரபு ரீதியாக அடுத்த தலைமுறைக்குச் சர்க்கரை நோய் வரக்கூடும்.

முதற்கட்டமாகப் பற்களில் குழி இருக்கிறதா என்பதையும், ரத்தத்தின் அளவில் சர்க்கரை அளவையும் பரிசோதிக்க வேண்டும். எனினும் வயது காரணமாகத் தினமும் இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாகத் தினமும் காய்கள், பழங்கள் சாப்பிடுங்கள். உடனே நிறுத்த முடியாது என்பதால் வாரத்துக்கு ஒருநாள் இனிப்பு சாப்பிடுங்கள். படிப்படியாகக் குறைத்துக்கொள்வது உடல்நலத்துக்கு மிகவும் நல்லது. அருகிலுள்ள மருத்துவரை அணுகி, சர்க்கரை நோய் குறித்த வழிகாட்டுதலைப் பெறுங்கள். தேவைப்பட்டால் உளவியல் ஆலோசனையும் பெறலாம்.

உங்கள் கேள்வி என்ன?

‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள்.

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி

பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம்,

SCROLL FOR NEXT