பெண் இன்று

கொச்சைப்படுத்துவதுதான் விளம்பரமா?

ம.சுசித்ரா

சிவப்பழகை மெருகேற்றி ஆணுக்கு நிகராக ‘ஈக்வல் ஈக்வல்’ என்னும் தகுதியை அடைந்து திருமணத்துக்குத் தயாராகும் இளம்பெண்; கணவர் - குழந்தைகள் - மாமனார் என ஆளாளுக்கு வெவ்வேறு காலைச் சிற்றுண்டிகளைக் கேட்க, ஆறு கை கொண்டவளாக மாறி ‘ரெடி டு மிக்ஸ்’ தயாரிப்பைக் கொண்டு அத்தனையும் சமைத்துத்தரும் அம்மா; அலுவலகத்தில் மனைவி உயர் அதிகாரியாகவும் கணவர் அவருக்கு அடிபணிந்து வேலை பார்ப்பவராக இருந்தாலும் வீட்டுக்கு வந்ததும் வகைவகையாகச் சமைத்துக் கணவனைத் திருப்திப்படுத்த முயற்சிக்கும் துடிப்பான பெண். இப்படிப் பெரும்பாலான விளம்பரப் படங்கள் பெண்களை போகப் பொருளாகவும் ஆணுக்கு ஒரு படி கீழே இருக்கும் பிறவிகளாகவும் காட்சிப்படுத்துவதைக் கண்டித்துக்கொண்டேதான் இருக்கிறோம். நம் கண்டனங்கள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் குரல் எழுப்ப வேண்டிய சூழல்தான் நீடிக்கிறது. இந்த முறை வேலைக்குச் செல்லும் பெண்களை அவமதித்து விளம்பரப் படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது வேலைக்கு வழிகாட்டும் ஒரு பிரபல நிறுவனம்.

இதற்குப் பெயர்தான் படைப்பாற்றலா?

பணி வாழ்க்கையைத் திட்டமிட உதவும் இந்த நிறுவனத்தில் பதிவு செய்தால் தகுதிக்கு ஏற்ற வேலை நிச்சயம் என்கிறதைச் சொல்ல, ‘I spent some time with the CEO and got a promotion’ என்கிற வாசகத்தைப் பெருமையாக போஸ்டர்களிலும் வீடியோ விளம்பரத்திலும் கொக்கரிக்கிறது இந்த நிறுவனம். அதிலும் இதன் வீடியோ விளம்பரம் ஆபாசத்தின் உச்சம். அலுவலகத்தில் தன் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் ஒரு ஆண் ஊழியர் தன் கணினியில் அடுத்த வேலைக்குப் போவதற்கான ‘ரெஸ்யூமை’ப் பதற்றத்தோடு தயாரித்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவர் அருகில் இருக்கும் சக ஊழியரும் நண்பருமான ஒருவர், “புதிய நிறுவனத்தைப் பற்றி சிஇஓவிடம் விசாரித்தாயா?” என்கிறார்.

அடுத்து, அவருக்குப் பக்கவாட்டில் இருக்கும் ஒரு பெண் ஊழியர், “நான் இண்டர்வியூ போகறத்துக்கும் சிஇஓதான் டிப்ஸ் தந்தார்” என்கிறார். அதைத் தொடர்ந்து, “நான் சிஇஓவுடன் கொஞ்சம் நேரம் செலவழித்தேன்… பதவி உயர்வும் பெற்றேன்” என்கிறார் இன்னொரு பெண் சக ஊழியர். இப்படி ஆளாளுக்கு ஏதேதோ சொல்லி அந்த நபரைத் தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைவரான சிஇஓவிடம் மாட்டிவிட்டுக் கேலி செய்கிறார்கள். இறுதியாக இங்கு சிஇஓ என்பது நிறுவனத்தின் தலைவரை அல்ல வேலை உயர்வுக்கு வழிகாட்டும் ‘கரியர் என்ஹான்ஸ்மெண்ட் ஆஃபிஸர்’ (‘Career Enhancement Officer’) என்பதைக் குறிக்கிறது என முடிவடைகிறது அந்த விளம்பரப் படம்.

அடுத்த வேலைக்கு எப்படிப் போவது எனத் தடுமாறும் சக ஊழியருக்கு வேலைக்கு வழிகாட்ட “சிஇஓடன் கொஞ்சம் நேரம் செலவழித்தேன், அதனால் பதவி உயர்வும் பெற்றேன்” என உடலை நெளித்து ஆபாசமான பொருள்படும்படி ஒரு பெண் ஊழியர் சொல்வதற்குப் பெயர்தான் விளம்பர உத்தியா? படைப்பாற்றலா? ஏதோ சுவாரசியத்துக்காக உருவாக்கப்பட்ட படம் என இதைக் கடந்துபோய்விட முடியுமா? ஆண்கள் பணிபுரியும் அதே பணிச் சூழலில் அவர்களுக்கு நிகராகப் பெண்களும் வேலை பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து பெண்கள் மீது அபாண்டமாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு இது. திறமை, உழைப்பு, விடாமுயற்சி என்பதையெல்லாம் தாண்டி, சம்பள உயர்வும் பதவி உயர்வும் கூடுதல் சலுகையும் பெற ‘பெண்’ என்ற ஒன்றே போதும் எனச் சொல்லும் நபர்கள் இன்றும் நம்மோடும் நம்மைச் சுற்றியும் இருக்கிறார்கள்.

எண்ணிக்கையில் முன்னேற்றம்

காலங்காலமாகப் பெண்கள் வீட்டிலும் வெளி உலகிலும் உழைத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். சொல்லப்போனால் நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் செல்கிறார்கள்; ஆண்களைவிடப் பல மடங்கு குறைவாகக் கூலி வழங்கப்படு கிறார்கள்; கட்டிடத் தொழில், விவசாயக் கூலி வேலை போன்ற அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபடுபவர்கள் அதிகப்படியான உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் அத்துமீறலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

இந்திய மக்கள்தொகையில் 20 வயதைக் கடந்தவர்களில் ஆண்களில் 75 சதவீதத்தினரும் பெண்களில் 51 சதவீதத்தினரும் படிப்பறிவு பெற்றிருக்கிறார்கள் என்கிறது 2011-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. பெண்களை மட்டுமே எடுத்துக்கொண்டால் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களில் 59%, நகரங்களில் 80% பேர் படிப்பறிவு கொண்டவர்கள். முனைவர் பட்டத்துக்காகப் பதிவு செய்தவர்களில் 40.5 சதவீதம் பெண்களே! இதேபோல வெவ்வேறு தொழில்முறைப் படிப்புகளிலும் முன்பைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

பாதுகாப்பான பணியில் எத்தனை பேர்?

நகரவாசிகள் படிப்பறிவில் கிராமத்துப் பெண்களை முந்தியிருந்தாலும் இன்றும் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் செல்பவர்கள் கிராமத்துப் பெண்களே! ஆனால் படிப்பு இல்லாததால் அமைப்பு சாராத் தொழில்களில் ஈடுபட்டுத் தினக்கூலி அல்லது ஒப்பந்த அடிப்படையில் கூலி பெறுகிறார்கள். இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 39.5% பேர். அதில் 13.4% மட்டுமே மாதச் சம்பளம் வாங்குகிறார்கள். அப்படிப் பார்த்தால் ஒட்டுமொத்த இந்தியப் பெண்கள் தொகயில் 5.5% பேர் மட்டுமே மாதச் சம்பளம் வாங்குகிறார்கள். இதுமட்டுமா? ஒரே மாதிரியான வேலையை ஆணும் பெண்ணும் செய்தாலும் சராசரியாக ஒரு இந்திய ஆண் ஊழியருக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 56% மட்டுமே ஒரு இந்தியப் பெண் ஊழியருக்குக் கொடுக்கப்படுகிறது என்கிறது வேஜ்இண்டிகேட்டர் (WageIndicator) அமைப்பு, ‘பேசிக் இந்தியா டேட்டா 2006-2013’ என்னும் அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனம் மூலமாக நடத்திய கணக்கெடுப்பு.

“அட! இன்னும் எத்தனை காலம்தான் பெண்கள் முழுமையாக முன்னேறவில்லை, சரியான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை எனச் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?” எனச் சலித்துக்கொள்பவர்கள் ஒரே ஒரு நிமிடம் நீங்கள் வேலைபார்க்கும் அலுவலகத்தில் உள்ள சக பெண் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுங்கள். சில குறிப்பிட்ட வேலை தவிர பாதுகாப்பான பணிச் சூழலில் வேலைபார்க்கும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதிலும் உயர் பதவியை வகிக்கும் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி முன்னேறிய ஒரு பெண்ணின் அறிவை, திறமையை, உழைப்பை அங்கீகரிக்காமல் அவரை உடலாக மட்டுமே பார்க்கச் சொல்வது விளம்பரப்படமா அல்லது ஆணாதிக்கச் சிந்தனையின் துர்நாற்றத்தைப் பரப்பும் நடவடிக்கையா என்பதை யோசித்துப் பாருங்கள்!

SCROLL FOR NEXT