சமீபத்தில் இரண்டு செய்திகளை நாளிதழ்களில் பார்க்க நேர்ந்தது. ஒன்று இளம்பெண் ஒருவர் கணவரது கொடுமைக்குப் பயந்து அந்த வன்முறையிலிருந்து தப்பித்துக்கொள்ளத் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தார். அப்படிச் செய்துகொள்வதற்கு முன்பாக செல்போனில் பேசிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மற்றொரு செய்தி, காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறிய ஒரு செவிலியப் பெண் தன் பெற்றோரால் எரித்துக் கொல்லப்பட்டது. இந்த இரண்டுமே வெவ்வேறு செய்திகள் என்கிற தோற்றத்தைத் தந்தாலும் சொல்கிற செய்தி ஒன்றுதான். அது, குடும்ப கவுரவம் என்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயம்.
குடும்ப அமைப்பு, தனக்கான கவுரவத்தைக் காப்பாற்றவோ, கெடுக்கவோ பெண்ணால் மட்டும்தான் முடியும் என்றும், அது அவளது பொறுப்பு மட்டுமே என்றும் சொல்லிச் சொல்லித்தான் இந்தச் சமூகம் பெண்ணை உருவாக்குகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படைதான் இன்று தான் பெற்ற பெண்ணையே பெற்றோர் எரித்துக் கொல்வதற்கும், மருமகனால் கடுமையான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு விவாகரத்து கோரிய மகளை வலுக்கட்டாயமாக அதே கொடியவனோடு வாழ அனுப்பி அவளது மரணத்தை உறுதி செய்ததற்கும் பின்னணியாக இருக்கிறது.
தொடரும் கேள்விகள்
நான் எனது பதிமூன்றாவது வயதில் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டேன். பெண்கள் அதற்கு மேல் படிக்க வேண்டாம் என்று நம்பிய சமூகத்தில் பிறந்தவள் நான். பள்ளிக் கல்வியைத் தொடர என் பெற்றோரிடம் கெஞ்சினேன். குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதில்தான் எனக்குக் கிடைத்தது. பின்னாளில், நான் எழுத விரும்பிய கவிதைகளுக்காகவும் கெஞ்சினேன். அப்போதும் இதே பதில்தான் கிடைத்தது. உள்ளாட்சித் தேர்தலில் நின்றபோதும் நான் எதிர்கொள்ள நேர்ந்தது இதே வார்த்தைகளைத்தான். அதே சொற்கள்தான் இன்றைக்கும் இந்த பெண்களின் மீது கவிழ்ந்து, அவர்களைக் காவுகொள்கின்றன. கண்ணுக்குப் புலப்படவே முடியாத அந்த ஒற்றை வார்த்தையான கவுரவம் என்பது பெண்ணின் உயிரைவிட அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா என்கிற கேள்வி வருகிறது.
விவாகரத்து பெற்றுவிட்ட பிறகு பெண்ணை இந்தச் சமூகம் பார்க்கும் அல்லது நடத்தும் விதம், ஒரு பெண் தான் விரும்பியவனோடு சென்ற பிறகு அந்தக் குடும்பம் கொள்கிற அளவற்ற கோபம் இந்த இரண்டுக்கும் பின்னணியில் இருப்பது என்ன? பெண்ணின் தேர்வு என்பது குடும்ப கவுரவத்தை அழிக்கக்கூடியதொரு விஷயம் என்னும் பார்வைதானே?
இந்தப் பூமி உருண்டையானது என்பதிலோ கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பதிலோ உலகத்தில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் கிடையாது. காரணம் அவை அறிவியல் உண்மைகளாக நிறுவப்பட்டுவிட்டன. ஆனால் பெண்ணுக்கான இடம் எது என்பதில் மட்டும்தான் இன்னும் இந்த உலகம் தீராத சந்தேகத்தை இன்றைக்கும் கொண்டிருக்கிறது. அதனால்தான் இன்றும் பெண்ணின் இடம் என்பது குடும்ப அமைப்பை, அதன் கவுரவத்தினைக் கட்டிகாப்பதாக மட்டுமே நிலைபெற்றிருக்கிறது.
தனக்கான தேர்வைச் செய்வதற்கும்
அதன் அடிப்படையில் வாழ்வதற்கும், பிரிவதற்கும் இயலாத நிலையில் இருக்கும் பெண்ணின் இடம் எத்தனை கொடுமையானது? தான் நம்புகிற, காக்க விரும்புகிற கவுரவத்துக்காக பெற்ற மகளை ஒரு கொலைகாரனோடு வாழ வற்புறுத்தவோ, தானே கொலை செய்யவோ பெற்றவர்களால் இயலும் என்றால் அந்தக் குடும்ப அமைப்பு பாதுகாப்பானது என்கிற பிம்பம் சரியானதுதானா?
பெற்றோர் வழங்குகிற அல்லது வடிவமைக்கிற இடத்தில் புழங்கித் தனது இருப்பை நிலைபடுத்துவதுதான் ஒரு பெண்ணுக்கான வாழ்வா? இது எத்தனை பெரிய வன்முறை? ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைப் பொதுவில் வைக்கச் சொன்னான் பாரதி. நாமோ கவுரவம் என்கிற ஒரு வார்த்தையைப் பெண்ணின் தோளேற்றி இந்த நூற்றாண்டிலும் அவளைச் சுமக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆண் குரங்கு மரம் ஏறலாம், பெண் குரங்கு ஏறக் கூடாது என இயற்கை கட்டுப்படுத்துகிறதா என்ன?
பால் அடையாளத்தின் பொருட்டு பெண் இழந்துவிட்ட எண்ணற்ற விஷயங்களை அவளுக்கானதாகக் கை மாற்றும் காலமாக இனி வரும் காலம் இருக்கட்டும். ஆணும் பெண்ணுமே இந்த வாழ்வை, குடும்ப அமைப்பின் விழுமியங்களை, தோளில் ஏற்றவோ அல்லது உதறித் தள்ளவோ இணையட்டும். இந்த வாழ்வென்பது வாழ்ந்து கடக்கவே. வன்முறையினால் வீழ்ந்து கிடக்க அல்ல.
கட்டுரையாளர், கவிஞர்
தொடர்புக்கு: writersalma@gmail.com