பெண் இன்று

போட்டோ சேர்த்து வைத்த பள்ளித் தோழிகள்

வி.சாரதா

ஆண்களுக்குத் தங்களின் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது ரொம்ப சாதாரண விஷயமாக இருக்கிறது. ஆனால், திருமணம் ஆன பிறகு பெண்களுக்கு நண்பர்களுடனான தொடர்பு கிட்டத்தட்ட துண்டிக்கப்படுகிறது. அதுவரை ஒண்ணுமண்ணாகப் பழகிய நண்பர்கள், தோழிகள் யாராக இருந்தாலும் அத்திப்பூத்தாற் போலத்தான் சந்திந்துக்கொள்ள முடிகிறது.

இந்த நிலையில் சின்ன வயது நண்பர்கள், பள்ளி நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வாழ்க்கையில் வெகு சிலருக்கே கிடைக்கிறது. ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் உதவியால், 32 ஆண்டுகள் கழித்து சென்னையில் பள்ளித் தோழிகள் சந்தித்துள்ளனர்.

சேர்த்து வைத்த போட்டோ

சென்னை தி.நகரில் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1982-ம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்த தோழிகள், 32 ஆண்டுகள் கழித்து ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு மீண்டும் சந்தித்தபோது பழைய நினைவுகள் சட்டென்று மலர்ந்தன.

அந்தப் பள்ளியில் படித்த உமா நாராயணன் ஃபேஸ்புக்கில் தங்களது பள்ளிப் புகைப்படத்தை ஒரு நாள் பகிர்ந்துள்ளார். எல்லோரும் அப்பிராணி முகத்துடன் அட்டென்ஷன் போஸில் நிற்க, நடுவில் ஆசிரியைகள் உட்கார்ந்தபடியுள்ள படம்தான் அது. அதைப் பார்த்த அவருடைய தோழிகள் பலரும் உற்சாகமடைந்து, அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற தோழிகளுக்கும் தகவல் போனது. இப்போது 'வாட்ஸ் ஆப் குரூப்' ஒன்றை ஆரம்பித்து பள்ளித் தோழிகள் 23 பேர் வெற்றிகரமாக இணைந்துள்ளனர்.

“இப்போதெல்லாம் வாட்ஸ் ஆப் குரூப்பில் அனைவரும் காலை முதலே குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்துவிடுகின்றனர். என் செல்போன் அமைதியாக இருப்பதே இல்லை. இதனால் என் அலுவலகத்தில் இருப்பவர்கள்கூடக் கொஞ்சம் எரிச்சல் அடைந்துவிடுகிறார்கள் தெரியுமா?,” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஜெயந்தி பாபு.

அசைபோட்ட நேரம்

“ஃபேஸ்புக் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். எனது நண்பர்களின் பழைய புகைப்படங்களைப் பார்த்து அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டுகொள்வது மனதில் உற்சாகத்தைப் பாய்ச்சுகிறது. அடுத்த வாரம் எனது மகள் வாங்கித் தரவிருக்கும் ஸ்மார்ட் போனுக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறார் இக்குழுவில் ஒருவரான மகாலட்சுமி. வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதற்காக இந்த மாற்றம்.

இவர்கள் அனைவரும் சென்னையில் சந்தித்தபோது ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே’ என்று அந்தக் கால ஞாபகங்களைப் பரஸ்பரம் பகிர்ந்து மகிழ்ந்தனர். “காலை 11 மணிக்குத் தொடங்கிய அந்தச் சந்திப்பு மாலை 7.30 மணிவரை தொடர்ந்தது. தி.நகரில் எங்கள் பள்ளிக்கு அருகில் இருந்த ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் எங்களுக்கு இருந்த நட்பு பற்றி, இன்றைக்குப் பேசி கிண்டல் செய்துகொள்ளக்கூடிய அளவுக்கு அந்தப் பேச்சு இயல்பாக இருந்தது. இளமைத் துள்ளலுடன் அந்தக் காலத்துக்கே திரும்பிவிட்டதுபோல் இருந்தது,” என்று உற்சாகம் குறையாமல் பேசுகிறார் இந்தச் சந்திப்பு நடக்க முதன்மைக் காரணமாக இருந்த உமா நாராயணன்.

மீண்டும் போட்டோ

“அன்றைக்கு வெகுளித்தனமான உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டவர்களுடன், இன்றைக்கு முதிர்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முடிவது மனதுக்கு இதமாக இருக்கிறது. வாட்ஸ் ஆப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, ஸ்மார்ட் போன் இல்லாத எங்களது தோழி ஒருவரையும் கட்டாயப்படுத்தி புது போன் வாங்க வைத்துவிட்டோம். எங்களைப் பார்த்து எங்கள் ஜூனியர்களும் ஃபேஸ்புக்கில் தங்களது நண்பர்களைத் தேடி வருகின்றனர்,” என்கிறார் இந்த தோழிகள் கூட்டத்தில் ஒருவரான மதுரா ஜனக்.

மொத்தம் 42 பேர் கொண்ட இந்த தோழிகள் கூட்டத்தில் அனைவரையும் தொடர்புக்கொண்டு அதே பள்ளியில் அதே வகுப்பறையில் மீண்டும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அதுவும் நினைவுகள் அழிக்க முடியாத ஒரு புகைப்படமாகவே இருக்கும்.

SCROLL FOR NEXT