பெண் இன்று

சென்னை மகளிர் திருவிழா: வாசகிகளின் இடைவிடாத கொண்டாட்டம்!

செய்திப்பிரிவு

நெய்வேலி, மதுரை, திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி வாசகிகளை அசத்திய ‘தி இந்து - பெண் இன்று’ மகளிர் திருவிழா, கடந்த ஞாயிற்றுக் கிழமை, மார்ச் 12-ம் தேதி சென்னை வாசகிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நூற்றுக்கணக்கான வாசகிகள் பங்கேற்ற இந்த மகளிர் திருவிழா சென்னை தி.நகர் விஜயா மஹால் அரங்கில் கோலகலமாக நடந்தது. பெண்கள் சுதந்திரமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதை வலியுறுத்திய சிறப்புரைகள், கலக்கல் கொண்டாட்டங்கள், ஆச்சரியப் பரிசுகள் என இந்தத் திருவிழா சென்னை வாசகிகளின் மனதைக் கொள்ளை கொண்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாசகிகளை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே. அசோகன் வரவேற்றார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் பர்வீன் சுல்தானா, வழக்கறிஞர் பி.எஸ். அஜிதா, தமிழக முன்னாள் டிஜிபி திலகவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ரசிக்கவைத்த நாட்டுப்புற நடனம்!

விழாவுக்கு வந்திருந்த வாசகிகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் மாற்று ஊடக மையம் சார்பில் பறையாட்டம், நீர் சிலம்பம், கரகாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம், களியல் ஆட்டம், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை வாசிககள் வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.

வாசகிகளின் படைப்பாற்றல்!

இந்த விழாவில் வாசகிகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் ‘மைமிங்’ போட்டியும் ரங்கோலி போட்டியும் நடைபெற்றன. ‘மைமிங்’ போட்டியில், ‘கடலில் கலந்த கச்சா எண்ணெய்’ என்ற தலைப்பில் நடித்துக்காட்டிய வாசகிகள் முதல் பரிசைத் தட்டிச்சென்றனர். ‘பெண்கள் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ரங்கோலி போட்டியில் தேன்மொழி முதல் பரிசைப் பெற்றார். அத்துடன், வாசகிகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ரப்பர்பேண்ட்டில் செயின் செய்யும் போட்டி, பந்து பாஸ் செய்யும் போட்டி, பொட்டு ஒட்டும் போட்டி, கயிறு முடிச்சு போடும் போட்டி, கோலி-ஸ்பூன் போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்மான போட்டிகள் நடத்தப்பட்டு வாசகிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அனைவருக்கும் பரிசுகள்!

விழாவின் இடையில் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் தொடர்பான கேள்விகளும் சென்னை நகரைப் பற்றிய பொது அறிவு கேள்விகளும் கேட்கப்பட்டு சரியான பதிலளித்த வாசகிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், திடீர் போட்டியில் பாப்-கட் செய்திருந்த இல்லதரசிகள், பையில் புத்தகம் வைத்திருந்த வாசகிகள் உள்ளிட்டவர்களுக்கும் ஆச்சர்யப் பரிசுகள் வழங்கப்பட்டன. வாசகிகள் ஐந்து பேர் பம்பர் பரிசுகளைத் தட்டிச்சென்றனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் கிடைத்ததால் வாசகிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். காலை நிகழ்ச்சிகளை சின்னத்திரை தொகுப்பாளினி சசிகலாவும், பிற்பகல் நிகழ்ச்சிகளை சின்னத்திரை நடிகை தேவி கிருபாவும் தொகுத்து வழங்கினர். மதியம் வாசகிகள் அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.

இந்த விழாவை லலிதா ஜுவல்லரி, சென்னை சில்க்ஸ்,பொன்வண்டு சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் பவுடர், எவர்வின் குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ், மந்த்ரா, ஜெப்ரானிக்ஸ், ஸ்ரீ ஐஸ்வர்யா புடவைகள், மாம்பலம் ஐயர்ஸ், கரூர் ஹெச் டூ ஹெச் ஆரஞ்ச் இம்பெக்ஸ்,

ஹெல்த் பேஸ்கட், மை ட்ரீம்ஸ், நாயுடு ஹால், பொன்மணி வெட்கிரைண்டர், டேஸ்ட்டி, ஹெல்ட்டா செக்கு நல்லெண்ணெய், ஸ்பிக்டெக்ஸ், வானசா ஸ்மார்ட் சானிட்டரி நாப்கின்ஸ், பி வெல் மருத்துவமனை, ரூபி பில்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

SCROLL FOR NEXT