பெண் இன்று

வானவில் பெண்கள்: திட்டமிடாமலும் சாதிக்கலாம்!

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

“அசாதாரணமான விஷயங்கள் தெரிந்திருந்தால்தான் சாதிக்க முடியும் என்பதில்லை. நமக்கு என்ன விஷயம் தெரிந்திருக்கிறதோ, அதில் கூடுதல் ஈடுபாடும் முயற்சியும் காட்டினாலே சாதித்துவிடலாம்’’ என்று டன் கணக்கில் தன்னம்பிக்கையளிக்கும் ஹேமமாலினி, மதுரையில் பெரிய உணவுத் தொழிற்சாலையை நடத்திவருகிறார்.

பாதை போட்ட பாராட்டு

ஹேமமாலினியின் குழந்தைகள் வெளியிடங்களில் தங்கிப் படித்தபோது, அவர்களுக்காக ‘வெரைட்டி ரைஸ் மிக்ஸ்’ தயார் செய்துகொடுத்திருக்கிறார். குழந்தைகளின் நண்பர்கள் அதைச் சாப்பிட்டுவிட்டுப் பாராட்ட, அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்தப் பாராட்டு அவருடைய கணவரின் அலுவலக நண்பர்கள், உறவினர்கள், ஆகியோரிடமிருந்தும் வர ஆரம்பித்தது. அப்போதுதான் ‘வெரைட்டி ரைஸ் மிக்ஸ்’ என்பதையே ஒரு தொழிலாக ஆரம்பிக்கலாம் என்று ஹேமமாலினிக்குத் தோன்றியது. கணவரிடம் சொல்ல, அவரும் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார்.

“என் யோசனை அவருக்குப் பிடித்ததோடு மட்டுமல்லாமல் எல்லா விதத்திலும் அவர் கொடுத்த ஒத்துழைப்பால் இன்று நான் வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கிறேன்” என்று பெருமிதத்தோடு சொல்கிறார் ஹேமமாலினி.

இவரது உணவுத் தொழிற்சாலையில் பத்துப் பெண்கள் வேலைசெய்கிறார்கள். தன் நிறுவனம் மூலம் 14 வகையான ‘வெரட்டி ரைஸ் மிக்ஸ்’ தயாரித்து, பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பிவருகிறார்.

ஆரோக்கிய கேடு

“இது அவசர உலகம். ‘ஃபாஸ்ட் புட்’ கலாச்சார மோகம் அதிகரித்துள்ளது. அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு அருகே சாலையோர உணவகங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றை வாங்கி, அவசர அவசரமாக விழுங்கிவிட்டுச் செல்கிறார்கள். இந்த உணவுகளால் ஆரோக்கியம் கெட்டு, மருத்துவத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கு. நமக்கு வரக்கூடிய பெரும்பாலான நோய்களிலிருந்து நல்ல உணவுப் பழக்கத்தால் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். வீட்டுச்

சமையல் கிடைக்காதவர்களுக்கும், வீட்டில் சமைக்க நேரமில்லாதவர்களுக்கும் என்னுடைய வெரைட்டி ரைஸ் மிக்ஸ் உதவியாக இருக்கும்” என்று சொல்லும் ஹேமமாலினி, புளியோதரை, தக்காளி, பிரியாணி, குஸ்கா, வத்தக்குழம்பு, பூண்டுக் குழம்பு, மிளகுக் குழம்பு, தக்காளிக் குழம்பு, சட்னி வகைகள் போன்றவற்றைத் தயாரித்துவருகிறார்.

“வடித்த சோற்றுடன் வெரைட்டி ரைஸ் பொடிகளைச் சேர்த்துச் சாப்பிடலாம். வேறு எதுவும் சேர்க்கத் தேவையில்லை. சட்னி மிக்ஸ்களைத் தண்ணீரில் கலந்தாலே போதும். இஞ்சி- பூண்டு விழுதுக்கு வரவேற்பு இருக்கு” என்று சொல்கிறார் ஹேமமாலினி. இந்தப் புத்தாண்டில் சில்லி சிக்கன் பேஸ்ட், பெப்பர் சிக்கன் பேஸ்ட், ரசம் பேஸ்ட் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் திட்டமும் உண்டாம்.

வெற்றி சூட்சுமம்

அம்மாவின் கைமணத்துக்கு எப்போதுமே தனிச் சுவை உண்டு. அதையே தன் தொழிலின் ஆதாரமாக வைத்து சாதித்துவருகிறார் ஹேமமாலினி. “விளையாட்டா ஆரம்பித்த இந்தத் தொழில் இன்று பெரியதாக வளர்ந்துநிக்குது. இங்கிருந்து வெளிநாடு செல்லும் பலரும் எங்கள் தயாரிப்புகளை வாங்கிட்டுப் போறாங்க. அதனால வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் இருக்கு” என்று சொல்லும் ஹேமமாலினி, பெரிய திட்டம் எதுவும் இல்லாமலேயேகூட சாதிக்கலாம் என்கிறார்.

“கையில் நிறைய பணம் இல்லையேங்கற கவலை தேவையில்லை. கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நமக்குத் தெரிந்த விஷயங்களைச் சிறப்பாகச் செய்தாலே ஜெயிக்கலாம். மற்றவர்கள் பாராட்டும்படியும் வாழலாம்” என்று சொல்லும் ஹேமமாலினி, தன் சொல்படியேதான் வாழ்கிறார்.

SCROLL FOR NEXT