(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்தியச் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தனி ஒருவராக வலம்வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)
“வரலாற்றின் பாதை நெடுக எண்ணற்ற மன்னர்கள் வந்தார்கள். தலைமுறை தலைமுறையாக ஆண்டார்கள். வரலாற்றில் இடம்பெறாமல் அழிந்து போனார்கள். ஆனால் அசோகரின் பெயர் வரலாறு உள்ள காலம்வரை நட்சத்திரம்போல மின்னிக்கொண்டே இருக்கும்.
ஏனென்றால் அன்பையும், அறிவையும், சமூக நீதியையும் கொண்டு இந்தியாவை ஆண்ட முதல் பேரரசர் அசோகர்!” என பெருமையோடு குறிப்பிடுகிறார் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் ஹெச்.ஜி.வெல்ஸ். மௌரியப் பேரரசர் அசோகர் ஆண்ட உஜ்ஜயினி தேசத்தை (மத்தியப் பிரதேசம்) நோக்கிப் பயணிக்கையில் கடந்த காலத்தின் காட்சிகள் மனதில் ஓடின.
செழித்திருக்கும் நர்மதை தேசம்
இந்தியாவின் மத்தியில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் விந்திய மலைத்தொடரும், சத்புரா மலைத்தொடரும்தான் வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பிரிக்கின்றன. இம்மாநிலம் முழுவதும் மலைத்தொடர்களும் நர்மதை நதியும் நீண்டு பாய்வதால் இயற்கை வளங்கள் செழித்திருக்கின்றன.
கடல் மட்டத்திலிருந்து 1057 மீட்டர் உயரத்தில் உள்ள மைகான் மலையின் அமர்கண்டக் சிகரத்தில் நர்மதை நதி உதயமாகிறது. விந்திய, சத்பூரா மலைத்தொடரில் அருவியாகவும், காட்டாறாகவும் அடர்காடுகளையும் மேடுகளையும் கடந்து ஊருக்குள் நுழைகிறது. நர்மதாபுரத்தில் அகன்ற நர்மதை நதியாக உருவெடுத்து மேற்கு நோக்கி மத்தியப் பிரதேசம் முழுவதும் நீண்டு பாய்கிறது. இந்தியாவின் 5-வது பெரிய நதியான நர்மதை, குஜராத் மாநிலத்துக்குள் நுழைந்து இறுதியில் மகாராஷ்டிரத்தில் அரபிக் கடலில் கலக்கிறது.
நர்மதை நதிக்கரை முழுவதும் கோதுமை, கரும்பு, நெல், சோயாபீன்ஸ், பருப்பு உள்ளிட்ட பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. இந்துக்களின் புண்ணிய நதியாக விளங்குவதால் ஏராளமான கோயில்கள் நர்மதை நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கின்றன. சமணம், பவுத்தம், இஸ்லாம் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களும் நர்மதை நதிக்கரையில் இருக்கின்றன. இந்தக் கோயில்களில் பழங்குடிகள் அதிக அளவில் வழிபடுகின்றனர்.
‘தி ஜங்கிள் புக்’ காட்டுப் பயணம்
அனல் பறக்கும் வெயிலில் நர்மதாபுரத்தைக் கடந்து சியானி காட்டை நோக்கிப் புறப்பட்டேன். சியானியை நெருங்கும்போது அடர்வனத்தின் கதகதப்பையும், நிசப்தத்தையும் உணர முடிந்தது. நீண்டு வளர்ந்திருக்கும் மரங்களும், காட்டின் பரப்பெங்கும் பரந்திருக்கும் மலைக்கொடிகளும், ஆங்கங்கே ஊடுருவிக் கிடக்கும் காட்டுயிரிகள் எழுப்பும் ஒலிகளும் இதயத் துடிப்பை அதிகரித்தன. ஒவ்வொரு 10 கி.மீ. இடைவெளியிலும் ஒரு மலைவாழ் கிராமம் இருக்கிறது. சுமார் 30 குடில்கள் உள்ள அந்தக் கிராமங்களில் பழங்குடிகள் யாரையும் காண முடியவில்லை.
திரைப்படமாக வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற ‘தி ஜங்கிள் புக்’ கதை இந்த சியானி காட்டில்தான் பிறந்தது. இந்தியாவில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் 1893-94 காலகட்டத்தில் சியானி காட்டை மையமாக வைத்து ‘தி ஜங்கிள் புக்’ என்ற கதையை எழுதினார். அடர்காட்டில் சிங்கம், புலி, யானை, கரடி, நரி, கீரிப்பிள்ளைகளுக்கு இடையே தனியாகச் சிக்கிக்கொண்ட மோக்லி எனும் குழந்தையின் வாழ்வை பிரமாண்ட படங்களுடன் சித்தரித்திருந்தார்.
இந்திய வனங்களின் தொன்மையும், மானுட, உயிரின அறநெறியும், இயற்கை நீதியும் சார்ந்த ஜங்கிள் புக்கை காட்சிகளாகப் பார்த்தபோது த்ரில்லாக இருந்தது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் சியானி இன்றும் த்ரில்லாகவே காட்சியளிக்கிறது. இந்தக் காட்டில் தன்னந்தனியாகப் பயணிக்கையில் நான் மோக்லியாகவே உணர்ந்து காட்டாறாக சீறிப் பாய்ந்தேன். சியானி காட்டைக் கடக்கையில் எனதருமை மைக்கி 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்திருப்பதாக மீட்டர் முள் காட்டியது. எனது வாழ்க்கையை மாற்றிய மைக்கியை செல்லமாகத் தட்டிக்கொடுத்துவிட்டு தேக்கு மரக் காடுகளைக் கடந்தேன்.
அசோகரின் அழியா சாதனைகள்
ஜபல்பூரைக் கடந்து ராய்சென் வழியாக சாஞ்சி நோக்கிப் பயணித்தேன். சாலைகளில் கானல் நீர் நதியாகப் பாயும் கடும் வெயிலில் சாலையின் இருபுறத்திலும் கடுகு செடிகள் மஞ்சள் நிறப் பூக்களோடு வரவேற்றன. கிமு 3-ம் நூற்றாண்டின் பேரரசர் அசோகரால் கட்டப்பட்ட பவுத்த நினைவுச் சின்னங்கள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. புத்தரின் நினைவுப் பொருட்களை பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்ட மாபெரும் ஸ்தூபி அரைக்கோள வடிவில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது. இந்தியா மட்டுமில்லாமல் இலங்கை, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்திருக்கின்றனர்.
மண்ணாசையால் போர்களை முன்னெடுத்த அரசர்களுக்கு மத்தியில் உயிரின் அருமையை உணர்ந்த மன்னர் அசோகர். போரைத் துறந்து அறத்தையும், சமூக நீதியையும், அன்பையும் எல்லைகளில் கொடியாக நாட்டியவர். அறிவூட்டும் கல்விக் கூடங்களைத் திறந்தவர். உண்மை சுடரொளியைப் போதிக்கும் பவுத்தத்தைக் கடைப்பிடித்தவர்.
மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் விலங்குகளுக்கும் முதன்முதலாக மருத்துவமனை கட்டியவர். பறவைகளுக்காகவும், பயணிகளுக்காகவும் சாலையோரம் மரங்களை நட்டவர். ஆட்சியாளர் மக்களிடம் சரியான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என சட்டதிட்டங்களை தூண்களில் கல்வெட்டாக செதுக்கி வைத்தவர் அசோகர் என மத்தியப் பிரதேச அரசாங்கம் ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகளில் எழுதி வைத்திருக்கிறது.
போபாலின் பெருந்துயரம்
அன்றிரவு சாஞ்சியில் தலைசாய்த்துவிட்டு, அதிகாலை வேளையில் கோட்டை நகரமான குவாலியர் நோக்கிப் புறப்பட்டேன். மலையோரங்களில் நிலக்கரி, மீத்தேன் எரிவாயு, மங்கனீஸ் போன்ற கனிம வளங்களை மத்திய மாநில அரசுகள் சுரண்டிக்கொண்டிருக்கின்றன. குவாலியரை நெருங்குகையில் தொழில்நுட்ப நிறுவனங்களும், பெரும் தொழிற்சாலைகளும், கனிம தொழிற்சாலைகளும் புகையைக் கக்கியபடி வரவேற்கின்றன. செம்பு மற்றும் வைர உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்குவதாக பேனர்களில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் சிரிக்கிறார்.
பழமையான குவாலியர் நகருக்குள் நுழைகையில் அங்குள்ள அவெஞ்சர் கிளப் நண்பர்கள் என்னை உற்சாகமாக வரவேற்றார்கள். கடந்து வந்த பாதையை அசைபோட்டுக்கொண்டே மதிய உணவைச் சுவைத்தேன். அதன் பிறகு உலகப் புகழ் பெற்ற குவாலியர் கோட்டை, ஜெய்விலாஸ் அரண்மனை, சூரியக் கோயில் ஆகியவற்றைப் பார்த்தேன். குவாலியரை அடுத்துள்ள லஷ்கருக்கு சென்றபோது அழகழகான வண்ண ஓவியங்கள், பளிங்குக் கற்கள், வண்ண ஆடைகள் ஆகியவற்றை மலிவான விலையில் விற்றுக்கொண்டிருந்தனர்.
40 வயதான பார்வையற்ற தொழிலாளி உடைந்த குரலில் கூவ முடியாமல் சைகையிலே கூவி விற்றுக்கொண்டிருந்தார். அவரிடம் பேசுகையில், “முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட போபால் விஷவாயு கசிவில் பார்வை போச்சு. என் உறவினர்களில் பலருக்கு உயிரே போச்சு. இன்னும் சிலர் உடல் சுருங்கி, கைக்கால்கள் சூம்பி, தலை வீங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர். பலர் செத்துப் போயிருந்தாலும், அவர்களது பிள்ளைகளுக்கும் இந்த பாதிப்பு தொடருது. எங்கள மாதிரி பாதிக்கப்பட்டவங்களுக்கு அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை” என சோகம் தோய்ந்த குரலில் சொன்னார்.
மத்தியப் பிரதேசத்தைக் கடந்த பிறகும் போபாலின் பெருந்துயரத்தால் மனம் கனத்தது!
(பயணம் தொடரும்)