என் பன்னிரண்டாம் வயதில் அப்பா காலமானார். பத்து மாதத்தில் இரண்டு தங்கைகளும் இரண்டு வயதில் ஒரு தங்கையும் இருந்தனர். 28 வயதிலேயே கணவரை இழந்த என் அம்மாவைக் காக்கும் பொறுப்பு எனக்கு வந்தது. அப்போது எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் ஐந்து பேருக்கும் அரை வயிற்றுக் கஞ்சி ஊற்றினார் என் பாட்டி. என்னைப் பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தனர். நான் தங்கைகளைப் படிக்கவைத்தேன். என் முதல் தங்கைக்குத் தாத்தா, பாட்டியே திருமணம் செய்து வைத்துவிட்டனர். நானும் அடுத்த தங்கையும் பல்லாவரத்தில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்குப் போனோம். இரண்டு தங்கைகளுக்கு வீட்டை விற்றுத் திருமணம் செய்துவைத்தோம்.
கடமைகள் முடிந்தபோது எனக்கு 48 வயதாகிவிட்டது. இந்த நிலையில் என்னைத் திருமணம் செய்துகொள்ள வரன் வந்தது. சித்தப்பா, மாமா வீட்டாரைத் தொடர்புகொண்டனர். அவருக்கு மூன்று குழந்தைகள். மகளுக்குத் திருமணம் முடித்திருந்தார். ஒரு மகன் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தான், இன்னொருவன் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அந்த மூன்று குழந்தைகளும் என் வீட்டுக்கு வந்து, தங்கள் அப்பாவைத் திருமணம் செய்துகொள்ளும்படி என்னிடம் கேட்டனர். மனைவியைப் பறிகொடுத்தவருக்கு மனைவியாகவும், வளர்ந்த குழந்தைகளுக்குத் தாயாகவும் மாறினேன். எனக்குத் திருமணமான ஒரே வருடத்தில், பெண்ணுக்குப் பிரசவம் ஆனது. பாட்டி பிரமோஷன் கிடைத்தது!
“அம்மா, உங்க சமையல் எங்க அம்மாவைப் போலவே இருக்கு” என்பான் ஒருவன். “எங்க அம்மா ஜாடை உங்களுக்கும் இருக்கறதால நீங்கதான் எங்க அம்மா” என்பான் இன்னொருவன். “நீங்க வந்த பிறகுதான் வீடே சந்தோஷமா இருக்கு” என்று மகள் சொல்வாள்.
ஒருநாள் நானும் என் கணவரும் மட்டும் இருந்தோம். களைப்பில் வாய்விட்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தேன். “பல்லாவரம், பட்டினப்பாக்கம்ன்னு வேலைக்குப் போயிட்டு வர்றே... வசதியானவனைக் கட்டியிருந்தா சந்தோஷமா இருந்திருப்பே. எனக்கு விபத்துல கால் அடிபட்டு மூணு மாசம் வேலைக்குப் போக முடியாம போச்சு. என்னால எவ்வளவு செலவு” என்று சொல்லிக்கொண்டே, கால்களில் தைலம் தேய்த்துவிட்டார் கணவர். எனக்குக் கோபம் வந்தது. “எனக்கு இப்படிப் பணிவிடை செய்யறது பிடிக்காது. ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஓய்வு கொடுங்க போதும்” என்றேன்.
ஞாயிற்றுக் கிழமை வந்தது. கணவர் காபி கொடுத்தார். சின்னவன், “அம்மா, அப்பா வடகறி செஞ்சார், அண்ணன் பூரி மாவு பிசைந்தான், நான் பூரி சுட்டேன். நீங்க டிபன் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க” என்றான்!. “மதியத்துக்குப் பருப்புக் கடைசல், தக்காளி ரசம், வாழைக்காய் வறுவல். இன்னிக்கு உனக்கு என்ன தோணுதோ செய்” என்றார் கணவர். “அம்மா, பூ கட்டி வச்சிருக்கேன், தலை வாரி வச்சுக்கோங்க” என்றாள் மகள்.
எங்கள் வீட்டில் வறுமை குடிகொண்டிருந்தாலும் வற்றாத பாசத்தால் நான் கோடீஸ்வரியாக இருந்தேன். என் அன்பு கணவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றும் பிள்ளைகள் அதே பாசத்துடன் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் என் கணவர்தான். இப்படிப்பட்ட பிள்ளைகளை என்னிடம் முழுமையாக ஒப்படைத்து, தாய்மையைச் சிறப்புற வெளிப்படவைத்த அவரை என்னவென்று சொல்வது! இன்று என் மகன்களுக்குத் திருமணம் முடிந்து மருமகள்களும் என்னை அன்போடு அம்மா என்று கூப்பிடுகிறார்கள். பேரன், பேத்திகளும் வந்துவிட்டனர். அவர்களின் ‘அம்மம்மா’ என்ற அழைப்பு இனிய சங்கீதமாக ஒலிக்கிறது!