பெண் இன்று

கேளாய் பெண்ணே: மாதவிடாய் வலிக்குத் தீர்வு?

செய்திப்பிரிவு

என் தோழிக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டால்தான் வலி குறைகிறது. இந்தப் பிரச்சினை எதனால் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு என்ன?

- வே. தேவஜோதி, மதுரை.

- கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மகப்பேறு மருத்துவர் வசந்தா மணி பதில்.

மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலி வருவதற்கு இரண்டு விதமான காரணங்கள் உள்ளன. ஒன்று, ஒரு சிலருக்கு பருவம் அடைந்த பொழுதிலிருந்து வயிற்று வலி, உடல் வலி, வாந்தி, முதுகு வலி போன்றவை இருக்கும். அவர்களுடைய கருப்பை வாய்ப் பகுதி குறுகியிருப்பதால் இதுபோன்ற வலி ஏற்படலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

மற்றொன்று கருப்பை சார்ந்த பிரச்சினைகள். இதில் இரண்டு வகை உண்டு. முதலாவது கருப்பையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறு கட்டிகள் (congestive dysmenorrhea) இருப்பது. மாதவிடாய் வரும் நேரத்தில் கருப்பையின் அருகில் உள்ள பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் காரணமாக வலி ஏற்படும். இரண்டாவது காரணம், கருப்பையின் உள்ளே கட்டிகள் (spasmodic dysmenorrhea) இருப்பது. இந்தக் காரணத்தினாலும் மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலி ஏற்படலாம். பிரச்சினை என்ன என்பதை முறையாக அறிந்துகொள்ளாமல் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வது எதிர்காலத்தில் கருப்பை சார்ந்த பாதிப்புகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.

மாதவிடாய் வரும்போதெல்லாம், தொடர்ச்சியாக வலி இருந்தால் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். அவர்களின் ஆலோசனைக்குப் பிறகே வலி நிவாரண மாத்திரைகளை எடுக்க வேண்டும்.

பேருந்தில் நீண்ட நேரம் பயணம் செய்த பிறகு கால் கீழ்ப்பகுதி வீங்கிவிடுகிறது. இதற்கு காரணம் என்ன, இதைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?

- வள்ளியம்மாள் அனந்தநாராயணன், கன்னியாகுமாரி.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை எலும்பியல் துறை தலைமை மருத்துவர் செந்தில்குமார் பதில்.

பொதுவாக இதுபோன்ற பிரச்சினைகள் பெரியவர்களுக்குதான் வரும். இதயத்தில் இருந்து வரக்கூடிய ரத்தம் மீண்டும் இதயத்துக்கே திரும்பிப் போகாமல், கணுக்காலில் தங்கிவிடுவதால் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை வீட்டில் இருந்தபடியே சரி செய்துவிடலாம். காலின் முன் பாதத்துக்கு அழுத்தம் கொடுத்து உடற்பயிற்சி செய்தால் இந்தப் பிரச்சினை சரியாகி விடும். அதேநேரம் இதயக் கோளாறு, சிறுநீராகப் பிரச்சினை போன்றவற்றாலும் கால்களில் வீக்கம் ஏற்படலாம். இதை முறையான சிகிச்சை மூலமே சரிசெய்ய முடியும். பேருந்தில் பயணிக்காமல் இருக்கும்போதும், கால்களில் வீக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

உங்கள் கேள்வி என்ன?

‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in

SCROLL FOR NEXT