வேதபுருஷனின் ஆறு அங்கங்கள்
1. சிக்ஷா என்பது நாசி என்றும்
2. கல்பம் என்பது கரங்கள் என்றும்
3. வியாகரணம் என்பது வாக்கு என்றும்
4. நிருத்தம் என்பது செவி என்றும்
5. சந்தஸ் என்பது பாதம் என்றும்,
6. ஜோதிடம் என்பது நேத்திரம் (கண்கள்) என்றும் கூறப்படுகின்றது.
வேதத்தின் கண்கள் என்று கூறப்படுகின்ற ஜோதிடம்,
ரிக்வேதத்தில் ‘ஆர்ச்ச’ என்றும்
யஜுர் வேதத்தில் ‘ஜ்யோதிஷம்’ என்றும்
அதர்வண வேதத்தில் ‘ஆதர்வண’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
சாம வேதத்தின் ‘ஜோதிடம்’ இப்போது நம்மிடம் இல்லை.
ஜோதிட சாஸ்திரத்தை சிவ பெருமானாகப்பட்டவர் உமா மகேஸ்வரியாகிய பார்வதிக்கு உபதேசித்தும், பார்வதி சுப்ரமண்ய ஸ்வாமிக்கும், சுப்ரமண்யர் குரு முனிக்கும், அவர் தனது சிஷ்யர்களுக்கும் உரைத்தார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் ஜோதிடக்கலையானது
1. அத்திரி 2. ஆங்கிரஸ 3. வசிஷ்டர் 4. நாரதர் 5. கஸ்யபர் 6. அகஸ்தியர் 7. போகர் 8. புலிப்பாணி 9. வியாசர் 10. பராசரர் 11. ரோமர் 12. கர்கர் 13. புகர் 14. சௌனகர் 15. கௌசிகர் 16. ஜனகர் 17. நந்தி 18. ஜெயமுனி ஆகிய 18 சித்தர்களாலும் வழிவழியே வளர்க்கப்பட்டு வந்தது.
உலகின் முதல் வான சாஸ்திர நிபுணர், குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த ஆர்யபட்டர் ஆவார். இவர்தான் முதலில் ‘பஞ்சாங்கம்’ கணித்து வெளியிட்டார். இவருடன் சம காலத்தில் வாழ்ந்த வராகமிகிரரும் ஒரே அரசவையில் ஆஸ்தான வித்வான்களாகப் பதவி வகித்தார்கள். இருவருமே வான சாஸ்திரக் கலையில் உயர்ந்தவர்கள்.
ஆரியபட்டர் பூமி உருண்டை என்றும் பூமி உட்பட சில கோள்கள் வான மண்டலத்தில் தன்னிச்சையாக ஒரு குறிப்பிட்ட நியமத்துடன் வலம் வந்துகொண்டே இருக்கின்றன என்றும் அந்தக் காலத்திலேயே கண்டறிந்து கூறியவர். இவர், தான் கண்ட உண்மைகளை வரிசைப்படுத்தி
வாரம் (கிழமைகள்)= 7
திதிகள் (15+15)=30
நட்சத்திரங்கள்=27
யோகம்=27
கரணம்-11
என்ற ஐந்து விதமான அங்கங்களின் கணிதம், அன்றாட நடைமுறை ஆகியவற்றை விளங்கும் வகையில் ஆண்டுதோறும் பஞ்சாங்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அந்நூலில் ஒரு நாளில் விளங்கும் மேற்கண்ட பஞ்ச அங்கங்களைத் தெளிவாக வெளியிட்ட காரணத்தால்தான் அதற்குப் பஞ்சாங்கம் எனப்பெயர் வந்தது.
வாரகமிகிரரின் நூல்கள்
பிருகத் ஜாதகம், பிருகத் சம்ஹிதை, பிருகத் விவாக படலம், லகு ஜாதகம், மற்றும் யோக யாத்ரா, பிரச்ன மகோதாதி, பிரச்ன சந்திரிகா, (பௌவிஷ சித்தாந்தம், ரோமச சித்தாந்தம், வசிஷ்ட சித்தாந்தம், சௌர சித்தாந்தம், பிதாமக சித்தாந்தம்) என்ற பஞ்ச சித்தாந்த நூல்கள் மற்றும் தைய்வக்ஞ வல்லபம் போன்ற நூல்களை எழுதியிருக்கிறார்.