பரதநாட்டியத்துக்குப் பாடுவது என்றால், பக்கவாத்தியம் போலச் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. நடனமணிகள் தேர்ந்தெடுக்கும் பாடல்களைக் குறுகிய காலத்தில் பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயம். ஒத்திகைகளுக்குச் செல்லவேண்டிய அவசியம். அபிநயங்கள் செய்துமுடிக்கும்வரை குறிப்பிட்ட வரியைத் திரும்பத்திரும்பப் பாடவேண்டிய நிர்ப்பந்தம். அதேநேரத்தில் கேட்பவர்களுக்கும் சலிப்பு தட்டாமல் மனோதர்மத்துடன் பாடவேண்டும். இவ்வளவு சவால்கள், பரதநாட்டியத்திற்குப் பாடுவதில் இருக்கிறது.
இந்தச் சவால்களில் ஜெயித்து சாதனை படைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் பத்மா சேஷாத்ரி சகோதரிகளான ரந்தினியும் ரோஷினியும்.
பல்லவி பாடுவதில் நிபுணரான டி.ஆர்.சுப்பிரமணியத்திடம் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இசை பயின்றிருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்தே (9, 11 வயது) மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். தமிழகத்தின் பிரபல சபாக்களிலும் டெல்லி, ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களின் முன்னணி சபாக்களிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்கள். கனடா நாட்டில் பாரதி கலா மன்றத்தின் அழைப்பை ஏற்று, ராகம்-தானம்-பல்லவி நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.
அகில இந்திய வானொலி நிலையத்தின் பி-ஹை கிரேட் இசைக் கலைஞர்களான இவர்கள், பாரத் கலாச்சாரின் யுவகலா பாரதி விருதைப் பெற்றிருக்கிறார்கள். பரதநாட்டியத்துக்குப் பாடும் சிறந்த கலைஞர்கள் என்னும் விருதைக் கிருஷ்ண கான சபா இவர்களுக்கு வழங்கியிருக்கின்றது.
அலர்மேல்வள்ளி, மீனாட்சி சித்தரஞ்சன், கே.ஜே.சரசா, ஷோபனா, உமா முரளிகிருஷ்ணா, அனிதா குஹா ஆகிய பிரபல நாட்டியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு பத்மா சேஷாத்ரி சகோதரிகள் பாடியிருக்கின்றனர். உள்ளூர் மேடைகள் மட்டுமில்லாமல் அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மொரீஷஸ், ஜிம்பாப்வே, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற உலக நாடுகளுக்கும் சென்று, புகழ்பெற்ற நடனமணிகளின் சலங்கை ஒலிக்கு ஆதாரமாக தங்களின் குரல் இசையை அளித்திருக்கிறார்கள்.
பரதநாட்டியத்துக்குப் பயன்படும் வகையில் பல பதவர்ணங்களையும் இவர்கள் பாடி வெளியிட்டுள்ளனர்.