பெண் இன்று

சேனல் சிப்ஸ்: டும் டும் டும்?

மகராசன் மோகன்

சன் டிவியின் ‘பாசமலர்’ சீரியலுக்குப் பின் சின்ன இடைவேளை எடுத்துக்கொண்டு கேரள சுவரோவியக் கலையில் ஆர்வம் செலுத்திவருகிறார் சந்திரா.

‘‘முன்பெல்லாம் ஒவ்வொரு சீரியலும் ஐந்து வருஷம், ஏழு வருஷம்னு போகும். கடைசி அத்தியாயம் வரைக்கும் ஆர்வத்தோட பார்க்குற விதத்துல கதையும் இருக்கும். இப்போது ஒன்றிரண்டு தொடர்களைத்தான் அந்த மாதிரி நகர்த்த முடிகிறது. அதுவும் சமீபகாலமா இந்தி, ஆங்கில சீரியல்களை விரும்பிப் பார்க்குற அளவுக்கு, நம்ம சீரியல்களை பலரும் பார்க்கிறதில்லை.

இது மாறணும்னு நினைக்கிறேன். ‘காதலிக்க நேரமில்லை’, ‘பாசமலர்’னு இதுக்கு முன்னாடி நான் நடிச்ச சீரியல்களில் என் கதாபாத்திரத்துல ஏதாவது ஒரு தனித்துவம் இருக்கும். அந்த மாதிரி சீரியல்கள் அமையட்டும்னு காத்திட்டிருக்கேன். இதுக்கு நடுவுல வீட்டில் திருமண பேச்சும் ஓடிக்கிட்டிருக்கு. கண்டிப்பா இந்த வருஷம் முடியறதுக்குள்ள டும்.. டும்..டும்!’’ என்கிறார், சந்திரா.

சர்வதேச அனுபவம்!

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் சிவரஞ்சனிக்கு, சர்வதேச அளவிலான சேனல்களில் வழங்கப்படுவதைப் போன்ற அனுபவரீதியிலான நிகழ்ச்சிகளை நம்ம ஊர் சேனல் வழியே பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் சமீபத்திய ஆசையாம்.

‘‘சின்னத்திரைக்கு வந்து இரண்டு வருஷம் ஓடிருச்சு. படிப்படியாக ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக்கிட்டதாலதான் இன்றைக்கு நல்ல செய்தி வாசிப்பாளர்ங்கிற அடையாளத்தோடு பயணிக்க முடியுது. எந்த ஒரு விஷயமா இருந்தாலும் முதல்ல அதைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, மற்றவர்களுக்கும் பகிரணும்னு நினைப்பேன். அப்படித்தான் செய்திகளை வழங்கி வர்றேன். அதேபோல சர்வதேச அளவில் கவனிக்கும்போது ஊடகங்களின் வளர்ச்சியும், அவற்றின் பங்களிப்பும், செய்தியை வழங்கும் உத்திகளும் வியக்க வைக்கின்றன.

இந்த மாதிரியான புதிய விஷயங்களுக்காகப் பல்வேறு மாநிலங்கள்ல பயணிச்சு, வெவ்வேறு விதமான மக்கள், அவர்களின் கலாசாரம் உள்ளிட்டவற்றைக் கத்துக்கிட்டு வந்து, நம் மக்களுக்கு சேனல் வழியே வழங்கணூங்கிற எண்ணம் சமீப நாட்களாக மனசுல ஓடிக்கிட்டு இருக்கு. அதற்கான சூழலை உருவாக்கணும்!” என்கிறார், சிவரஞ்சனி.

SCROLL FOR NEXT