வராஹமிகிரரின் மகன் ஸ்ரீ பிருதுயஜஸ் என்கிற பூகீர்த்தி என்பவர் ‘ஹோரா சாரம்’ மற்றும் ‘ஹோரா ஷட்பந்நாசிகா’ ஆகிய நூல்களை எழுதினார். கி.பி. 169-ம் நூற்றாண்டில் ‘யவனேஸ்வரர்’ என்பவர் இயற்றிய யவன ஜாதகம் என்ற நூலே மிகப் பழமையானது.
கி.பி. 268-ம் நூற்றாண்டில் ‘ஸ்பூர்ஜித்துவஜன்’ என்பவர் நான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட ‘யவன ஜாதகம்’ என்ற நூலை இயற்றினார். சாராவளி என்பது மற்றொரு முக்கியமான வடமொழி நூல். இந்த ஜோதிட சாஸ்திர மூலகிரந்தத்தை எழுதி வெளியிட்டவர் கல்யாண வர்மா.
ஜாதக அலங்காரம்
கீரனூர் நடராஜன் என்பவர் கி.பி.1725-ம் ஆண்டுக்கு முன்பு வட மொழியில் உள்ள ஹோரசாரம், சாராவளி, பராசாரியம், சந்தான தீபம், பிருகத் ஜாதகம், சர்வார்த்த சிந்தாமணி, மணிகண்ட கேரளம், சம்பு நாதம் போன்ற பல கிரந்தங்களின் சாராம்சத்தைத் திரட்டி ‘சாதகலங்காரம்’ என்ற நூலை விருத்தங்கள் என்னும் செய்யுள் வடிவில் இயற்றினார்.
இப்படி வடமொழி நூல்களில் பிரசித்தி பெற்ற ஜோதிடம் பண்டைக் காலத்தில் தமிழ் இலக்கியத்திலும் முக்கிய இடம் பெற்றுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் ஜோதிடம்
பண்டைய தமிழ் இலக்கியத்தில் ஜோதிடத்தைப் பற்றிய செய்திகள் நிறைய காணப்படுகின்றன. ஜோதிடர்கள் நிமித்தகன், கணிகன், காலக்கணக்கன், தெய்வக்ஞன் என்று போற்றப்பட்டனர். இவர்களில் ஜோதிடம், இலக்கியம் இரண்டிலும் சிறந்து விளங்கியவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஏன்ற பிரபஞ்ச சமத்துவத்தை மண்ணில் விதைத்த சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றனார்.
கம்பராமாயணத்தில் திருமணம், முடிசூட்டல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நன்னாள் நியமித்த செய்தி பேசப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திர சாரத்தில் சந்திரன் வந்து நின்று உச்சம் பெறுகின்ற நாளில் திருமணம் நடந்தால் பிற்காலம் மிகவும் சிறப்புற்று விளங்கும் என்று நம்பினார்கள். சங்க இலக்கியத்தில் அரண்மனை அமைக்க மனையடி சாஸ்திர விதியை நாடினர். ஜோதிட அறிஞர்கள் நாழிகை கணக்குப் பார்த்து திருமுறைசார்த்து செய்திருக்கின்றனர்.
சித்திரை மாதம் 10-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் பகல் பொழுதில் 15 நாழிகை அளவில் சூரியன் நடு உச்சியில் இருக்கும்போது நிலத்தில் இரண்டு கம்புகளை நாட்டி, நிழல் எந்தத் திசையிலும் சற்றும் விழாத நிலையை அறிந்து மனைக்கு அடிக்கல் இட்டு திருமுறை சார்த்திய செய்தியை
விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்
இருக்கோற் குறிநிலை வழுக்காது குடக்கோல்
பொறுதிறந் சாரா அரை நாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணுதிற் கயிறிட்டுத்
தே எங் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனைவகுத்து
உலவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு
என்கிற சங்கப் பாடல் கூறுகிறது.
மற்ற கலைகளைப் போல் ஜோதிடக்கலையும் நாம் காணக்கூடிய ஒரு நடைமுறை அறிவியல் கலை (Dilectic Science) என்பதை உணர வேண்டும் என்று அறப்பளீசுர சதகம் கூறுகிறது. வானியல், அறிவியல் உபகரணம் ஏதும் தோன்றாத அந்தக் காலத்தில் சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெறும் காலங்களை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு கூறியிருந்தது விந்தையிலும் விந்தை.
அங்கம் துடித்தல்
தொல்காப்பியத்தில் ‘ஆவொடுபட்ட நிமித்தம் கூறலும். செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்’ என்று கூறப்பட்டுள்ளது. தலைவன் வெளியூருக்குப் போக இருக்கிறான். அந்தச் செய்தி கிடைக்கும் நேரம் பசு ஒன்று பால் நிறைய கறந்திருக்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது. எனவே தலைவனுக்கு நல்லது நடக்கும் என்று கருதி மகிழ்வுடன் விடை கொடுத்து தலைவி அனுப்பி வைத்தாள் என்பதை இவ்வரிகள் விளக்குகின்றன.
இரவில் நிமித்தங்கள் (சகுனங்கள்) வெளிப்படத் தெரியாது. எனவே பிறர் பேசும் வார்த்தைகள், பறவைகளின் ஒலி முதலியன கேட்டு சுபமா? அசுபமா? என அறிந்து பலன் கண்டறிந்தனர். இத்தகவலை
படை இயங்கு அரவம்
பாக்கத்து விரிச்சி
என்ற தொல்காப்பிய வரிகள் புலப்படுத்துகின்றன.
ஆண்களுக்கு வலதுபுறமும், பெண்களுக்கு இடது புறமும் கண், புருவம், தோள் முதலியன துடித்தல் நல்ல நிமித்தங்களாகும்.
பொலந்துடி மருங்குவாய் புருவம் கணிமுதல்
வலந்துடிக்கின்றன வருவது ஒர்கிலேன்
என்று கம்பராமாயண சுந்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
எதிரிடை நட்சத்திரச் செய்தி
மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரம் தெரிய, பங்குனியின் 15 நாட்களில் உத்தர நட்சத்திரம் மாசுபட, மூலம் எதிரிடை நட்சத்திரமாக நிற்க, மிருகசீரிடம் அடியில் நிற்க, ஓர் எரி வெள்ளி கிழக்கோ வடக்கோ செல்லாது கீழே விழுந்த நேரம் சேர அரசன் யானைக்கட்சேய் மாந்தேரல் சேரலிரும் பொறை இறந்தான் என்பதை புறநானூறு
ஆடியல் ஆழந்குட்டத்து
ஆரிருள் அரையிருளின்
முடப்பனையைத்து வேர்முதலா
கடைக்குளத்துக் கயம் காயப்
பங்குனி ஆயர் அழுவத்துத்
தலைநாண் மீன் நிலை திரிய
தொன்னாண்மீன் துறைபடியப்
பாசி செல்லாது ஊசி முன்னாது
அளக்கர் தினை விளக்காக..
என்ற வரிகள் அறிவிக்கின்றன.
- தொடரும்
ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்