சுடுமண்ணில் இளம் பெண்களுக்கான மெல்லிய நகைகளையும் இல்லத்தரசி களுக்கான பாரம்பரிய நகைகளையும் அற்புதமாகச் செய்து பிரமிக்கவைக்கிறார் சென்னை வில்லிவாக்கத்தில் வசிக்கும் சுதா கண்ணன்.
“பெண்கள் எவ்வளவு படித்தாலும் நல்ல வேலையில் இருந்தாலும் திருமணம், குழந்தைகள் என்று ஆனவுடன் வேலையை உதறிவிட்டு, வீட்டுக்குள் முடங்கி விடுகிறார்கள். நான் அப்படி இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். சுயதொழில் மூலம் எனக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக்கொள்வதற்காகவே சுடுமண் (டெரகோட்டா) நகைகளைச் செய்யக் கற்றுக்கொண்டேன். ஓவியம் வரையத் தெரிந்தவர்களுக்குத்தான் செயற்கை நகைகள், சில்க் திரெட் நகைகள், சுடுமண் நகைகள் செய்யத் தெரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கைவினைக் கலைஞராக மாறலாம் என்பதற்கு நானே உதாரணம்” என்கிற சுதா கண்ணன், ஆன்லைனில் தேடிப் பிடித்து சுடுமண் நகைகள் செய்துவது பற்றித் தெரிந்துகொண்டார். இரண்டே மாதங்களில் சுடுமண் நகைகள் இவர் கைகளுக்கு வசமாகின.
கம்மல், நெக்லஸ் செட், ரோப் செயின், ஜிமிக்கி, பிரேஸ்லெட் போன்ற நகைகளைப் பார்க்கும்போது, நகைகள் மீது ஆர்வம் இல்லாதவர்களுக்கும் ஆர்வம் வந்துவிடுகிறது. சுடுமண் நகைகள் செய்வதற்கு மிகவும் அவசியமானது கற்பனை வளம். ஒவ்வொருவரும் பிரத்யேகமான நகைகளை அணிய விரும்புவார்கள். அதனால் பல டிசைன்களில் நகைகளைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் சுடுமண் நகைகளை உறவினர்கள், நண்பர்களிடம் விற்பனை செய்துவந்தவர், டிசைன்கள் பரவலாகப் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றவுடன் தொழிலாக விரிவுபடுத்தினார்.
“யார் வேண்டுமானாலும் சுடுமண் நகைகளைச் செய்யக் கற்றுக்கொள்ள முடியும். ஆர்வம் உள்ளவர்களுக்கு என் வீட்டிலேயே நகை செய்யக் கற்றுக் கொடுத்துவருகிறேன். நம் கற்பனை வளத்தையும் ஆர்வத்தையும் தொழிலாக மாற்றிக்கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் சுதா கண்ணன்.