பிரிந்துவிடுகிற தம்பதியரில் யாருக்குப் பாதிப்பு அதிகம்? கல்வி, வேலை, சொத்து, சமூக அந்தஸ்து அனைத்திலும் பெண்கள் ஆண்களைவிட வாய்ப்பு குறைந்தவர்களாகவே உள்ளனர். எனவே, பாதிப்பு பெண்களுக்கு அதிகம். பாதிக்கப்பட்ட பெண், ஆண் அல்லது இருவரும் சேர்ந்தேகூடத் திருமணத்தை முறித்துக்கொள்ளலாம். அவர்கள் தங்களது சுயத்தையும் கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் காப்பாற்றிக்கொள்வதற்கு விவாகரத்துகள் அவசியம்தான். ஆனால், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகாமல், கல்வி, நல்ல சூழல் ஆகியவற்றை அவர்களுக்குக் கொடுத்து, மனக்குழப்பங்களை ஏற்படுத்தாமல் பிரிவது பெற்றோரின் கடமை.
சபிதாவும் அர்ஜுனும் திருமணத்துக்கு முன்னும் பின்னும் காதலர்களாகவே வாழ்ந்தனர். அந்த வாழ்க்கையின் சாட்சியாக இரண்டு குழந்தைகள் பிறந்தனர். 10 வருட திருமண வாழ்க்கை இப்போது நீதிமன்றத்துக்கு வந்துவிட்டது.
சந்தேகத்தால் விளைந்த பிரிவு
விவாகரத்து வழக்கு, குழந்தைகள் கஸ்டடி வழக்கு, சேர்ந்து வாழக் கோரும் மனு, குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனு என்று சபிதாவும் அர்ஜுனும் பல வழக்குகளைத் தாக்கல் செய்தனர். விவாகரத்து தருவதில் சபிதாவுக்கு விருப்பமில்லை. விவாகரத்து கிடைத்தால் மட்டுமே குழந்தைகள் கஸ்டடியைத் தருவதாகப் போராடிவருகிறார் அர்ஜுன்.
வசதிகள் அதிகரித்ததால் சபிதா, தன்னையும் குழந்தைகளையும் கவனிக்கத் தவறிவிட்டார். அலுவலகப் பணியாளர் களுடன் தன்னைத் தொடர்புபடுத்திப் பேசியதால், மனம் வெறுத்து, உடல் நலம் வீணாகி, சிரமப்படுவதால் விவாகரத்து வேண்டும் என்று அர்ஜுன் கேட்கிறார். ஒத்துப்போகவில்லை என்பதால் முதலில் இருவரும் வெவ்வேறு அறைகளுக்குச் சென்றனர். நேரடியாகச் சந்தித்துக்கொள்வதைத் தவிர்த்தனர். குழந்தைகள் மூலம் பேசிக்கொண்டனர். ஒருவர் முடிவை அடுத்தவர் மறுத்தால் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரச்சினை பெரிதாகாமல் இருப்பதற்காக அர்ஜுன் சில நாட்கள் வெளியில் தங்கியபோது, பிரச்சினை மேலும் பெரிதானது.
சபிதா, அர்ஜுனின் அலுவலகம் செல்ல ஆரம்பித்தார். அங்கே பிரச்சினைகள் வளர்ந்ததால், சபிதாவை வலுக்கட்டாய மாக வெளியே தள்ளினார் அர்ஜுன். சபிதா காவல் நிலையம் செல்லப் போவதாகச் சொன்னார். குழந்தைகளை அழைத்துப் பேசினால் யார் தவறு செய்தவர் என்று தெரியும் என்றார் அர்ஜுன்.
குழந்தையால் மலர்ந்த வாழ்வு
இந்த ஆறு மாதக் காலத்தில் 90 குழந்தைகள் மனரீதியான பாதிப்புக்குள்ளாயினர். மகளுக்கு அடிக்கடி உடல் நலம் குன்றியது. பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டும் குணமாகவில்லை. இறுதியில் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப்படி மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
மருத்துவர் குழந்தையிடம் பேசினார். பிறகு சபிதாவையும் அர்ஜுனையும் அழைத்து, குழந்தைக்கு மன அழுத்தம் இருப்பதாகவும் அதுவே உடல்ரீதியான பிரச்சினைகளைக் கொண்டு வந்திருக்கிறது என்றும் சொன்னார். இருவரும் அதிர்ந்து போனார்கள்.
இருவரும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் குழந்தைகளுக்காக வாழ்ந்தனர். அப்படியும் மகள் பழைய கலகலப்பான பெண்ணாக மாறவில்லை. எனவே, அவர்களுடைய வழக்கறிஞரைச் சந்தித்து, என்ன செய்யலாம் என்று கேட்டனர். அவரின் ஆலோசனையின்படி இருவரும் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் சென்றனர். ஒன்றாகத் திரைப்படங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். மாடியிலும் கீழ் வீட்டிலும் என்று தனித் தனியாக வாழ்ந்தாலும் பள்ளியில் விடுவது, டியூஷனுக்கு அழைத்துச் செல்வது, பிறந்த நாட்களுக்கு நண்பர்ளை அழைப்பது, சுற்றுலா செல்வது என்று பட்டியலிட்டுச் செய்தனர். சபிதாவும் அர்ஜுனும் குழந்தைகளுக்காகத் தங்கள் பொறுப்புகளை உணர்ந்தனர். இப்போது 13, 11 வயது குழந்தைகள், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதைப் புரிந்துகொண்டனர். குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இருவரும் வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
குழந்தைகள் கஸ்டடி விஷயத்தில் சட்டம் சொல்வதை சபிதாவும் அர்ஜுனும் தெளிவாகப் புரிந்துகொண்டனர். அதாவது பிரித்துக்கொள்வதற்கோ வென்று விடுவதற்கோ குழந்தைகள், பெற்றோரின் சொத்துகளும் அல்ல; பகடைக் காய்களும் அல்ல. குழந்தைகளின் நல்ல எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றம் எடுக்கும். மேலும் பிரச்சினை வரும்போது தாய், தந்தை இருவரில் யார் குழந்தைகளின் நல்ல சிறப்பான எதிர்காலத்தை உறுதிசெய்வார்களோ அவர்களிடம்தான் குழந்தைகளின் கஸ்டடியை நீதிமன்றம் கொடுக்கும். குழந்தைகளின் நலனே முதன்மையானது என்ற அடிப்படைக் கருத்தை வைத்து, ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்கையும் ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் என்பதைச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com