பெண் இன்று

பெண் அரசியல் 02: ஓட்டுப் போடுவதும் அரசியல்தான்

பாலபாரதி

தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைக்கூட பல நாடுகளில் பெண்கள் போராடிதான் பெற்றிருக்கிறார்கள். பெண்கள் வாக்குரிமை பெற்றதே அரசியல் பங்கேற்பின் ஒரு அங்கம்தான். இந்திய விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் பெண்கள் தங்கள் பங்கேற்பைத் தொடர்ந்து உறுதிப்படுத்திவந்துள்ளார்கள். ஆனால் பாராளுமன்றம், சட்டமன்றங்களில் இவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் இருக்கிறது என்ற கேள்வி மிக முக்கியமானது. அதிகாரப் பகிர்வில் பெண்கள் திட்டமிட்டே ஒதுக்கப்படுகிற ஆணாதிக்க நிலையே எல்லா மட்டங்களிலும் நிலவுகிறது; நீடிக்கிறது.

முதல்முறையாக இந்தியப் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துப் பெண் எம்.பி.க்கள், அனைத்து மாநில பெண் எம்.எல்.ஏ.க்களுக்கான மாநாடு 2016 மார்ச் 8-ல் அரசு சார்பில் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தில் இருந்து 19 பெண் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டோம்.

அந்த மாநாடு ஒரு விஷயத்தை மிகத்தெளிவாக உணர்த்தியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இடத்தில் பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளது என்பதே அது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு அரசியல் சட்டம் நிறைவேற்றப்படாமல் பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்ய முடியாது.

அந்த மாநாட்டில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் அதைத் தன் உரையில் சரியாகவே குறிப்பிட்டார். “பாராளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்கள் 7 சதவீதமும் நாடு முழுதும் உள்ளாட்சிகளில் 9 சதவீதமும் இருக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநாடுகள் எதற்கு?

இது குறித்து அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செய்தியாக வெளியானதோடு நின்றுவிட்டது. பெண் சபாநாயகர் தலைமை வகித்த அந்த மாநாட்டின் தீர்மானம் இதுவரையிலான நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் விவாதிக்கப்படவே இல்லை. அந்த மாநாட்டின் தொடர்ச்சியாக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மாநாட்டில் கலந்துகொண்ட அடையாளமாக ஒரு புகைப்படம் மட்டுமே பின்னாளில் பிரதிநிதிகளுக்கு வந்து சேர்ந்தது. அரசின் கடமை அத்துடன் முடிந்ததா? பிறகு எதற்கு அரசு செலவில் அப்படியொரு மாநாட்டை நடத்தினார்கள்?

இதைச் சொல்கிறபோது இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. 2010 தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் சமூக மானியக் கோரிக்கையின் மீது விவாதம் நடந்தது. ஆளும் கட்சியான திமுக உறுப்பினர்கள் பேசியபோது அவர்களது அரசு பெண்களுக்கு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து விளக்கினார்கள். எதிர்க்கட்சியான அஇஅதிமுக உறுப்பினர்கள், அவர்களது அரசு பெண்களுக்கு ஆற்றிய திட்டங்களைப் பற்றி பட்டியலிட்டார்கள். இது வழக்கமாக நடப்பதுதான்.

அப்போது மத்தியில் ஐக்கிய முற்போக்கு ஆட்சி நடந்துகொண்டிருந்தது. மிக முக்கியமான காங்கிரஸ் தலைவர் எழுந்து மாநில மானியக் கோரிக்கையின் மீது பேசத் தொடங்கி, மத்திய அரசு பெண்களுக்கு எத்தனை சிறப்பான திட்டங்களை எல்லாம் நிறைவேற்றிவருகிறது என்பதை அவருக்கே உரிய பேச்சாற்றலோடு விளக்கினார். அவரிடம் நான் சிறு விளக்கம் கேட்க அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்க, அவரும் அனுமதித்தார்.

“இவற்றை எல்லாம் நிறைவேற்றிய உங்கள் அரசு ஏன் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவில்லை?” என்றேன். எதையோ கேட்க நினைத்து கேட்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என் கேள்வியை ஆதரித்து மேசையைத் தட்டினார்கள். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் வழக்கம் போல ரஷ்யா, சீனா என்று கேள்விகளோடு சென்று வந்தவர், “நிச்சயம் நிறைவேற்றுவோம் சகோதரி” என்று சிரித்தபடியே சொல்லி நிலைமையை அழகாகச் சமாளித்தார். இப்படிப் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்படாமல் பாஜக, காங்கிரஸ் அரசுகள் பேசிப் பேசியே காலத்தைத் தள்ளிப்போடும் அவலம் தொடரவே செய்கிறது.

(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com

SCROLL FOR NEXT