* கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை.
* ரியோ ஜிம்னாஸ்டிக் அனைத்துச் சுற்றுப் தங்கப் பதக்கத்தை வென்ற அடுத்த கணமே, ட்விட்டரில் டிரெண்டிங் ஆன பெயர்.
* ‘சிமோஜி’ - அவருடைய பெயரில் வந்துள்ள இமோஜியின் பெயர்தான் இது.
* ரியோ ஒலிம்பிக்கில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வீராங்கனையின் பெயர்.
“நான் அடுத்த உசேன் போல்ட்டோ மைக்கேல் ஃபெல்ப்ஸோ கிடையாது. நான்தான் ‘முதல்’ சிமோன் பைல்ஸ்” - தன்னைப் பற்றி அவரே கூறியுள்ள இந்தக் கூற்று, அவர் யார் என்பதை மிகச் சிறப்பாக வரையறை செய்துவிடுகிறது.
விளையாட்டுக் களம் என்றாலும் சரி, பேச்சென்றாலும் சரி இந்தத் தனித்தன்மைதான் சிமோன் பைல்ஸ். ரியோ ஜிம்னாஸ்டிக் களங்களில் நகர்ந்தும் காற்றில் பறந்தும் வித்தைகளை நிகழ்த்துவதற்கு முன் அமெரிக்காவில் மட்டும் பிரபலமாக இருந்த அவர், இப்போது உலகப் பிரபலம்.
தனிச் சிரிப்பு
அமெரிக்காவில் ஆப்பிரிக்கக் குடும்பம் ஒன்றில் பிறந்து, அம்மாவின் அரவணைப்பு கிடைக்காத துயரத்தைக் கடந்து, எல்லோரும் உலகப் புகழை அடைந்துவிடுவதில்லை. ஆனால், ரியோ ஜிம்னாஸ்டிக் களங்களைத் தன் தனிப் பாணி புன்னகையால் இன்றைக்குப் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறார் 19 வயது சிமோன் பைல்ஸ்.
பயிற்சியாளருடன்
இன்றைய தேதிக்கு உலகின் ஆகச் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அவர்தான். வரலாற்றின் மிகச் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் பட்டியலில் தன் இடத்தை இந்தச் சின்ன வயதிலேயே உறுதி செய்துவிட்டார்.
மூன்று நாளில் புது வித்தை
அமெரிக்காவில் ஒஹையோ மாகாணம் கொலம்பஸில் 1997-ல் பிறந்தவர் சிமோன். சின்னக் குழந்தையாக இருந்தபோது, அவருடைய அம்மாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையால் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள முடியாமல் போனது. அதனால் ஐந்து வயதிலேயே தாத்தா ரொனால்ட், பாட்டி நெல்லியின் அரவணைப்பில் வளர்ந்தார்.
ஆறு வயதானபோது, பள்ளி சார்பில் ஒரு ஜிம்னாஸ்டிக் களத்துக்கு அழைத்துச் சென்று வீரர், வீராங்கனைகள் தாவுவதையும் காற்றில் சுழன்று கரணம் அடிப்பதையும் காட்டினார்கள். இன்றைக்கு ஜிம்னாஸ்டிக் களங்களை அதிரவைத்துக் கொண்டிருக்கும் சிமோனுக்கு, ஜிம்னாஸ்டிக்ஸ் அப்படித்தான் அறிமுகம் ஆனது. கொஞ்ச நாளிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற, சிமோனுக்கு சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஜிம்னாஸ்டிக் வித்தைகளுக்குச் சரியான அடித்தளம் அமைக்கும் வயது அது. தொடர் பயிற்சிகள் காரணமாக நடுநிலை வகுப்புகளுக்குப் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே படித்தார் சிமோன்.
“பயிற்சி மையத்தில் மற்ற குழந்தைகளும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளும் ஒரு மாதமோ, ஒரு வருடமோ எடுத்துக்கொண்டு கற்றுக்கொண்டு வெளிப்படுத்தும் புதிய ஜிம்னாஸ்டிக் நகர்வை, சிமோன் மூன்றே நாட்களில் நூல் பிடித்த மாதிரி செய்துகாட்டி அனைவரையும் அசத்திவிடுவாள்” என்று பழசை நினைவுகூர்ந்து பாராட்டுகிறார் அவருடைய பயிற்சியாளர் அய்மீ பூர்மேன். அன்று தொடங்கி இன்றுவரை சிமோனின் பயிற்சியாளர் இவர்தான்.
ஜிம்னாஸ்டிக் களத்தில் நளினமும் அழகும் சிறக்க அவர் வெளிப்படுத்துவது ஃபுளோர் எக்சர்சைஸ் எனப்படும் தளப் போட்டிதான். ஜிம்னாஸ்டிக்கில் அவருக்கு ரொம்பப் பிடித்ததும் அதுதான்.
பதக்கக் குவியல்
16 வயது நிறைந்த வீராங்கனைகளே ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்க முடியும். 2012 லண்டன் ஒலிம்பிக்கின்போது அவருக்கு 16 வயது நிறைவடைந்திருக்க வில்லை. அதன் காரணமாக, சற்றே தாமதமாக 2013-ம் ஆண்டு உலக சாம்பியன் ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலிருந்து அவரது ஆதிக்கம் தொடங்கியது.
இன்று வேறெந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை விடவும், பல்வேறு பிரிவுகளில் அதிக உலக சாம்பியன் தங்கப் பதக்கங்களை சிமோன் தன்வசமாக்கிக் கொண்டுள்ளார். உலக சாம்பியன் பட்டங்களைத் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வென்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இந்த ஒலிம்பிக்கில் ஐந்து பிரிவுகளில் நான்கு தங்கமும், ஒரு வெண்கலமும் வென்றுள்ளார். மற்ற நான்கு பிரிவுகளிலும் தங்கம் வென்ற அவர், பீம் பிரிவில் வெண்கலமே வெல்ல முடிந்தது. அப்போதும்கூட தன் அக்மார்க் புன்னகையுடன் பதக்கத்தைக் கழுத்தில் ஏந்திக்கொண்டார் சிமோன். ஒரு வீராங்கனைக்கு இதைவிட வேறென்ன தகுதி வேண்டும்?
இன்னும் ஐந்து வருடம்
ஒரு பக்கம் பதக்கங்களைப் பெற்றுக் குவிக்கும் சிமோன், ஜிம்னாஸ்டிக் தள நடைமுறைகளில் புதிய நகர்வு முறையையும் 16 வயதிலேயே கண்டுபிடித்து விட்டார். இரட்டைக் கரணம் அடித்து, உடலைப் பாதியளவு திருப்பி, கடைசியாகத் தரையிறங்குவது - இதுதான் சிமோன் பைல்ஸ் நகர்வு. இந்த நகர்வின் உச்சத்தில் தன்னுடைய உயரத்தைப் போல இன்னொரு மடங்கு அவர் தாவுவது பலரும் கற்பனை செய்ய முடியாத வித்தை. 2013-ம் ஆண்டில் இந்த நகர்வை அவர் கண்டறிந்தார். இந்த நகர்வுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுப் பெருமைப்படுத்தப் பட்டிருக்கிறது.
ஒலிம்பிக் பேலன்ஸ் பீம் பிரிவில் சற்றே சறுக்கியதால், தங்கப் பதக்க வாய்ப்பு அவருக்குச் சறுக்கியது. ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஐந்து தங்கம் வெல்லும் சாதனையும் இதனால் தவறிப் போனது. ஒலிம்பிக் பதக்க வேட்டையில் இது அவருடைய முதல் களம்தான்.
அவருடைய ஜிம்னாஸ்டிக் மேதைமையைப் பார்க்கும்போது, ரியோ ஒலிம்பிக்குடன் அவருடைய சாதனைகள் முடிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. அவரது எதிர்காலச் சாதனைகளுக்காக டோக்கியோ மைதானங்களும் ஒலிம்பிக் ரசிகர்களும் இப்போதே காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
குழந்தைப் பருவத்தில் அம்மாவின் மடியில்
பிடித்த விஷயம்: நண்பர்களுடன் கடற்கரைக்குச் செல்வது.
பொழுதுபோக்கு: மீன்பிடித்தல், நடனம் (கால்கள் சும்மா நிற்காது), புதிய ஃபேஷன் புதிய உடைகள்.
மோசமான பழக்கம்: தங்கையை மிரட்டி வேலை வாங்குதல்.
விளையாட்டில் மிகப் பெரிய தடை: என்னை நானே சந்தேகிப்பது.
குறிக்கோள்: மிகச் சிறந்த ‘சிமோனாக’ இருப்பது.