பத்தாம் வகுப்பு படிக்கும் அகல்யாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் வெல்வதுதான் அடுத்த இலக்கு. பொதுத்தேர்வு தயாரிப்புகளுக்கு மத்தியிலும் பயிற்சியைத் தொடர்கிறார். அடுத்து நடக்க இருக்கும் மாநிலப் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.
வீரத்துக்குப் பேர் போனது வேலூர் மாவட்டம் என்றால், சத்துவாச்சாரி பகுதி, பளுதூக்கும் வீரர்களுக்குப் பேர் போனது. வீட்டுக்குக் குறைந்தது ஒருவர் விளையாட்டுத் துறையில் இருப்பார். அந்த வகையில் அகல்யாவின் குடும்பமும் விளையாட்டுப் பின்னணி கொண்டதுதான். இவருடைய தாத்தா கால்பந்தாட்ட வீரர். அப்பா துரைபாபு, சதுரங்கத்தில் தேர்ந்தவர். அக்கா நீலாவதி, தடகள வீராங்கனை. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் விளையாட்டுத் துறையினரைப் பார்த்து வளர்ந்த அகல்யாவுக்கும் விளையாட்டில் ஆர்வம் அதிகமானதில் வியப்பேதும் இல்லை. ஆனால் அந்த ஆர்வத்தைச் சரியான விதத்தில் பயன்படுத்தி, வெற்றித்தடம் பதித்திருப்பதில்தான் கவனம் ஈர்க்கிறார் அகல்யா.
“ஸ்கூல் படிக்கும்போதே விளையாட்டில் ஆர்வம் எனக்கு. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே குண்டெறிதல், வட்டெறிதல், எறிபந்து ஆகியவற்றில் மாவட்ட அளவிலான போட்டிகளைச் சந்தித்தேன். கடந்த வருடம் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளின்போதுதான் வேலூர் மாவட்ட கோச் நாகராஜ் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் என்னைப் பளு தூக்கும் பிரிவில் முயற்சிக்கச் சொன்னார். அவரே அதற்குப் பயிற்சியும் தந்தார். அவரது வழிகாட்டுதலில் ஒரு மாதப் பயிற்சியிலேயே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றேன். அதில் வெண்கலப் பதக்கம் வென்றேன். பிறகு மூன்று மாதம் கழித்துத் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று அதிலும் வெண்கலம் வென்றேன். டிசம்பர் 27ஆம் தேதி மாநில அளவிலான போட்டியில் தங்கம் வெல்வதுதான் என் இலக்கு. அதற்காகத் தீவிரமாகப் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறேன்” என்று சொல்லும் அகல்யா, தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஊக்கமும் வெற்றிக்குக் கைகொடுத்தது என்கிறார்.
தாத்தாவின் வழிகாட்டுதல்
“தேசியப் போட்டிகளுக்காக ஒடிஷா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறோம். அப்போதெல்லாம் என் அப்பாதான் எனக்குத் துணையாக வந்திருக்கிறார். அவரது தொழிலைவிட என் வெற்றியை அதிகம் விரும்புகிறவர் அவர். அம்மாவுக்கு விளையாட்டு தொடர்பாக எதுவும் தெரியாது என்றாலும், எனக்குப் பக்க பலமாக இருப்பார். தோற்றுப்போனால் துவளக் கூடாது என்று எப்போதும் சொல்வார். ஆனால், இதுவரை நான் பங்கேற்ற போட்டிகளில் தோல்வியைச் சந்தித்ததே இல்லை. என் சீனியர்களும் நண்பர்களும் எனக்கு விளையாட்டின் நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பார்கள். இவர்கள் அனைவரையும்விட என்னை அதிகமாக உற்சாகப்படுத்துபவை என் தாத்தாவின் நம்பிக்கை வார்த்தைகள்தான். விளையாட்டுத் தொடர்பான பல செய்திகளை எனக்குச் சொல்வார். அவரது அனுபவங்களே எனக்கு நல்ல வழிகாட்டி” என்கிறார் அகல்யா. இதுவரை 65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டவருக்குச் சீனியர்களுடன் 100 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு ஜெயிக்க ஆசையாம்.
தூண்டுகோல் தேவை
வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் அதிகமாக இருந்தாலும் போதிய வசதிகளும் அரசின் வழிகாட்டுதலும் இருந்தால், இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்த முடியும் என்கிறார் அகல்யாவின் தந்தை துரைபாபு. “இந்தப் பகுதியில் இருக்கும் வீரர்கள் அனைவருமே கடுமையான உழைப்பாளிகள். அவர்களிடம் இருக்கும் திறமையைச் சரியான முறையில் வழிப்படுத்தினால் நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வேலூர் மாவட்டம் சார்பில் பலர் தேர்வாகலாம். ஆனால் வறுமை, அவர்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடுகிறது” என்று வருத்தத்துடன் தன் கோரிக்கையைப் பதிவு செய்கிறார் துரைபாபு.
சுடர்விடும் விளக்கானாலும் தூண்டுகோல் தேவைதானே.
படங்கள்: வி.எம். மணிநாதன்