பெண் இன்று

களம் புதிது: அனைவருக்குமே லாபம்!

செய்திப்பிரிவு

தலைநகரில் நிர்வாணமாக ஓடித் தங்கள் கையறு நிலையை விவசாயிகள் உணர்த்திய பிறகும் அரசின் பார்வை அவர்கள் மீது படாததே இன்றைய விவசாயிகளின் பரிதாப நிலைக்குச் சாட்சி. உலகத்துக்கே அன்னமிடும் அவர்களின் கரங்களுக்கு, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலையை நிர்ணயிக்கும் சக்தி இருப்பதில்லை. விவசாயப் பொருட்களுக்கு வியாபாரிகள்தான் இப்போதுவரை விலையை நிர்ணயிக்கிறார்கள்.

“பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்தான் விவசாயிகள் நிலத்தில் இறங்கிப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிக வட்டிக்குக் கடன் வாங்கியும் நகை, வீடு போன்றவற்றை அடமானம் வைத்தும்தான் விவசாயத்தை அவர்கள் வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் ரத்தத்தையே வியர்வையாக்கி உழைத்தாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில்லை. விவசாயிகளின் இந்த நிலைதான் என்னைப் புதிய பாதையில் நடக்கவைத்திருக்கிறது” என்று சொல்கிறார் கவிதா. நமக்கு மூன்று வேளை உணவு கிடைத்தால் போதும் என்று நினைக்கிறவர்களுக்கு மத்தியில், அந்த உணவை உற்பத்தி செய்கிறவர்களைப் பற்றி யோசிக்கிறார் கவிதா.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கவிதா. பி.எஸ்சி. கணினி அறிவியல் படித்துள்ள இவர் இயற்கை விவசாயப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் வகையில் அண்ணாநகர் பகுதியில் இயற்கை விவசாயப் பொருட்களை விற்பனை செய்துவருகிறார். இயற்கை விவசாயம் குறித்து முகநூல் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

“இந்தியா முழுவதும் 17 மாநிலங்களைச் சேர்ந்த மூவாயிரம் சிறு, குறு விவசாயிகளிடமிருந்து இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களைக் கொள்முதல் செய்கிறோம். செயற்கை உரங்கள், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாத விவசாயிகளிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்குகிறோம். ஒரு பொருளை உற்பத்தி செய்பவர்களுக்குத்தான் உற்பத்திக்கான செலவுகள் தெரியும். எனவே உற்பத்திப் பொருட்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்கின்றனர். அவர்கள் சொல்லும் விலைக்குப் பொருட்களை வாங்குகிறோம். இதனால் விவசாயிகளுக்குத் திருப்திகரமான வருமானம் கிடைக்கிறது” என்று சொல்கிறார் கவிதா.

அரிசி, பருப்பு, வாசனைப் பொருட்கள் உள்ளிட்ட 300 வகையான பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.

“நஞ்சில்லா உணவுப் பொருட்கள் மக்கள் பயன்பாட்டுக்கு முழுவதுமாக வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எனவே நஞ்சில்லா உணவுப் பொருட்களை விற்பனை செய்ய ஆர்வமாக உள்ள நபர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம். மதுரை மாவட்டத்தில் மட்டும் வாரத்துக்கு 450 முதல் 600 கிலோவரை இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை விற்பனை செய்கிறோம். வெளியூர்களுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்” என்று சொல்லும் கவிதா, இயற்கைச் சாகுபடியில் இருக்கிற நடைமுறைச் சிக்கல்களையும் தெரிந்துவைத்திருக்கிறார்.

“பல ஆண்டுகளாகச் செயற்கை உரங்களையும் ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தியதால் நிலங்களின் வளம் மட்டுப்பட்டிருக்கும். மண்ணின் வளத்தை மீட்டு, இயற்கை விவசாயம் செய்யும்போது எடுத்ததுமே அதிக அளவு மகசூல் கிடைக்காது. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் நல்ல மகசூல் பெற முடியும். அதனால்தான் இயற்கை வேளாண் பொருட்களுக்குக் கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. நஞ்சில்லா உணவு ஆரோக்கியமானது என்பதை மக்களும் இப்போது புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். உற்பத்தியாளர், விற்பனையாளர், வாடிக்கையாளர் ஆகிய மூவருமே பலன் பெறும் இடமாக இருக்கிறது எங்கள் விற்பனை மையம்” என்கிறார் கவிதா.

படங்கள்: ஆர்.அசோக்

SCROLL FOR NEXT