பெண் இன்று

என் பாதையில்: நினைவில் நிற்கும் பால் ஐஸ்!

செய்திப்பிரிவு

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் பிடிக்கும். அந்தக் காலத்தில் விதவிதமான சுவைகளில் ஐஸ்கிரீம் கிடையாது. சாதா ஐஸ் காலணாவுக்கும் சேமியா ஐஸ், ஜவ்வரிசி ஐஸ் போன்றவை அரையணாவுக்கும் கிடைக்கும். பிறகு பால் ஐஸ் வந்தது. பத்து பைசாவுக்குக் கிடைக்கும் அதன் நிறமும் சுவையும் இன்றும் நினைவில் நிற்கிறது. இன்று சாக்லேட், பட்டர் ஸ்காட்ச், பிஸ்தா, ஸ்ட்ராபெர்ரி, கார்னேட்டோ, இத்தாலியன் பிளாக்கரண்ட் என்று பல்வேறு வகை ஐஸ்கிரீம்களைச் சுவைத்தாலும் அந்தப் பால் ஐஸுக்கு நிகர் எதுவும் இல்லை!

தற்போது என் மகனுக்கும் மகளுக்கும் நாற்பது வயதுக்கு மேல் ஆகிறது. இன்று அவர்களிடம் ஐஸ்கிரீம்களுக்கு ஓட்டு போடச் சொன்னால் பாஸ் ஐஸுக்குத்தான் போடுவார்கள். நான் அப்போது கோவில்பட்டியில் இருந்தேன். என் மகனுக்கு இரண்டு வயது. மதியம் 1.30 மணிக்கு பெல் அடித்துக் கொண்டே பால் ஐஸ் வண்டி வரும். அந்த மணிச் சத்தம் கேட்டவுடன் என் மகன், “அம்மா பால் ஐஸ்” என்பான்.

அதை வாங்கி அவன் கையில் வழியவிட்டு, வாயெல்லாம் ஒட்டிக்கொண்டு நிற்பதைப் பார்க்க ஆசையாக இருக்கும். என் அப்பா அவனைப் பால் ஐஸ் என்று ஆசையாகக் கூப்பிடுவார். இன்றைய குழந்தைகள் கப்பில் ஐஸ்கிரீம் வைத்து, ஸ்பூனால் எடுத்து நளினமாகச் சாப்பிடுகிறார்கள். இன்று என்னதான் ஏராளமான சுவையிலும் அளவிலும் ஐஸ்கிரீம்கள் சந்தைக்கு வந்தாலும் கையில் வழியவிட்டுக் கொண்டு சாப்பிட்ட அந்த நாட்களின் நிறைவுக்கு ஈடாகாது!

- ஆர்.பிரேமா ரத்தினவேல், சென்னை.

நீங்களும் சொல்லுங்களேன்...

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள், தன்னம்பிக்கையோடு எழுதுங்கள்.

SCROLL FOR NEXT