பெண் இன்று

இசையால் வசமாகும் ஆரோக்கியம்

என்.ராஜேஸ்வரி

இசை கேட்டு செடி, கொடிகளே விரைவாக வளரும் என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இசை, மனிதர்களின் மனநலனை மட்டுமல்ல உடல்நலனையும் காக்கும் என்பதை நிதர்சனமாக்கிவருகிறார் டாக்டர் டி. மைதிலி. ஆசியாவிலேயே இசை மூலம் நோயைக் குணப்படுத்தும் இசை மருத்துவர் இவர் ஒருவரே.

இசை மூலம் பரவும் நேர்மறையான அதிர்வுகள் கேட்பவர்களின் உள்ளத்துக்கு ஊக்கத்தை அளித்து, வாழ்வின் தரத்தை உயர்த்தும் என்பதைத் தனது ஆராய்ச்சியின் மூலம் இவர் நிரூபித்திருக்கிறார். இவர் பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவின் நாற்பது ஆண்டு கால இசை மாணவி.

முதுகலை உளவியல் முடித்த பின், முனைவர் ஆராய்ச்சி பட்டத்துக்காக பள்ளி மாணவர் களிடையே இசையை அறிவுசார் உளவியலாகப் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ந்தபோது ஆச்சரியகரமான முடிவுகள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தொடர்ந்த ஆராய்ச்சியின் விளைவாக மனித வாழ்வை மேம்படுத்தும் பல இசைக் கோவைகளைக் கண்டுபிடித்தார்.

உடல்வலியை நீக்கிக் குணப்படுத்துதல், குழந்தைகளைச் தூங்கச் செய்தல், இளைப்பாறுதல், குழந்தை அழுகையை நிறுத்துதல், தலைவலி மற்றும் மைக்ரேன் தலைவலி நீக்குதல், அறிவூட்டல் மற்றும் புத்தாக்கம், மன அழுத்தம் மற்றும் நோவு நீங்குதல், தூக்கம் மற்றும் இளைப்பாறுதல், கருவுறுதலும் குழந்தையும், மன அமைதி, இதயத்துக்கு இசை, பயம் மற்றும் கவலை, அறிவுக் குவிப்பு மற்றும் நினைவாற்றல், மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயைச் சீர்படுத்துதல் போன்றவற்றை இசையை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்ச், சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பத்து மொழிகளில் எழுதவும், படிக்கவும், பேசவும் திறமை கொண்டவர். இரு கைகளாலும் ஒரே நேரத்தில் வலக்கையால் ஒரு மொழியிலும் இடக்கையால் வேறொரு மொழியிலும் எழுதுவாராம். கல்வியில் பல தங்கப் பதக்கங்களை வென்றவர்.

நான்கு ஆண் மகன்களுக்குப் பின் பிறந்த பெண்ணான இவருக்குத் தெரியாதது ஒன்றுமிருக்கக் கூடாது என்று அம்மா அடிக்கடி சொல்வாராம்.

மனநலம் குன்றிய குழந்தைகளைப் பார்க்கச் சென்றிருந்தபோது, இதற்கு ஏதாவது செய்யக் கூடாதா என்று கேட்டிருக்கிறார் டாக்டர் மைதிலியின் அம்மா. தாயின் கருவுக்குள்ளேயே சிசுவின் மூளையைப் பலப்படுத்திவிட்டால் இந்த நிலையைத் தவிர்த்து விடலாமே என்ற எண்ணத்தில் எழுந்ததுதான் கருசிசுவுக்கான இசைக் கோவை.

இது போல் சுமார் ஐம்பது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவர், கர்நாடக சங்கீத மேடைப் பாடகர், பேச்சாளர், குழந்தை, இதயம், நரம்பு மற்றும் உளவியல் இசை சிகிச்சையாளர், கட்டுரையாளர், கல்வியாளர், கவிஞர், பயிலரங்க இசை விரிவுரையாளர் என்று தன் எல்லைகளை விஸ்தரித்தபடியே இருக்கிறார். பன்முகத் திறமைகளைக் கொண்ட இவரது புதுமையான இசைக் கோவை, உலகளாவிய இந்திய இசை அகாடமியான ‘கிமா’ இசை விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT