அம்மா, சோறு போன்ற வார்த்தைகள் குழந்தைகள் நம்மிடம் பேசும் முதல் மொழி. இதற்கடுத்த இடம் கதைகளுக்கு. கதை கேட்காமல் தூங்கும் குழந்தைகள் உண்டா? வயிற்றுப் பசிக்கு அடுத்தபடியாக குழந்தைகள் உணர்வும் அறிவும் வளர, அவர்களுக்கு ஏற்படும் பசி கதைப் பசி. குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குச் சொல்லப்படும் கதைகளே அவர்களின் உலகத்தைக் கட்டமைக்கின்றன. குழந்தைகளுடன் சமுதாயம் தொடங்கும் இந்த முதல் உரையாடலை நம்மில் பலரும் கவனிக்கத் தவறுகிறோம். இந்த இடத்திலிருந்து நாம் மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்பதை உணர்ந்து அந்தத் தளத்தில் வெற்றிகரமாகத் தனது பங்களிப்பைச் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவருடைய, ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா…’ என்ற பாடல் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒலிக்க வேண்டிய தாலாட்டுப் பாடல்.
வேப்ப மர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பி விடாதே
நீ வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்து வெம்பி விடாதே
பகுத்தறிவைத் தாலாட்டுப் பாடலாக்கிய அந்த மகா கவிஞனும் சின்னப் பயலுக்குதான் சேதி சொன்னார். சின்னப் பெண்ணை அவரும் மறந்துவிட்டார். விளையாட்டு உலகம் அவளுக்கில்லை என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆழ்மன சிந்தனை ஒருவேளை அவரிடமும் இருந்திருக்கலாம்.
பெண்ணுக்குத் தாலாட்டு
இந்த இடத்தில் இதற்கு முன்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும். தமிழ் இலக்கியத்திலேயே பெண் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடலே இல்லையாம். முதற்கட்ட சுயமரியாதைத் திருமண இணையரான குருசாமி- குஞ்சிதம் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தபோது இந்த வருத்தத்தை அவர்கள் கவிஞர் பாரதிதாசனிடம் பகிந்துகொள்ள, அவர் அந்தக் குழந்தை இரசியாவுக்காக எழுதிய பாடல்தான் இது.
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!
வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!
இதுதான் தமிழ் எழுத்துலகம் பெண் குழந்தைகளுக்குக் கண்ட முதல் தாலாட்டு.
இவ்வாறு தமிழ் எழுத்துலகம் முதலில் பெண் குழந்தையைப் புறக்கணித்து நிற்கிறது. பெண்ணுக்குக் குழந்தைப் பருவ சித்திரங்கள் இல்லை. குழந்தை என்றால் இங்கு கண்ணன்தான். ராதை அவனுக்குக் காதலியாகவே அறிமுகம். பெண் குழந்தை இல்லை. காதலிதான் இருக்கிறாள். தமிழ் எழுத்துலகம் காதலியையே தேடுகிறது. அவளையே வர்ணிக்கிறது. அப்படியெனில் பெண்ணுக்கான குழந்தைப் பருவம் எங்கே?
பிற மொழிக் கதை என்றாலும் சிண்ட்ரெல்லா கதை மிகவும் புகழ் பெற்றது. நமது குழந்தைகளில் பெரும்பாலும் சிண்ட்ரெல்லா கதையைக் கேட்டிருப்பார்கள். சிண்ட்ரெல்லா தாயில்லாப் பெண். மாற்றாந்தாய் கொடுமைக்கு ஆளாகிறாள். கடைசியில் அவளைத் திருமணம் செய்துகொள்ள ஓர் இளவரசன் வருகிறான். அவள் துன்பங்கள் முடிவுக்கு வருகின்றன. அவள் வாழ்க்கை மகிழ்ச்சியடைகிறது. பெரும்பாலும் இதே பாணிக் கதைகள். பெண் குழந்தைகள் இதையே கேட்டு வளர்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று புரியவைக்கப்படுகிறது. அது என்னவென்றால் அவர்கள் அனைவரும் ஓர் இளவரசரின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதுதான்.
ராஜகுமாரன் வருவானா?
ஒரு பெண்ணுக்கும் ஏன் ஆணுக்குமேகூட உடல் ரீதியாக இயல்பாக ஒரு துணையைத் தேட வேண்டிய கட்டத்துக்கு வெகு முன்னதாகவே, அவர்கள் உணர்வுகளில் இந்தக் கனவு திணிக்கப்பட்டுவிடுகிறது. இத்துடன் சுற்றி நடக்கும் தடபுடலான ஆடம்பரத் திருமணங்களும் சடங்குகளும் இந்தக் குழந்தைகள் மனதில் திருமணமே தங்கள் வாழ்வின் இலக்கு என்பதான கனவை அழுத்தமாக வரைந்துவிடுகின்றன. ஒருவகையில் திணிக்கப்படும் இந்தக் கனவு, குழந்தைகளின் யதார்த்தமான உலகத்தைக் களவாடிவிடுகிறது.
பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் வளர்ப்பு முறையே அவளை ஓர் ஆணுக்கான பொருளாக தயாரிப்பதாகவே தொடர்கிறது. ஐந்து வயதில் ஓட யத்தனிக்கும், மரத்திலேற யத்தனிக்கும் பெண் குழந்தைகளை ஓர் அதட்டல் தடுத்து முடக்கிப் போடுகிறது. “ஏய் நீ விழுந்து கையை காலை உடைச்சுக்கிட்டா பிறகு எவண்டி உன்னைக் கட்ட வருவான்?” என்ற இந்தக் குரலை கேட்டு வளராதவர்கள் நம்மில் எத்தனை பேர்? கை கால் உடைந்துவிடக் கூடாது என்ற அக்கறை தேவையாகக்கூட இருக்கலாம். ஆனால் உன்னை கட்டிக்கொள்ள ஓர் ஆண் வராவிட்டால் உன் கதி என்ன என்ற கேள்வி அவள் மனதை நிரந்தர ஊனமாக்குகிறது. அவள் காலைப் பாவாடை தடுக்கிறது. மனதை பெற்றோரின் வார்த்தைகளே தடுக்கின்றன.
பால்ய விவாகம் என்ற சடங்கைதான் நாம் ஒழித்திருக்கிறோம். அந்தத் தத்துவத்தை நாம் இன்னும் வாழவைத்துக் கொண்டே இருக்கிறோம். கணவன் வீட்டுக்குப் பதிலாக தாய் வீட்டில் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனதில் திணிக்கப்பட்ட கனவோ கணவன் என்னும் அந்த இளவரசன் பாத்திரம். தன்னைக் காப்பாற்ற, தான் பணிவிடை செய்யவேண்டிய அந்த ராஜகுமாரனின் குதிரைக் குளம்பொலி சத்தத்துக்காகக் காத்திருக்கும் காலமே அவர்கள் தாய் வீட்டிலிருக்கும் காலமாக இருக்கிறது.
(இன்னும் தெறிவோம்)
கட்டுரையாளர்: பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk