அலமுவுக்கு 29 வயது. மனநல மருத்துவரைப் பார்க்கணும் என்று தொலைபேசியில் சொன்னார். “நான் மனநல ஆலோசகர், மாத்திரை மருந்து எதுவும் கொடுக்க மாட்டேன். என்னுடன் பேசுவதன் மூலம் வேண்டுமானால் உங்களுக்கு உதவ முடியும்” என்று சொன்னேன். ‘அப்படியா’ என்று தொடர்பைத் துண்டித்தவர், அரை மணி நேரம் கழித்து மீண்டும் என்னைத் தொடர்புகொண்டார். “சரி... உங்களையே முதலில் பார்த்துவிடுகிறேன். அதன் பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரைப் பார்க்கிறேன்” என்றார்.
அலமு என் கண்களை நேரடியாகச் சந்திக்காமல் எனக்குப் பின்னாலிருந்த ஜன்னலைப் பார்த்தபடியேதான் பேசினார். அவரது குரல் கமறலாகத் திணறித் திணறி வெளிப்பட்டது.
“என்ன உங்களுக்கு பிரச்சினை” என்று நான் அவரிடம் கேட்டேன்.
“எனக்குக் காலையில் எழுந்திருப்பதற்கே முடியவில்லை. நண்பகல் 12, பிற்பகல் 1 மணி என நான் எழுந்திருப்பதைப் பார்த்துத் தினம் தினம் வீட்டில் அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கறேன். அவர்கள் சொல்லும் எந்த விஷயத்தையும் என்னால் செய்ய முடியவில்லை. எதற்குமே நான் லாயக்கில்லை. நான் ரொம்பவும் பலவீனமாக உணர்கிறேன். செத்துப் போயிடலாம்னு இருக்கு. என்னால எதுவுமே செய்ய முடியலை. எப்பவும் காரணமே தெரியாத சோகம் என்னை ஆட்டிப்படைக்குது” என்றார் அலமு.
‘தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே’ என்னும் பழைய பாடலைக் கேட்டிருப்பீர்கள். மனிதர்களின் ஆரோக்கியத்துக்குத் தூக்கம் மிகவும் அவசியம். அதே நேரத்தில் சராசரியாக எட்டு மணி நேரத்துக்கு மேலாகவும் சிலர் தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது, காலையில் 10 மணிவரை தூங்குவது எனச் சிலர் பழகியிருப்பார்கள். ஆனால், அலமு மாலையில் ஏழு மணிக்குப் படுத்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ள முடிவதில்லை, சோர்வாக இருக்கிறது என்றார்.
அவரிடம் பேசியதில் எனக்கு ஒரு விஷயம் மிகவும் நிச்சயமாகத் தெரிந்தது. அவருக்குத் தன் மேல் நல்லவிதமான புரிதல் இல்லை. மரியாதை இல்லை. நம்முடைய வாழ்வில் பல அனுபவங்கள் நமக்குக் கிடைக்கும். அதை நாம் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்கிறோம் என்பது முக்கியம். இந்த அடிப்படையில் ஒன்றல்ல, இரண்டல்ல; 12 முறை அலமுவும் நானும் இடைவெளி விட்டுச் சந்தித்துப் பேசியிருக்கிறோம்.
நாய்க்கு மன அழுத்தம்?
பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம் என ஒவ்வொரு பருவமாக நாங்கள் பேசினோம். வீட்டில் அவர் ஒரு நாய் வளர்த்துவந்தார். நாயைத் தான் சரியாகப் பார்த்துக் கொள்வதில்லை என்ற எண்ணம் அலமுவுக்கு அதிகமாக இருந்தது. “நான் எப்பப் பார்த்தாலும் சோர்வாக இருப்பதால் அவனுக்கும் (நாய்) அந்த மன அழுத்தம் வந்திடுமோன்னு பயப்படறேன்” என்றார்.
ஒருமுறை அவர் நாயோடு வாக்கிங் போனபோது, தெருவில் இருக்கும் சில நாய்கள் அவரது வளர்ப்பு நாயைக் கடித்துக் குதறிவிட்டன. தையல் போடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. தான் சரியாகக் கவனித்துக்கொள்ளாததால்தான் தன்னுடைய நாய்க்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்ற வருத்தத்தில் இருந்தார். தாள முடியாமல் அழுதார்.
மாற்றுப் பார்வை
நாய் கடிபட்ட விஷயத்தில் அவர் பார்க்கும் பார்வை முழுவதும் நெகட்டிவாகத்தான் இருந்தது. நாய் கடிபட்டதற்கு தான்தான் குற்றவாளி என அலமு நம்பினார். இந்த இடத்தில் நான் பேசினேன்.
“பாதிக்கப்பட்ட நாயை நீங்கள்தானே ஒருமணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியிருக்கிறீர்கள். சரியான நேரத்தில் போனதால்தானே உங்களுடைய நாய் இன்று நன்றாக இருக்கிறது? அதை ஏன் நீங்கள் யோசிக்கவில்லை?” என்றேன்.
இந்தக் கோணத்தில் அவரை யோசிக்கவைத்ததும் நாயோடு அவர் பேசியது, பாடியது என்று பல நல்ல விஷயங்களைச் சந்தோஷமாக என்னிடம் அலமு பகிர்ந்துகொண்டார். ரயிலின் டிராக் மாறுவது போல், அவரது புருவ மத்தியில் ஒரு பரவசம் தோன்றியது. அதைத் தொடர்ந்து பல விஷயங்களைப் பேசினோம்.
ஏன் காலையில் எழுந்திருக்கணும்?
“அப்பா, அம்மா சொல்வது இருக்கட்டும். நீங்கள் காலையில எழுந்து என்ன செய்யப் போறீங்க? எதுக்கு எழுந்துக்கணும்? இதைப் பற்றி எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா?” என்று அலமுவிடம் கேட்டேன்.
என்னுடைய கேள்விகளுக்கு அவரிடம் ஒரு பெரிய பட்டியலே பதிலாக இருந்தது. ஆனால், காலையில் எழுந்துகொள்வதை அதுவரை அவருடைய தாய், தந்தையரின் விருப்பமாகவே அலமு பார்த்துவந்ததால், அதற்கு அவரால் முக்கியத்துவம் தர முடியவில்லை. இப்போது அதை அவருடைய விருப்பமாக நினைக்கத் தொடங்கினார். அவரின் உடல் கடிகாரமே அவரை எழுப்பியது.
சில மாதங்களுக்குப் பிறகு அலமுவிடமிருந்து அழைப்பு வந்தது.
“நான் ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோ செய்கிறேன். நீங்க நிச்சயம் வந்து பார்க்கணும்” என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அலமுவின் இந்த மாற்றத்தை அவரது தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்!
கட்டுரையாளர், மனநல ஆலோசகர்
தொடர்புக்கு: shobana.jayaraman@gmail.com
தொகுப்பு: பைரவி