பெண் இன்று

பக்கத்து வீடு: 86 வயது ட்ரயத்லான் மடோனா!

எஸ். சுஜாதா

86 வயது சிஸ்டர் மடோனா படரை ‘இரும்புப் பெண்’ என்று அழைப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 52 வயதில் முதல் ட்ரயத்லான் போட்டியை நிறைவுசெய்தார்! 86 வயதுக்குள் 340 ட்ரயத்லான் போட்டிகளில் பங்கேற்று முடித்திருக்கிறார்! இதில் 46 அயர்ன்மேன் ட்ரயத்லான் போட்டிகளும் அடங்கும்!

அமெரிக்காவின் மிசோரியில் பிறந்த மடோனா குழந்தையிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தார். ஆனால் ஓடுவதில் மட்டும் அவருக்கு விருப்பம் இல்லை. தேசிய அளவில் குதிரை ஏற்றங்களில் சாம்பியன் பட்டங்களை வாங்கினார். தான் விரும்பியபடி 14 வயதில் கன்னியாஸ்திரீயாக முடிவெடுத்தார் மடோனா. 23 வயதில் தன் படிப்பை முடித்து, சிஸ்டர் மடோனாவாக மாறினார். அவருக்குத் திடீரென்று ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் அதிகமானது. கன்னியாஸ்திரீக்கு ஏன் இந்த எண்ணம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.

திருப்புமுனை

25 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னியாஸ்திரிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்ந்தன. கூடுதல் சுதந்திரம் கிடைத்தது. ஆழ் மனத்தில் இருந்த எண்ணம் மேலே வந்தது. இனிமேலும் தன் விருப்பத்தை மனத்துக்குள்ளேயே அடைத்து வைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார் மடோனா. சற்றுத் தயக்கத்துடனே ஃபாதர் ஜானிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையாத ஜான், ஓடுவது உடலுக்கும் நல்லது மனத்துக்கும் நல்லது என்று ஊக்கப்படுத்தினார்.

ஓட்டப் பந்தயத்துக்கான பயிற்சிகளை உற்சாகமாக ஆரம்பித்தபோது 48 வயதை அடைந்திருந்தார் மடோனா. ஓட்டம் மட்டுமின்றி, நீச்சல், சைக்கிள் என்று மூன்றும் சேர்ந்த ட்ரயத்தலான் பயிற்சிகளை மேற்கொண்டார். போட்டிகளிலும் கலந்துகொண்டார். 52வது வயதில் ட்ரயத்லான் போட்டியை முதல் முறை நிறைவு செய்தார்.

பிரபலமாக ஆரம்பித்தார் மடோனா. அவருடைய வயதும் ஆர்வமும் பார்க்கும் அனைவரையும் உத்வேகம் கொள்ள

வைத்தன. விளையாட்டு மூலம் கிடைக்கும் வருமானத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கிவந்தார். அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுவதற்காகவே பல போட்டிகளிலும் பங்கேற்றுவந்தார்.

மடோனாவின் ஆர்வம் இத்துடன் நின்றுவிடவில்லை. அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற தேடல் அவரைத் தூங்க விடாமல் செய்தது. அயர்ன்மேன் போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்தார். 55 வயதில் முதல் முறையாக அயர்ன்மேன் போட்டியில் கலந்துகொண்டார். தொடர்ச்சியான பயிற்சிகள், போட்டிகள் என்று காலம் ஓடியது.

தொடரும் சாதனைகள்!

2005ம் ஆண்டு. 76 வயது மடோனா அயர்ன்மேன் ட்ரயத்லான் போட்டியை நிறைவு செய்ததன் மூலம், இந்தச் சாதனையைப் படைத்த ‘முதிய பெண்’ என்ற சிறப்பைப் பெற்றார். ‘அயர்ன் நன்’ என்று எல்லோரும் அன்புடன் அழைக்க ஆரம்பித்தனர். அதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டிலும் தன்னுடைய சாதனையைத் தானே முறியடித்துவருகிறார் மடோனா.

2012ம் ஆண்டு மடோனாவுக்கு மிக முக்கியமானது. 2.6 மைல் தூர நீச்சல், 112 மைல் தூர சைக்கிள், 26.2 மைல் தூர ஓட்டம் என்று 17 மணி நேரங்களில் அயர்ன்மேன் சவாலை நிறைவு செய்தார்! மிக வயதானவர் படைத்த சாதனை என்ற சிறப்பைப் பெற்றார். இவருக்கு முன்பு 81 வயது லேவ் ஹோலண்டர் இந்தச் சாதனையைச் செய்திருந்தார். தற்போது ஆண், பெண் இருவரிலும் மடோனாவே சாதனையாளராக இருக்கிறார்.

86 வயது. இதுவரை 340 ட்ரயத்லான் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். இதில் 46 அயர்ன்மேன் போட்டிகளும் அடங்கும். 2 ஆண்டுகளுக்கு முன்பு தி க்ரேஸ் டு ரேஸ் (The Grace to Race) என்று ஒரு புத்தகமும் இவரைப் பற்றி வெளிவந்திருக்கிறது.

SCROLL FOR NEXT