பெண் இன்று

ஒரு பிரபலம் ஒரு பார்வை - சீதைகளும் பாஞ்சாலிகளும் இப்படித்தான் இருந்தார்களா?

வாஸந்தி

நான் புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவள். ராமாயணமும் மகாபாரதமும் அன்றாட வாழ்வோடு ஒன்றியதுபோல எங்களுக்குப் பரிச்சயமானவையாக இருக்கும். வீட்டில் கதை சொல்லப் பாட்டி இருப்பாள். அவள் சொல்லும் கதைகளைக் கேட்க நாங்கள் இரவுச் சாப்பாட்டுக்காகக் காத்திருப்போம் .

நிலா இருந்தாலும் இல்லாவிட்டாலும் முற்றத்தில் நாங்கள் வட்டமாக அமர, மையத்தில் பாட்டி கற்சட்டியை வைத்துக்கொண்டு, அதிலிருந்து குழம்பு சாதத்தை உருண்டையாக உருட்டி எங்களது பிஞ்சுக் கைகளில் வைத்தபடி ‘அப்புறம் என்ன ஆச்சு தெரியுமோ’ என்று நீட்டி முழக்கிச் சொல்லும்போது நாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதை மறந்து கண்கள் விரிய எதிர்பார்ப்பின் விளிம்பில் நிற்போம்.

சிறு பெண்ணாக இருந்தபோதே சீதை, குந்தி, திரௌபதி ஆகிய பாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன. நான் பெண் என்ற காரணம் மட்டுமல்ல. என் பாட்டி அவர்களின் கதையை , அவர்கள் அனுபவித்த சோகத்தை, அவர்களது ஆன்மிக பலத்தைத் தானே அனுபவிப்பதுபோலச் சொன்னதன் தாக்கம் அது என்று இப்போது புரிகிறது. சீதையின் கதையை அவள் பின்னும்போது அவளே சீதையாக மாறுவாள்.

அப்பாவியாக நின்ற தருணத்தில் அவளை ராவணன் தூக்கிக்கொண்டு செல்வதை நாங்கள் பார்ப்போம். அசோக வனத்தில் அரக்கிகளின் நடுவில் அவள் அமர்ந்திருப்பதைக் கண்டு பரிதாபப்படுவோம். பயந்தாங்குளி என்று நாங்கள் நினைத்த சமயத்தில் அவள் ஒரு புல்லை உதறுவதுபோல ராவணனை நிராகரிப்பாள். உன் உதவியோடு நான் இங்கிருந்து வெளியேறினால் ராமனுக்கு இழுக்கு என்பாள் அனுமனிடம் நாகரிகமாக. அந்த ராமன் கடைசியில் என்ன செய்தான்? ‘நீ நல்லவளா கெட்டவளா’ என்பதை நிரூபிக்க நெருப்பில் குதி என்றபோது நாங்கள் எல்லோரும் ஐயையோ என்று அலறுவோம். அது போதாது என்று ராமன் கடைசியில் அவளைக் காட்டுக்கு அனுப்பும்போது நாங்கள் விக்கித்துப்போய் உட்காருவோம், அநீதி அது என்று சொல்லத் தெரியாமல்.

என் பாட்டி சீதையின் கதையின் கடைசிப் பகுதிக்கு வருவாள். ராமன் தன்னை நம்பவில்லை என்கிற துக்கத்தை அவளால் பொறுக்க முடியவில்லை. பூமாதேவியிடம் சரணடைகிறாள் ‘என்னைப் பெற்ற தாயே என்னை அழைத்துக்கொள்.’ பாட்டியின் சொற்களில் பூமி விரிவதும் சீதை உள்ளிறங்குவதும் பிரத்தியட்சமாக இருக்கும். பாட்டியின் கண்களில் நீர் இருக்கும். குரல் தழுதழுக்கும். நாங்கள் கேவிக் கேவி அழுவோம் எங்களுள் பெண்ணிய வித்தைப் பாட்டி விதைத்துவிட்டதை உணராமல்.

பாட்டி ராமாயணத்தை சீதையின் கதையாகத்தான் பாவித்தாள். நாங்களும் அப்படித்தான் நினைக்க வேண்டும் என்று அவள் நினைத்திருக்க வேண்டும். ராமனை தெய்வமாக, கதாநாயகப் புருஷனாகக் கொண்டாடிய மரபில் வளர்ந்தவள், நான்கு சுவர்களுக்கு உள்ளே வளர்ந்தவள், சீதையின் துயரத்தை உள்வாங்கிக்கொண்டு அதை அநீதி என்றும் நாம் எல்லோரும் சீதையின் புதல்விகள் என்றும் எங்களுக்குப் புரிய வைத்தது என்னை இன்றும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

பாஞ்சாலியின் ஆளுமையை அப்படித்தான் ஒரு பழங்குடிப் பெண் எனக்கு உணர்த்தினாள். பல வருஷங்களுக்கு முன் நான் டெல்லியில் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குக்கிராமத்திலிருந்து பன்னிரண்டு வயதுச் சிறுமி பாஞ்சாலி சபத நாடகத்தில் நடித்தாள். அவள் மட்டும்தான் மேடையில். மகா ஒல்லி. உடம்பைச் சுற்றி ஓர் எளிய நூல் புடவை.சிறிய இடையைச் சுற்றி ஒரு வெள்ளி ஒட்டியாணம். காலில் தண்டைகள். எல்லாப் பாத்திரங்களையும் அவளே நடித்தாள். விசித்திரமான இந்தி உச்சரிப்பில் பேசினாள். மொழிக்கு அப்பாற்பட்டதாக இருந்தது அவளது நடிப்பு. துரியோதனனாக, துச்சாதனனாக அட்டகாசமாய் ஜல் ஜல் என்ற ஒலியுடன் அவள் மேடையில் மேலும் கீழும் நடப்பதைப் பார்த்து நான் அசந்து போனேன். அவளே சகுனி. அவளே பாண்டவர்கள். மனைவி உள்பட சகலத்தையும் தோற்றுத் தலையைத் தொங்கப் போட்டு அமர்ந்த சகோதரர்கள்.

பாஞ்சாலியின் முடியைப் பிடித்து இழுத்து வருகிறான் துச்சாதனன். நிலைமையின் தீவிரத்தை அந்தச் சிறுமியால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நினைத்தேன். பாஞ்சாலி வருகிறாள். முகத்தில் அதிர்ச்சி. செத்துப்போனவர்களைப் போல இருக்கும் கணவன்மார்களைப் பார்க்கிறாள். அவள் நடந்து வரும்போது திரௌபதியின் முகத்தில் இருப்பது வெறும் அதிர்ச்சி இல்லை .

அதில் இருந்தது இளக்காரம், வெறுப்பு. ஏ கோழைகளா, புத்திகெட்ட நீசர்களா என்கிற பார்வை. அந்த இளம் பால் வடியும் முகத்தில் இருந்த செருக்கை எந்த மகாபாரதப் பிரதியும் சொன்னதில்லை. தொலைக்காட்சித் தொடரில் கதறி அழும் திரௌபதி இல்லை இவள். ‘உருவுடா என் சேலையை!’ என்று இவள் சீறினாள். ‘என்னை நீ அவமானப்படுத்த முடியாது!’ இவள்தான் நிஜப் பாஞ்சாலி, வியாசரின் திரௌபதி இல்லை என்று நான் சிலிர்த்துப்போனேன். அப்படித்தான் சமீபத்தில் நான் பார்த்த யசோதரா என்ற நாட்டிய நாடகம் முற்றிலும் புதிய பார்வையைக் காட்டிற்று.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், தலைநகரின் பல மொழி பேசும் ஆண்களும் பெண்களும் நெஞ்சைச் சிலிர்க்கவைத்த ஒரு பயணத்தில் பங்குபெற்றிருந்தார்கள். உலகத்தின் பார்வையில் பதிவு பெற்றிராத ஒரு பெண்ணின் கதையை, அவள் வெளிப்படுத்தாத ஏக்கத்தை , வலியை, உணரவைத்த ஞானப் பயணம். யசோதராவின் சோகம். கபிலவஸ்துவின் சாக்கிய இளவரசன் கௌதம சித்தார்த்தனின் மனைவி. ஒரு நள்ளிரவில் கள்ளனைப் போல அவள் அறியாமல் அரண்மனையிலிருந்து அவன் வெளியேறினான். கௌதமன், இளகிய நெஞ்சுடையவன். வயோதிகத்தை, நோயை, ஏழ்மையைக் கண்டு சகித்துக்கொள்ள முடியாதவன், நிஜ வாழ்வைக் கண்டு அரண்டு சத்தியத்தைத் தேடி ஓடினான். தனது செய்கை யசோதராவையும் மகன் ராஹுலையும் எப்படிப் பாதிக்கும் என்பதை யோசிக்காமல். அது கோழைத்தனத்தாலா அல்லது மனைவி என்பவள் முக்கியமல்ல என்ற மரபு சார்ந்த நினைப்பினாலா? போதி மரத்தின் அடியில் பெற்ற ஒளியில் சித்தார்த்தன் என்கிற இளைஞன் மறைந்து கௌதம புத்தனானான்.

நாட்டிய நாடகத்தின் மூலம் வெளிப்பட்ட யசோதராவின் சோகம் அரங்கத்தில் இருப்பவர்களின் மனத்தில் கதகதப்பை ஏற்படுத்திற்று, மனதில் நிலைத்தது. கௌதம புத்தனின் நினைவு இல்லை. யசோதராவே அரங்கத்தை வியாபித்தாள். 2500 ஆண்டு வரலாற்று ஏடுகளில் காணாமல் போயிருந்த யசோதராவை சென்ற நூற்றாண்டுக் கவிஞர் மைதிலி சரண் குப்த் (1885- 1965) ‘யசோதரா’ என்ற அற்புதக் கவிதையின் மூலம் நினைவுபடுத்தினார். ‘சகி, வே முஜுஸே கஹக்கர் ஜாதே’ என்ற கவிதையின் வரிகளைக் கேட்கும்போதெல்லாம் நான் நெகிழ்ந்துபோகிறேன். என் கண்களில் நீரை வரவழைக்கும் வரி அது. ‘சகி, அவர் என்னிடம் சொல்லிவிட்டு ஏன் செல்லவில்லை? / என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கக் கூடாதா?’

பல அடுக்கு அர்த்தங்கள் கொண்ட வரி இது. ஒரு கவிஞரின் பார்வையில் யசோதரா புத்தனைவிட ஞானியாகப்படுகிறாள். சொல்லாமல் கோழையைப் போல ஏன் ஓடினார் ? சொல்லியிருந்தால் நானே சந்தோஷமாக அவரை அனுப்பியிருப்பேனே? என்னை அவர் புரிந்துகொள்ளவே இல்லை என்பது எத்தனை பெரிய சோகம்?

கௌதம புத்தர் பின்னாட்களில் யசோதராவிடம் மன்னிப்புக் கேட்பதாகக் கவி சொல்கிறார். கேட்டாரா? யாருக்கும் தெரியாது. அது ஆண் கவியின் எதிர்பார்ப்பு. ஒரு பெண் எழுதியிருந்தால் தரிசனம் வேறாக இருந்திருக்கும்.

ஆரம்ப வடிவத்தில் சீதை, குந்தி, மண்டோதரி, காந்தாரி எல்லோரும் பெண்மையின் தூய வடிவங்களாக, அதாவது ஆணுக்கு அடங்கிய உதாரணங்களாக இருந்தார்களா என்பது விவாதத்துக்குரியது. வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் சொல்வது போல, ஒவ்வொரு தலைமுறையும் அந்தந்தக் காலத்துக்கு ஏற்ப வரலாற்றிலிருந்து, தொன்மங்களிலிருந்து தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு அர்த்தம் கற்பிக்கிறது. காலனிய ஆதிக்கத்தின்போது இத்தகைய புனைவு அவசியமாகக் கருதப்பட்டது. அப்போதுதான் காப்பியத் தலைவிகள் தெய்வீகத்தன்மை பெற்றார்கள். ஆண் வகுத்த கோட்டைத் தாண்டாதவர்களாக, பெண்மைக்கு எடுத்துக்காட்டாக ஆக்கப்பட்டார்கள்.

அந்தப் பழங்குடிப் பெண்ணை அத்தகைய சிந்தனைச் சுமைகள் அழுத்தவில்லை. அதனாலேயே அவளால் பாஞ்சாலியின் சீற்றத்தைத் தன்னிச்சையாக உணர முடிந்தது. எனது பாட்டி தனது எல்லைக்குள் இருந்தபடி குழந்தைகளுக்கெதிரில் தான் ஆத்மார்த்தமாக உணர்ந்த வேதனையைக் கூச்சமில்லாமல் வெளிப்படுத்தினாள். காலனிய ஆதிக்க மனநிலையிலிருந்து வெளிவர முடியாத மைதிலி சரண் குப்த், யசோதராவின் வலியை உணர்ந்தாலும் அவளைப் புனிதவதியாக்கினார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com

SCROLL FOR NEXT